உயிர்ச்சூழல் காக்கும் ஈரநிலங்கள்!

சில வேளைகளில் சில பெயர்கள், அவற்றின் பிரயோகம் நமக்கு வினோதமாகத் தென்படும். அதனாலேயே அவற்றின் மீதான கவனம் குறைவாகப் படியும்.

ஒருகட்டத்தில் அவற்றின் முக்கியத்துவம் என்னென்ன என்று தெரியவரும்போது மனம் படபடக்கும். அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்று ‘ஈரநிலங்கள்’.

நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட பருவங்களிலோ மண்ணும் நீரும் ஒன்றாகக் கலந்து நிற்கும் இடங்களே ஈரநிலங்கள்.

உலகில் இருக்கும் உயிரினங்களில் சுமார் 40% இந்நிலங்களைச் சார்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், உலகம் முழுவதுமே சுமார் 5 – 6% ஈரநிலங்களே உள்ளன. நம் நாட்டைப் பொறுத்தவரை இந்தச் சதவிகிதம் 4.6 ஆக உள்ளது.

1971இல் ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் ஈரநிலங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, உலகம் முழுக்கவிருக்கும் ஈரநிலங்களைப் பாதுகாக்கும் வகையில் ‘ராம்சர் தலங்கள்’ அறிவிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கம் வரை இந்தியாவில் 96 இடங்கள் ராம்சர் தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் உட்பட 20 இடங்களைக் கொண்டுள்ளது தமிழ்நாடு.

பொதுவாக ஈரநிலங்கள் என்பது நன்னீர்நிலைகள் கடலோடு கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் இருக்கின்றன.

உள்நாட்டுப் பகுதிகளில் ஏரிகள், குளங்கள் மற்றும் நதி உள்ளிட்ட நீரோடும் பகுதிகளுக்கு அருகில் இருக்கிற நிலங்கள் அப்படிப்பட்ட இயல்பைக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலங்களில் குறிப்பிட்ட தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிர் வாழ்கின்றன.

இவற்றின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகம். மிக முக்கியமாக, பறவைகள் வலசை வரும் பகுதிகளாகவும் இவை விளங்குகின்றன.

நன்னீர் நிலைகள் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஈரநிலங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் நீர் படிந்து சேற்றுத்தன்மையுடன் இருக்கிற இந்த நிலங்கள் அதிகப்படியான மழைநீரை உறிஞ்சி, நீரோட்டத்தை ஒழுங்குபடுத்தி, புயல் வெள்ள அபாயங்களைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளால் அங்கிருந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்தது ஒரு உதாரணம்.

காலநிலை மாற்றத்தால் ஈரநிலங்களின் முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் பெருகும் மக்கள் தொகை, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், திட்டமிடப்படாத வளர்ச்சி, புதர்க் காடுகளை அழித்து விவசாயம் மேற்கொள்ளுதல் போன்றவை இந்நிலங்களை அழிவுக்குட்படுத்தி வருகின்றன.

பொ.ஆ. 1700க்கு முன்னர் இருந்த ஈரநிலங்களில் தற்போது 90% அழிந்துவிட்டன என்ற தகவலே இதனை நமக்குணர்த்தும்.

ஆதலால், ஈரநிலங்களைப் பாதுகாப்பதென்பது காலத்தின் கட்டாயம். அதனை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ‘உலக ஈரநில தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

ராம்சர் மாநாடு நடைபெற்றதை நினைவுகூரும் வகையில், பிப்ரவரி 2 அன்று இது பின்பற்றப்படுகிறது.

‘ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு: கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக ஈரநில தினக் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் சில வழக்கங்கள் ஈரநிலங்களைக் காப்பதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

உலகம் முழுக்கவிருக்கும் பழங்குடிகள் ஈரநிலங்களைக் காப்பதைத் தமது கடமைகளில் ஒன்றாகக் கருதிச் செயல்படுகின்றனர்.

ஆதலால், அந்நிலங்களின் பாதுகாப்பில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவது ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் என உலகம் முழுக்கத் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

ஈரநிலப் பாதுகாப்பு, மேலாண்மையில் பாரம்பரியச் செயல்பாடுகள் என்று உற்றுநோக்கினால் சிலவற்றைக் குறிப்பிட முடியும். அவற்றில் தலையாயது, பாரம்பரிய முறையிலான வேளாண் செயல்முறை.

பயிர்ச் சுழற்சி முறை, இயற்கை முறையிலான வேளாண்மை ஆகியன ஈரநிலச் சூழலமைப்பைக் காப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

நெல் மற்றும் குளிர்காலப் பயிர்கள் சாகுபடி, இயற்கை முறையிலான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள், நீர்வழி மாற்று நுட்பங்கள், வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

களைகள் மேலாண்மை செயல்முறையும் ஈரநிலப் பாதுகாப்பில் முதன்மையானது.

ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் மட்கிய உரங்களாகப் பயன்படுத்தப்படுவதும், சில களைச்செடிகள் வேலிகளாகச் செயல்படுவதும் இதில் அடங்கும்.

சில களைச்செடிகள் கால்நடை உணவாகவும் மனிதர்க்கு மருந்தாகவும் பயன்படுகின்றன.

பாரம்பரிய மீன்பிடிச் செயல்முறைகள் இந்த வரிசையில் மூன்றாவது இடம் வகிக்கின்றன. சேற்றுநில மீன்பிடி முறைகள் மீன்களின் பெருக்கத்திற்கும் மீன்பிடித் தடைக்காலத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன.

நீர் சுத்திகரிப்பிலும் பாதுகாப்பிலும் சில செடிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை இயற்கை பூச்சிக்கொல்லிகளாகவும் பயன் தருகின்றன. அவற்றை அறிந்து, அவை வளர ஏதுவான சூழலை உருவாக்குவதும் மிகுந்த பயனளிக்கும்.

இவை தவிர்த்துச் சில வட்டாரங்களில் உள்ள மத, கலாச்சார நடைமுறைகள் ஈரநிலப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைத் தொடர்வது நம் சூழலமைப்பையும் காக்கவல்லது.

அலையாத்திக் காடுகளின் பங்களிப்பு புயல், வெள்ளப் பேரிடரின்போது மிக முக்கியமானது.

வெள்ள நீரின் அளவைக் குறைத்து, மக்கள் வாழிடங்களில் பாதிப்பு நேராமல் பாதுகாக்க வல்லது.

அவற்றைப் பயன்படுத்தி நீர்த்தேக்கங்களின் சேகரிப்பு அளவை வரையறுப்பது, பாரம்பரிய முறையில் அறுவடைக் கட்டமைப்புகளை வடிவமைப்பது போன்றவற்றை மேலும் மெருகேற்றிக்கொள்ள முடியும்.

மேற்சொன்ன அனைத்துமே கலாச்சார மதிப்பீடுகள், சமூகப் பங்களிப்பு ஆகியவற்றோடு தற்போதைய ஈரநிலப் பாதுகாப்பு செயல்முறைகளை ஒருங்கிணைக்கவல்லது.

இதனை முன்னிறுத்தும் வகையிலேயே, இந்த ஆண்டு ஈரநிலப் பாதுகாப்பு தினம் முன்னெடுக்கப்படுகிறது.

உலகின் ஏதோ ஓரிடத்தில் சமநிலை பாதிக்கப்படுகிறபோது, இன்னொரு மூலையில் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்பதே இன்றைய நிலைமை.

எதிர்காலத்தில் அது மிகமோசமான கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகச் சமநிலையை நோக்கிய நகர்வை உலகம் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. அதுவே நமது உயிர்ச்சூழலைக் காக்கவல்லது.

ஓராண்டில் சூழல் சார்ந்து கடைப்பிடிக்கப்படுகிற தினங்கள் அனைத்துமே அதனை வலியுறுத்துகின்றன. அதனை வழிமொழிகிறது ‘உலக ஈரநிலங்கள் தினம்’.

  • ரோகிணி

நன்றி: https://neptjournal.com 

 

You might also like