பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்குத் தடை!

அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியவை:

முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ கோடிங்:

தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏஐ (AI) கோடிங் கற்றுத்தரப்படும். ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் மாணவர்கள்:

நம் வீட்டுப் பிள்ளைகள் சாட்ஜிபிடி (ChatGPT), கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற செயலிகளை வெறும் பயனாளர்களாக மட்டும் பயன்படுத்தாமல், அதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் கொண்டவர்களாக வளர வேண்டும்.

அதற்கான இன்குபேஷன் மையங்களாக அரசுப் பள்ளிகள் மாற்றப்படும்.

இதற்காக புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கே ‘டிரெய்னிங் தி டிரெய்னர்ஸ்’  முறையில் உயர் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஊக்கம்:

மாணவர்களின் மனநலனைப் பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு.

எனவே, மெல்ல கற்கும் மாணவர்களை ஒதுக்காமல், அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

வகுப்பறைகள் முதல் கழிப்பறைகள் வரை பள்ளிகளின் உள்கட்டமைப்பை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

மாதிரிப் பள்ளிகள் மற்றும் வெற்றிப் பள்ளிகளில் உணவு, மனநலம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய மூன்றையும் தரமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

சாதி, மத அடையாளங்களுக்கு தடை:

சாதி, மத அடையாளங்களுடன் கல்வி நிறுவனங்களுக்குள் நுழையக் கூடாது.

தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை கட்டாயம் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

மாணவர்கள் போதைப் பழக்கத்தின் பாதைக்கு செல்லாமல் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

முன்னாள் மாணவர்களே பள்ளிகளின் தூதர்கள்:

மாணவர்களின் குற்ற மனநிலையை மாற்றுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் பள்ளி கல்வித்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

மூடநம்பிக்கைகளுக்கோ அல்லது அறிவியலுக்குப் புறம்பான காரியங்களுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை.

முழுக்க முழுக்கத் தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைப் போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தனியார் பள்ளிகளுக்கு புதிய நடைமுறை:

இதற்கு முன்பு தனியார் பள்ளிகள் தங்களது அங்கீகாரச் சான்றிதழ் (NOC) அல்லது புதுப்பித்தல் சான்றிதழ்களைப் பெற தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு முகவர்கள் மூலம் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

தற்போது அந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அனைத்தும் வெளிப்படையான நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

லஞ்சச் செலவுகள் இல்லாததால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் கல்விச் செலவுகளை மறுபரிசீலனை செய்து, கட்டண அமைப்பை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கட்டிடப் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக தரம் வகுக்கப்பட்டு கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ஆறாம் வகுப்பிலிருந்து நேரடியாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரும் அவசர முடிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது.

அனைத்து உள்கட்டமைப்பு தகுதிகளையும் முறையாக பூர்த்தி செய்தால் மட்டுமே பள்ளி புதுப்பித்தலுக்கும், தரம் உயர்த்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

– வைஷ்ணவி பாலு

You might also like