பாரதிராஜா மறைந்தும் மறையாத சில நினைவுகள்!

கொஞ்சம் சூடு; கொஞ்சம் கனிவு – 20

சிலரை நேரில் சந்திக்கும்போது அந்த முதல் சந்திப்பே தொடர்ந்து நீடிக்கத்தக்க நெகிழ்வுடனும் வெளிப்படையாக பரிமாறத்தக்க அன்புடனும் மாறியிருக்கும்.

சிலரை எத்தனை முறை சந்தித்தாலும் வெளிப்படையாக எதுவும் பேச இயலாத இறுக்கம் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும். 

இதில், முதல் ரகத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் பாரதிராஜா.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதில் நதிமூலம் என்கின்ற பிரபலமான தொடரை ஆரம்பித்திருந்தேன்.

கலைஞர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பலருடைய சொந்த ஊர்களுக்குச் சென்று உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து விட்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட பிரபலத்தை சந்திப்பதோடு ஒவ்வொரு கட்டுரையும் முடிவடையும்.

அந்த வரிசையில் தான் இயக்குநர் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனி, அல்லி நகரத்திற்கு சென்றிருந்தேன்.

ஓடு வேய்ந்த எளிமையான வீடு. அந்த வீட்டில் தான் பாரதிராஜாவின் தாயாரான மீனாட்சி என்கிற கருத்தம்மாவை அந்த முதிய வயதில் சந்தித்துப் பேசினேன்.

பால்பாண்டியாக அழைக்கப்பட்ட பாரதிராஜாவைப் பற்றி பாசமான அம்மாவாகப் பெருமை பொங்க பேசிக்கொண்டிருந்தார்.

எந்த சகோதரியின் பெயரை தன்னுடைய முன்பாதியாக இணைத்துக் கொண்டாரோ அந்த சகோதரியான பாரதியைச் சந்தித்தபோது பாரதிராஜாவின் பால்ய கால நினைவுகள் பற்றி மிகவும் நெருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

அதே மாதிரிதான் அவரது சகோதரர் ஜெயராஜும். பாரதிராஜாவின் நண்பர்கள் சிலரையும் சந்தித்து விட்டு, சென்னைக்குத் திரும்பி பாரதிராஜாவை ஜெமினி பார்ஸ்ன் காம்ளக்சில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கப் போயிருந்தேன்.

மிகவும் பிஸியாக இருந்த அவரிடம், அவருடைய சொந்த ஊருக்குப் போய்த் திரும்பி இருக்கிற தகவலை தெரிவிக்கச் சொன்னேன். அந்தத் தகவல் அவரிடம் சொல்லப்பட்டது. உடனே உள்ளே அழைத்தார்.

உள்ளே சென்றதும் கை குலுக்கி வரவேற்றவர், என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி “நீ எந்த ஊருய்யா?” 

நானும் மதுரைதான் என்று சொன்னதும் கூடுதல் பிரகாசமானது அவருடைய முகம். மதுரையில் எந்தப் பகுதி என்ற விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு, தேனி அல்லிநகரத்திற்கு நான் சென்று வந்தது பற்றிக் கேட்டார்.

“என்னையா… உரிமையா உன்ன ஒருமைல கூப்டலாம்ல…”

“நீ எங்க வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்க… அங்க போறதுக்கு முன்னாடி எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருக்கலாம்ல” என்றவர், தனது தாயாரைப் பற்றியும் வீட்டிலிருந்தவர்கள் தன்னை சிறுவயதிலிருந்து எப்படி எல்லாம் வளர்த்தார்கள் என்பது பற்றியும் உணர்வுபூர்வமாகச் சொல்லிக்கொண்டு போனார்.

தன்னுடைய சகோதரி பாரதி, சகோதரர் ஜெயராஜைப் பற்றியும் அன்பு ததும்ப பேசிக்கொண்டே போனவரிடம் கடைசியாக அவருடைய சில அனுபவங்கள் குறித்து கேட்டபோது, மதுரை வட்டார வழக்குடன் அவர் விவரித்த அனுபவங்களும், விவரித்தபோதே மாறிக்கொண்டிருந்த குரலும் அதற்கேற்ற முகபாவங்களும் மிகவும் ரசனைக்குரியதாக இருந்தன.

முதல் சந்திப்பே நெகிழ்வானதாக மாறி எங்கள் இருவரையும் நம்பிக்கைக்குரிய வகையில் இணைத்திருந்தது.

ஊரிலிருந்த அவரது சொந்த வீட்டில் நான் எடுத்த புகைப்படங்களை, அதிலும் குறிப்பாக அவரது தாயாரின் க்ளோசப்பான புகைப்படங்களை அவரிடம் கொடுத்தபோது, சிறு குழந்தையின் பரவசத்தோடு அவற்றை வாங்கிக் கொண்டார்.

அடுத்த வாரத்திய குமுதம் இதழில் அந்தக் கட்டுரை வெளிவந்தபோது, மறுபடியும் அலுவகத்திற்கு வரவழைத்து, பூரித்த முகத்தோடு பாராட்டினார் பாரதிராஜா.

அதன்பிறகு, சில பொது விழாக்களில் சந்திக்கிறபோது இரண்டொரு வார்த்தைகள் பேசிக்கொள்வோம்.

குமுதம் அலுவலகத்திலேயே ‘தீராநதி’ என்கின்ற இலக்கிய இதழ் துவக்கப்பட்டு, அதன் பொறுப்பாசிரியராக நான் பணியாற்றியபோது பலரை மிக விரிவான நேர்காணல்கள் எடுத்துவந்தேன்.

தொ.பரமசிவன் துவங்கி கோவை ஞானி, கமல்ஹாசன் என்று பலருடைய நேர்காணல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

அதனுடைய தொடர்ச்சியாக இயக்குநர் பாரதிராஜாவின் விரிவான நேர்காணல் எடுக்க வேண்டும் என்று கேட்டபோது, சரியென்று ஒத்துக்கொண்டார். நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு வரச்சொன்னார்.

ரம்மியமான சூழலில் இருந்தது பாரதிராஜாவின் வீடு. முன்னாள் சிறு டேபிள். அதில் சில ‘பான’ வகைகள், கொஞ்சம் ஸ்நாக்ஸ்.

இந்தப் பின்னணியில் அவரிடம் எடுக்கப்பட்ட சுமார் நான்கு மணி நேரம் வரை நீண்ட நேர்காணல், தொழில்நுட்பப் பிரச்சனையினால் நான் கொண்டுபோயிருந்த டேப் ரெக்கார்டரில் பதிவாகவில்லை.

நேர்காணல் பதிவாகவில்லை என்பதை உணர்ந்ததும் மனதில் பதற்றம் கூடிப்போனது.

அந்த இரவு நேரத்திலும் மறுபடியும் பாரதிராஜாவைத் தொடர்புகொண்டு நடந்ததைச் சொன்னதும் கடுமையான வசவுகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சிறிதுநேர வசவுகளுக்குப் பிறகு அமைதியாக, “மீண்டும் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து மறுபடியும் நேர்காணல் எடுக்க வேண்டும்” என்று சொன்னபோது, அதற்கும் செமையான கொந்தளிப்பு.

சற்றுநேரம் கழித்து, “சரி என்னத்த செய்யுறது. நாளைக்குக் காலையில ஒழுங்கான டேப் ரிகார்டைரை எடுத்துக்கொண்டு வந்து சேரு. இன்னைக்கு கேட்ட கேள்வியை நாளைக்குக் கேட்கக் கூடாது” – என்று சொன்னபோது அவருடைய கோவம் தணிந்திருந்தது.

அவர் சொன்னபடியே மறுநாள் அவருடைய நீலாங்கரை வீட்டுக்கு சென்றபோது, முதலில் கொஞ்சம் திட்டு திட்டினாலும் கொஞ்ச நேரம் என் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர்,

“போன்லயே நேத்து கத்திட்டேன். ஆனா, இப்ப உன் மூஞ்சியப் பார்த்தா பாவமா இருக்குய்யா… இதுக்குமேல் எனக்குக் கத்த தோணல. சரி நான் கத்துனத எதையும் மனசுல வச்சுக்காத…” என்றார்.

“சரிய்யா?… டேப் ரிகார்டரை சரியா ஆன் பண்ணி, முன்னாடி  வச்சுடு…” 

மறுபடியும் பேச ஆரம்பித்தோம். மீண்டும் அந்த நேர்காணல் 4 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.

ஒருவழியாக நேர்காணல் முடிந்ததும் அங்கயே சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டோம்.

சாப்பிடுகிறபோது, “சரியான ஆளுய்யா நீ… சூட்டிங்கில் எத்தனையோ பேரிடம், சீனியர் நடிகர்களிடம் கூட திருப்தி இல்லாம எத்தனையோ முறை ரீடேக் எடுத்திருக்கேன். அப்படிப்பட்ட என்கிட்டயே வந்து ஒரு பேட்டியையே ரீடேக்கா எடுத்திட்டேயேயா” என்று சொன்னபடி ஒரு சிரிப்பு சிரித்தார் பாரதிராஜா.

பிறகு, ‘தீராநதி’ இதழில் கவர் ஸ்டோரியாக வெளிவந்த  இதழை எடுத்துக்கொண்டு அவரது அலுவலகத்திற்கு போனபோது ‘செம’ ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தார்.

பாரதிராஜா உட்பட, பல்வேறு இலக்கியம், அரசியல், திரைப்படம் உள்ளிட்ட ஆளுமை மிக்க 30 பேர்களிடம் நான் எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு ‘ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள்’ என்கிற தலைப்பில் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பக வெளியீடாக, ஓவியர் ஆதிமூலத்தின் அழகான லே-அவுட்டில் வெளிவந்து அதற்கான வெளியீட்டு விழாவும் நடந்தது.

அந்த நூலுக்கு அப்போது திருப்பூர் தமிழ்ச் சங்கம் – பி.ராமமூர்த்தி அறக்கட்டளை இணைந்து வழங்கிய விருதும் கிடைத்தது.

அந்த நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த பாரதிராஜா, போனில் தொடர்புகொண்டு அந்த நூலின் இரண்டு பிரதிகளை எடுத்துவரச் சொன்னார்.

மறுபடியும் அதே நீலாங்கரை வீடு. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் பாரதிராஜா. எதிரே இருந்த டீ-பாயில் அவர் மிகவும் விரும்பும் பானம் நிரப்பப்பட்டிருந்தது. பக்கத்தில் ஸ்நாக்ஸ் வகைகளும் இருந்தன.

நூல் பிரதிகளை வாங்கிக் கொண்டு, அது பற்றி சிக்கனமாகப் பாராட்டி விட்டு, “கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா பேசலாமாய்யா…” என்று சொன்னபடி, அவருடைய பல திரைப்பட அனுபவங்களை மிகவும் ரசித்தவாரே அசைபோடுகிற மாதிரி சொல்லிக்கொண்டு போனார்.

அப்போது தனியார் தொலைக்காட்சியில் இயக்குநராக சில தொடர்களை இயக்கி வந்த அனுபவத்தை சொல்லிவிட்டு, அப்போது உண்மையாகவே நடந்த நிகழ்வை அவரிடம் கதையாகச் சொல்ல நினைத்து,

“உங்க கிட்ட நான் ஒரு திரைப்படத்துக்கான கதையைச் சொல்லட்டுமா” என்று கேட்டபோது, சிரித்தார் பாரதிராஜா.

“எத்தனையோ பேரிடம் நான் கதை சொல்லியிருக்கேன். பல இயக்குநர்கள் எப்படிக் கதை சொல்வாங்க என்பதையும் கேட்டிருக்கேன்.

இப்ப நீ சொல்லப் போறதையும் கேட்கிறேன். ஆனால், எனக்குப் பிடிக்கலன்னா 5 அல்லது 10 நிமிஷத்துல நான் கை காட்டிடுவேன். அதோட நீ நிறுத்திக்கனும். நா கை காட்டலன்னா நீ கண்டினியூ பன்னலாம். எண்ணய்யா…” என்றவர்,

“இப்ப என்ன… நான் ஸ்டார்ட் சொல்லனுமா… ஏ… என்னுடைய மூஞ்சியையே பார்த்துகிட்டு இருக்க… ஆரம்பி” என்று சொல்லிவிட்டு, உடம்பை தளர்வாக்கி பின்னால் நன்றாக சாய்ந்துகொண்டார்.

ஒரு சிறு பெண்ணின் உயிரிழப்பு தொடர்பான உண்மையாகவே நடந்த நிகழ்வை அதற்கான உணர்ச்சி வேகத்தோடு நான் சொல்லிக்கொண்டு போனபோது சுமார் ஒரு மணி நேரம் வரை ஆகிவிட்டது.

நான் சொல்லி முடிக்கிறவரை அவரே சொன்னமாதிரி கையை உயர்த்தித் தடுக்கவில்லை. அவ்வப்போது பானத்தை அருந்தியவாறே கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரது முகபாவத்தை வைத்து நான் விவரித்த கதைக்கான எதிர்வினையை என்னால் உணரமுடியவில்லை.

சிறிதுநேரம் அமைதியாக இருந்தவர், “நானே எதிர்பார்க்கல, கதையை, அதிலும் உண்மையாக நடந்ததை அதற்கான குரல் ஏற்ற இறக்கத்தோட நல்லா சொல்லியிருக்க… நீ சொல்றப்ப அத விசுவலா எனக்குள் நான் பார்த்துக்கிட்டிருந்தேன்.

இப்ப நீ சொன்னத அப்படியே ஷார்ட் பிலிமா எடுக்கலாம். இதே மாதிரி இன்னொரு கதையைச் சேர்த்தா சினிமாவாகவும் எடுக்கலாம். எப்படி எடுத்தாலும் அது நேஷனல் லெவல்ல கவனிக்கப்படும்.

ஃபாரின் படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறதவிட, நம்ம மண்ணுல இருந்து உருவி எடுத்த செடியைப் போல இருக்கிற இந்தக் கதையெல்லாம் படமானால் நல்லா இருக்கும்.

ஆனா, இப்ப என் வயசுல இத எடுக்க முடியாது” என்று சொன்னபடி கைகுலுக்கி வாழ்த்தியபோது வயதானாலும் கைகளின் இறுக்கம் குறையவில்லை.

பாரதிராஜாவுக்கும் எனக்கும் நன்கு தெரிந்த ஒரு அரசியல் பிரமுகருக்கு அப்போது கடும் நெருக்கடி.

காலை வேளையில் என்னை போனில் அழைத்து, வீட்டிற்கு வரச்சொல்லி இருந்தார். வீட்டிற்கு போனபோது, வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான கூட்டம்.

போனதும்  ”உள்ளே இயக்குநர் பாரதிராஜா பேசிக்கிட்டிருக்கார்” என்று சொன்னார்கள். நான் வந்த தகவலை உள்ளே தெரிவிக்கச் சொன்னேன். உடனே உள்ளே வரச்சொன்னார்.

உள்ளே போனபோது, அந்த அரசியல் பிரமுகருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார் பாரதிராஜா.

வழக்கம்போல, “வாய்யா…” என்றவர் “கொஞ்சம் பெர்சனலா பேசிக்கிட்டிருக்கோம்.” என்று சொன்னபோது குறுக்கிட்ட அந்த அரசியல் பிரமுகர், “மணாவும் இங்கே இருக்கட்டும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

அதைத்தொடர்ந்து ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

மதுரை மாவட்டத்திற்கே உரித்தான வட்டார மொழியில், அவ்வளவு நேர்த்தியாக எதிரில் இருந்த அரசியல் பிரமுகரை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார் பாரதிராஜா.

இடையே சில வார்த்தைகள் மட்டும் பேசினேன். அதற்கிடையே, கருப்பட்டிச் சாறு கலந்த இடியாப்பம் கொண்டுவரப்பட்டது. மூவரும் சாப்பிட்டோம். 

பிறகு, பாரதிராஜா உரிமையுடன் அந்த அரசியல் பிரமுகரின் தோளைத் தட்டிக்கொடுத்து விடை கொடுத்தபோது, அந்த அரசியல் பிரமுகர் என்னிடம், பாரதிராஜாவை வழியனுப்பி விட்டு வரச்சொன்னார்.

வெளியே இருந்த கூட்டத்தை விலக்கி, அவரை அழைத்துக் கொண்டு போய் அவர் காருக்குள் ஏறும் வரை உடனிருந்தேன்.

காருக்குள் ஏறிய பாரதிராஜா, டிரைவரை சிறிதுநேரம் காரை விட்டு இறங்கச் சொன்னார். என்னை காருக்குள் வரச்சொன்னார். 

“பரவாயில்லைய்யா… உள்ளே பேசிக்கொண்டிருந்தபோது, நீ வந்திருக்கிறதா சொன்னதும் அந்த அரசியல்வாதி என்ன சொன்னார் தெரியுமா?.

எந்த ஒரு ஆப்ளிகேஷனையும் எங்கிட்ட கொண்டு வராம, நட்புக்காக மட்டுமே நான் சந்திக்கிறவர்களில் இவரும் ஒருவர் என்று உன்னப்பத்தி சொன்னார்.

பவர் செண்டர்கள்கிட்ட நீ ஒட்டியே இருந்திருக்க. ஆனா, அவங்களப் பயன்படுத்திக்காம விலகியும் இருந்திருக்க. உன்னச் சந்திச்சு நானும் மனசுவிட்டுப் பேசனும்போல இருக்கு. இன்னொரு நாளைக்கு வீட்டுக்கு வாய்யா…” என்றார்.

அவர் கார் கிளம்பிவிட்டது.

அதன்பிறகு, அவரது நீலாங்கரை வீட்டில் ஐந்து முறைக்கு மேல் அவரே அழைத்து மிக விரிவாக மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.

எதோ, ரொம்பநாள் பழகிய நட்புணர்வுடன் அவரது வாழ்வில் பல பக்கங்களை சொல்லிக்கொண்டு போனபோது, திரைப்படங்களில் சாதிய உணர்வு வெளிப்பட்டு வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். 

அப்போது பாரதிராஜா சொன்னார், “சாதிங்கிறது பிறப்பால் நம்மகிட்ட ஒட்ட வைக்கப்பட்டிருக்கிற தொற்று வியாதி. அதை உணர்ந்தால்போதும்” என்று சொன்னவர், இறுதியாக, “அனாதைக் குழந்தைகளுக்கெல்லாம் என்ன சாதி இருக்கு… சொல்லு” என்று உணர்வுபூர்வமாகக் கேட்டது நினைவின் காட்சிப்பதிவாக மீந்திருக்கிறது.

ஈழப்பிரச்சனைப் பற்றி எப்போதுமே மிகுந்த ஈடுபாட்டுடன் பேசும் அவரிடம், நான் அப்போது எழுதி, இயக்கி, வெளிவராமல் இருந்த ‘முள்ளிவாய்க்கால் – குருதி தோய்ந்த குறிப்புகள்’ ஆவணப்படத்தைப் பற்றிச் சொன்னபோது, அதைக் கொண்டுவரச் சொன்னார்.

ஆவணப்படக் குறுந்தகட்டை அவரிடம் கொடுத்துவிட்டு, அவருடன் வழக்கம்போல ஒரு மணி நேரத்திற்கும் பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினேன்.

மறுநாள் காலை நேரத்தில் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. எமோஷனலாக இருந்தது அவருடைய பேச்சு.

“நேத்து நைட் நீ கொடுத்த சி.டி.யைப் போட்டுப் பாத்தேன். மனசு ஒரு நிலையில இல்லை.

புறநானூற்று வீரமெல்லாம் பேசிக்கிட்டிருக்க நாம, நம்ம தமிழினத்தை அழித்துக் கொண்டிருந்தபோது கையாலாகாத்தனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மனசு ரொம்ப வலிக்குதுய்யா… போனை வச்சுட்றேன். பிறகு பேசுவோம்” என்று தொடர்பைத் துண்டித்தபோது அவரது உணர்வுகளையும் ஆதங்கத்தின் அதிர்வுகளையும் உணர முடிந்தது.

பேச்சுக்கிடையில், இலங்கைக்கு நான் சென்றபோது, அங்கு வீரத்திற்கு ஓர் அடையாளம் போல விளங்கிய அந்த தமிழ் உயிர்களைப் பார்த்தப்போதுதான் எனக்கு என்னுடைய வாழ்தலுக்கான அர்த்தமே புரிஞ்சமாதிரி இருந்தது.” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில், நானும் எனது நண்பரும் டெல்லிக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்குள் போய்க்கொண்டிருந்தபோது “யோவ் மணா…” என்கிற குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தால் அங்குள்ள சோபாவில் ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ-ஷர்ட்டுடன் அமர்ந்திருந்தார் பாரதிராஜா. அவரது கையில் ஒரு இலக்கிய இதழ் இருந்தது.

சிரித்தப்படியே கையசைத்து, அருகில் வரச்சொன்னார்.

நான் பக்கத்தில் போய், “கூப்பிடும்போதுகூட மதுரை பால்பாண்டியாதான் கூப்பிட்றிங்க” என்று சொன்னபோது அட்டகாசமான சிரிப்பு வெளிப்பட்டது.

“நான் போற ஃபிளைட் ஒரு மணி நேரம் லேட். அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றார். 

“ஒரு மதுரைக்காரன இன்னொரு மதுரைக்காரன எப்படிய்யா கூப்பிட்றது… சரி எங்க கிளம்பிட்ட”  என்று விசாரித்தவர், “தொடர்ந்து எழுதிட்டிருக்கியா?” என்றார்.

“ஆமா, எங்கிட்ட ஒரு சமயம், வீட்ல ஒரு படத்துக்கான ரீல் ஓட்டிக் காமிச்சியே… அதெல்லாம் என்னாச்சு? எங்க துறைக்கும் வாய்யா…” என்றபடி அவரது வழக்கமான கரகரத்த குரலுடன் விடைகொடுத்தார் பாரதிராஜா.

விமானம் ஏறுவதற்கான அவசர நெருக்கடியில் கூட எவ்வளவு அழகான நினைவூட்டல்.

சுமார் 25 ஆண்டு காலம் பழக்கத்துக்குப் பிறகும் எவ்வளவு உற்சாகமான வார்த்தைகளை அன்புமயமாக விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பாரதிராஜா.

அவர் விதைத்த விதை இன்னும் தூங்கிவிடவில்லை.

You might also like