கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 13
சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.
இப்போதிருக்கிற ‘ஜென்சி கிட்ஸ்கள்’ நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கும். ஆனால், இதே தமிழகத்தில் என்னுடைய 45 ஆண்டுகால ஊடக வாழ்க்கையில் சந்தித்த சில நிகழ்வுகள் மட்டும் இங்கே.
தென் தமிழகத்தில் வறட்சி பரவின ஒரு சிறு நகரம். அங்கு இயல்பாக நடக்கும் தீண்டாமைக் கொடுமை எந்த அளவில் தீவிரப்பட்டிருக்கிறது என்பதை நேரடியாக வந்து பாருங்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னதும், நானும் எனது நண்பர்கள் மூவரும் சேர்ந்து சிறுநகரத்திற்குப் போனோம்.
அந்த சிறுநகரத்தில் உள்ள சலூன் கடைகளுக்குள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தவர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஒரு சில சமூகத்தினரும் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அப்படிப்பட்ட தடையை மீறி சலூனுக்குள் நுழைய முயன்ற ஒரு சமூகத்தவரின் கை வெட்டப்பட்டிருந்தது என்கின்ற செய்தியே அங்குள்ள நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது.
அந்த நகரத்திலுள்ள சில சலூன் கடைகளுக்குப் போனபோது, அதன் உரிமையாளர்கள்,
“இங்கே இந்த விதமான தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். அதையும் மீறி அந்த சமூகத்தினர், சலூனுக்குள் வந்து, நாங்கள் அவர்களுக்கு முடி வெட்டினாலோ, முகச்சவரம் செய்தாலோ, அதன் எதிர்விளைவு கடுமையாகவே இருப்பதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று சொன்னார்கள்.
அதே ஊரில் உள்ள இஸ்திரி கடைகளில் சில சாதியினர் தங்கள் துணிகளைக் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது.
தடை விதிக்கப்பட்டிருந்த வெவ்வேறு சமூகத்தினரை நேரடியாக சந்தித்தபோது, “தாங்கள் எந்த அளவிற்கு ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறோம், இதற்கு யார் தான் முடிவு கட்டுவார்கள்?” என்று உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார்கள்.
“தாங்கள் முடிதிருத்திக் கொள்ள நாற்காலி போடாமல் தரையில் சிறு மரப்பலகையில் உட்கார்ந்துதான் நாங்கள் முடித்திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாங்கள் அயர்ன் பண்ணின சட்டைகளைப் போடுவதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை” என்று கொந்தளிப்புடன் சொன்னார்கள்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துவிட்டு, யார் அந்த சிறு நகரத்தில் இம்மாதிரியான தடைகளை விதித்திருந்தார்களோ, அந்த சமூகத் தலைவரை நேரடியாகப் பார்த்து இப்படிப்பட்ட தடைகளைப் பற்றிக் கேட்டபோது, கடுமையான வசவுகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
“இது எங்க ஊர், எங்க ஊரில் இப்படித்தான் நடக்கும். இதைக் கேட்க நீங்கள் யார்? இதைப் பத்தி எழுதினா நடக்குறதே வேற” என்று வெளிப்படையான மிரட்டலையும் விடுத்தார்.
அவரிடமிருந்து முறையான பதில் கிடைக்காமல் சற்று தூரத்திற்கு வந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்,
“நீங்க உடனே கிளம்பிருங்க, அவுங்க எப்பனாலும் உங்களைத் தேடி வரலாம். தாக்குதலையும் நடத்தலாம். இப்ப கொஞ்ச நேரத்தில இந்த ஊர்ல இருந்து கிளம்புற கடைசி பஸ்ஸ பிடிச்சு நீங்க கிளம்பப் பாருங்க” என்று எச்சரித்தார்.
அவர் எச்சரித்தபடியே, சிலர் நெருங்குவதற்குள் நாங்கள் பேருந்து நிலையத்திற்குச் சென்று இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் வரும் கிளைமாக்ஸை போல நாங்கள் அந்தப் பேருந்தில் ஏறி, ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தோம்.
அப்போதைய ஜுனியர் விகடன் வார இதழில் ‘வாருங்கள் கிராமத்துப் பக்கம்’ என்கின்ற புதிய தொடரைத் துவக்கி, நான் எழுதிய கட்டுரையை முதல் கட்டுரையாக அதில் வெளியிட்டிருந்தது அப்போதைய நிலையில், கூடுதலாகவே கவனம் பெற்றது.
இதையடுத்து, துக்ளக் வார இதழுக்காக ‘தீண்டாமை ஒழிந்தது, அரசியல் சட்டத்தில் மட்டும்தான்’ என்கின்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைக்காக திருச்சி துவங்கி ராமநாதபுரம் வரை ஆறு மாவட்டங்களிலுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்றிருந்தேன்.
தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பலதரப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்தபோது, கிடைத்த அனுபவங்கள் அதிர வைக்கும் விதத்தில்தான் இருந்தன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்குப் போனபோது, அங்கிருந்த டீக்கடைக்கு போனேன்.
டீக்கடையின் வெளிப்புறத்திலேயே ‘இரட்டை டம்ளர் முறை’ அமலிலிருந்தது.
சிலருக்குக் கண்ணாடி கிளாஸ், சிலருக்கு எவர் சில்வர் டம்ளர். கிளாசில் வாங்கி டீயோ, காபியோ குடிப்பவர்கள் அந்த கிளாசை பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாளி தண்ணீரில் கழுவி வைத்துவிட்டுப் போக வேண்டும்.
இதேமாதிரி பொதுக் கிணற்றில் தண்ணீரை எடுப்பதில்கூட தாழ்த்தி வைக்கப்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கோவிலிலும் அதே நிலை.
அங்கிருந்த தாழ்த்தி வைக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எங்களை அங்கிருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த டீக்கடைக்காரருக்கு எங்களைப் பார்த்ததும் எந்த கிளாசில் எங்களுக்கு டீ கொடுப்பது என்கிற குழப்பமே வந்துவிட்டது.
ஒரு வழியாக எங்கள் எல்லோருக்குமே எவர் சில்வர் டம்ளரில் தேநீர் கொடுக்கப்பட்டது.
அந்தக் கடைக்குமுன் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவர்கள் மறுத்த நிலையிலும் அவர்களை உட்கார வைத்து பேசிவிட்டு, நான் அந்த ஊரைவிட்டுக் கிளம்பிய சில மணி நேரங்களுக்குள் நான் சந்தித்த அந்த இரண்டு இளைஞர்களுமே ஊர்க்காரர்களால் தாக்கப்பட்டிருந்தார்கள்.
இதே மாதிரி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை என்று பல மாவட்டங்களிலுள்ள பல சிற்றூர்களுக்குப் போய்வந்தபோது, பல கிராமங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களின் சாதிகள் மாறியிருந்தனவே ஒழிய தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் தலித் மக்களாகவே இருந்தார்கள்.
சில ஊர்களில், பொதுக் குழாயில் அவர்கள் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்று அவர்களுக்கென்று தனி குழாய் கூட அமைக்கப்பட்டிருந்தது.
அதோடு, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கென்று தனி கோவில்கள் உருவாக்கி அதில் ஆண்டுதோறும் திருவிழாவையும் நடத்தியபோது, அதில் சலசலப்பு ஏற்பட்டு, அது சாதிக்கலவரங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
தென் மாவட்டத்தில் கோவில் தேரை எந்த தெரு வழியாக இழுத்துக் கொண்டு போவது என்பதில் கூட பிரிவினைகள் முற்றி, கலவரமாக உருவெடுத்ததையும் உணர முடிந்தது.
பள்ளிக் கூடங்களிலும் சாதியப் பாகுபாடு பல்வேறு விதத்தில், இருந்து வருவதையும் காண முடிந்தது.
ஏறத்தாழ 3 வார காலத்திற்குமேல் அத்தனை கிராமங்களுக்கும் சென்றுவந்து அதன் விளைவாக எழுதப்பட்டு துக்ளக் இதழில் நான் எழுதிய கட்டுரை பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
நான் கொடுத்திருந்த தலைப்புக்கு ஏற்றபடியே தீண்டாமை அரசியல் சட்டத்தில்தான் ஒழிந்திருக்கிறதே ஒழிய தமிழகத்தின் பல கிராமங்களில் பல வடிவங்களில் உயிர்ப்போடு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருந்தது அந்தக் கட்டுரை.
இதைப்போல தென் மாவட்டங்களில் சிறுசிறு பிரச்சனைக்காக கூட சாதிக் கலவரங்கள் எழுந்து, தாழ்த்தி வைக்கப்பட்டவர்களின் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டபோது, அப்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் தடயவியல் துறையில் பணியாற்றி வந்தவரான நண்பர் தொல் திருமாவளவனுடன் சேர்ந்து அந்தக் கிராமங்களுக்கு நானும் இந்தியா டுடே இதழில் பணியாற்றி வந்த நண்பர் எல்.ஆர்.ஜெகதீசனும் பயணித்திருக்கிறோம்.
தமிழகத்தையே உலுக்கி எடுத்த தென்மாவட்ட சாதிக் கலவரம் நடந்த ஒரு முக்கியமான பகுதிக்கு நண்பர்களுடன் சென்றிருந்தபோது, அங்கே தற்செயலாக சந்தித்த ஓய்வுபெற்ற காவலர் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்கு அருதே எங்களை அழைத்துப் போனார்.
அந்தக் கிணற்றின் அடிப்பகுதியில் மட்டும் இடுப்பளவிற்கு தண்ணீர் இருந்தது.
அந்தக் கிணற்றின் உட்பகுதியே எங்களை எட்டிப் பார்க்கச் சொன்ன அந்தக் காவலர், “சாதிக் கலவரம் நடந்திட்டிருந்தப்போ, பயங்கர பதற்றம், பலரும் ஓடி ஒளிஞ்சிட்டுருந்தாங்க. சிலர் ஓடிவந்து இதோ இந்தக் கிணத்துக்குள்ள குதிச்சாங்க. அந்தக் கிணத்துக்குள்ள தண்ணி இன்னைக்கு இருக்குறமாதிரி இடுப்பளவுதான் இருந்துச்சு.
அப்படி உள்ள விழுந்துவங்க இதே இடத்தில்தான் மேல இருந்து துப்பாக்கியால சுட்டேன். பிறகு தண்டனை கொடுத்தாங்க. சிறைக்குப் போயிட்டு வெளிய வந்துட்டே” என்று முதிர்ந்த முகத்தோடு, அவர் எங்களிடம் சொன்னாலும், அதே சாதிய மனோபாவத்திலிருந்து கொஞ்சமும் அவர் வெளிவரவில்லை என்பது தெரிந்தது.
கிராமங்களில், நடக்கும் திருவிழாவின்போது போடப்படும் ஸ்பெஷல் நாடகங்களில், எந்த சாதித் தலைவரை குறித்து பாடி நாடகத்தை ஆரம்பிப்பது என்பதையொட்டி கூட சில கலவரங்கள் உருவாகியிருக்கின்றன என்பது வேதனையான ஒன்று.
அதேமாதிரி உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு அவற்றில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபிறகு, அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்களை முறைப்படி செயல்படவிடாமல் தடுத்து, அதனால் சில உயிர்கள் பலியாகும் அளவுக்குச் சென்ற கொடுமையெல்லாம் மதுரைக்கு அருகிலுள்ள மேலவளவு கிராமத்தில் நடந்திருப்பதை அப்போது பதிவிட்டிருக்கிறேன்.
அதைப்போலவே உள்ளாட்சித் தேர்தலில் தலித்துகள் போட்டியிடவே கூடாது என்று மறுத்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி கிராமத்திற்குள் கேமரா குழுவினருடன் நுழைந்து பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, கேமராவின் மீது மண் வாரித் தூற்றப்பட்டு அங்குள்ள தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினர் அனைவரையும் படம் பிடித்து அந்த நிகழ்வு விஜய் டிவியில் அப்போது வெளியானபோது பயங்கர எதிர்வினை இருந்தது.
குமுதம் வார இதழில் நான் பணியாற்றியபோது, ‘தீண்டாமை கிராமங்கள்’ என்கிற பெயரிலேயே ஒரு கவர் ஸ்டோரியை எழுதியிருந்தேன்.
அந்தக் கட்டுரைக்காக வடமாவட்டங்களிலுள்ள பல கிராமங்களுக்குச் சென்றபோது, சாதிய ஆதிக்க உணர்வு பல்வேறு வடிவங்களில் அந்தப் பகுதிகளில் இருப்பதை உணர முடிந்தது.
அரசியல் கட்சி சார்ந்தவர்களிடம் கூட சாதிய உணர்வு எந்த அளவுக்கு வீரியம் பெற்ற நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் உணர முடிந்தது.
திண்டிவனத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். சிறு கிராமம்தான். அங்குள்ள தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தைச் சேர்ந்த சின்னக் குழந்தைகள் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் வசிக்கும் தெருவிலேயே செருப்புப் போட்ட கால்களுடன் செல்வதற்குக் கூட சாதியத் தடை விதிக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பிட்ட அந்தப் பள்ளிக் குழந்தைகளை சந்தித்தபோது, குழந்தைமை மாறாத குரலில், “நாங்க செருப்புக் காலோட அவுங்க தெரு வழியா ஸ்கூலுக்கு வர்றது பிடிக்கல. அதுக்காக அடிக்கிறாங்க” என்று மிக மென்மையாகச் சொன்னாலும், அவர்கள் சொன்னவிதம் உறுத்தக் கூடியதாக இருந்தது.
தலித் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தலித் சமூகத்தைச் சேர்ந்த தமிழகம் முழுக்க அறியப்பட்ட கிராமிய பாடகரும், முனைவர் பட்டம் பெற்று பல உயர் பொறுப்புகளில் இருந்தவருமான நண்பர் கே.ஏ.குணசேகரன் எனக்கு அளித்தப் பேட்டி ஒன்றில்,
“நான் என்ன கல்வித் தகுதியோடு உயர் பொறுப்பில் இருந்தாலும், சிவகங்கை மாட்டத்திலிருக்கிற என் சொந்த ஊரில் செருப்புப் போட்டு என்னால் நடக்க முடியல” என்று தலைகுனிந்தபடி பகிர்ந்து கொண்ட அனுபவம் இப்போதும் நினைவில் நிற்கிறது.
என்னதான் இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும்,
இன்னும் தமிழகத்தில் தீராத தொற்றுநோயைப் போல தீண்டாமை பல்வேறு குரூர வடிவங்களில், நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு அண்மைக்காலத்திய உதாரணம் ‘வேங்கைவயல் சம்பவம்’.
இதுமட்டுமல்ல, தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தினர், தங்கள் பார்வையில் பட்டாலே தீட்டு என்கிற அளவுக்கு தீண்டாமை உச்சபட்ச நிலையில் இருந்த நிலையில் தான், அதை எதிர்த்து, நாராயணகுரு (கேரளா), ஐயங்காளி, வைகுண்டசாமி என்று பலர் போராடியிருக்கிறார்கள்.
கண்ணாடியை கருவறையில் வைத்து அதில் தெரியும் பிம்பத்திற்கு அதாவது ஒவ்வொரு மனிதனும் மனதிற்குள்ளும் தாங்களே கடவுள் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தினரும் பொதுவுடமை இயக்கத்தினரும் பல்வேறு தலித் இயக்கதினரும் இன்றுவரை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
என்னதான் நம்மைச் சுற்றியுள்ள வசதிகள் பெருகி, கல்வி, வேலை வாய்ப்பு அல்லது தொழில் திறன் மேம்பட்டிருந்தாலும்,
நமக்கு முன் உள்ள சக மனிதரை சமத்துவ மனநிலையுடன் எப்போது மனிதராக பார்க்கத் தொடங்குகிறோமோ, அப்போதுதான் தீண்டாமை என்கின்ற தொற்று நம்மைவிட்டு விலகும்.
இந்த எதார்த்தத்தை செரித்துக் கொள்ள சிலருக்கு பிரச்சனை இருக்கும் என்றாலும் கூட, இதுதான் இங்குள்ள நிஜம்.
– மணா