தேர்தல் முடிந்து தமிழக சட்டமன்றத்திற்குள் புதிய உறுப்பினர்கள் வந்திருக்கிறார்கள்.
இன்று வேகமாக மாறிவருகின்ற உலகச் சூழலில் தமிழகத்தை மேம்பட்ட மாநிலமாக மாற்றிடவும் இந்தியாவிலேயே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத் தகுந்த மாநிலம் என்று கூறும் அளவுக்கு கொண்டுவர காத்திரமான முடிவுகள், சட்டங்கள், திட்டங்கள், கொள்கைகளை உருவாக்கிட வேண்டும்.
இவைகள் அத்தனையும் பெரும் விவாதங்கள் சட்டமன்றத்தில் செய்யப்பட்டு எல்லோருக்கும் பயன் கிடைக்கும் வகையிலும் குறிப்பாக ஏழைகள் விளிம்புநிலை மக்களுக்கு நன்மைகள் கிடைத்திடும் வகையிலும் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சரியான கண்ணோட்டமும், விவாதத் திறனும், பகுப்பாய்வு செய்து அரசாங்கத்தை செயல்பட வைக்கும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
இந்தத் திறமைகளை நம் சட்டமன்ற உறுப்பினர்கள் முயன்று உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சட்டமன்றத்தில் ஆற்றல்மிக்க பங்களிப்பைச் செய்ய நம் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி தேவை என்பதை நாடாளுமன்ற, சட்டமன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
என்னுடைய முனைவர்பட்ட ஆய்வின் தலைப்பு “தமிழக சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகளின் பங்கு” என்பதுதான்.
அடுத்த கட்ட ஆய்வாக சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு பணி பற்றிய பார்வை என்ற தலைப்பில்தான் செய்தேன்.
இந்த ஆய்வுகள் தரும் செய்தி நம் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ததில் எதிர்பார்க்கின்ற குறியீடுகளை எட்ட இயலவில்லை என்பதுதான்.
அதன் அடிப்படையில் பலமுறை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறேன்.
ஒருமுறை பீஷ்மநாராயண் சிங் தமிழக ஆளுனராக இருந்தபோது அவரின் அழைப்பின்பேரில் அவரிடம் இந்த ஆய்வு பற்றி விவாதித்தேன்.
இது அடிப்படையான தேவை. இந்தத் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தேவை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
“நீங்கள் உங்கள் புத்தகத்தில் கொடுத்திருக்கக்கூடிய சட்டமன்ற பயிற்சிக் கல்லூரிக்கான திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியமாகத்தான் தெரிகிறது. எனவே உங்கள் கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கின்றேன்” என்று கூறினார்.
இந்த வேண்டுகோளை நான் பலருக்கு பலமுறை கடிதம் மூலம் அனுப்பி இருக்கிறேன்.
சந்திரபாபு நாயுடு ஒருமுறை முறையான பயிற்சியை அவர் முதல்வராக இருந்த காலத்தில் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தந்தார்.
அதேபோல்தான் தெலுங்கானா முதல்வராக இருந்த சந்திரகேர ராவ் தெலுங்கானா உருவாகி தேர்தல் முடிந்தவுடன் பயிற்சி வகுப்பினை நடத்தினார். அதில் பங்கேற்க அவர் மகன் என்னையும் அழைத்தார்.
அப்பொழுது என்னால் பங்கேற்க இயலவில்லை. அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் ஒன்று மட்டும் தயார் செய்து அனுப்பி வைத்தேன்.
இந்தக் கருத்தை தமிழகத்தில் பலரிடம் நான் விவாதித்தது உண்டு. எந்தத் தலைவரும் இது தேவையற்றது என்று கூறவில்லை. அனைவரும் வேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.
ஆனால் அப்படி ஒரு கல்லூரி உருவாகவில்லை. என்றாவது ஒருநாள் உருவாகும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து இந்தக் கோரிக்கையை வைத்து வருகிறேன். அதில் ஒருவர் மட்டும் உடனே அதற்கான ஏற்பாட்டினைச் செய்தார் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு.
தமிழகத்தில் இந்த முன்னெடுப்பை தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தந்தவர் பெரியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
அது மட்டுமல்ல, நான் எழுதிய “சட்டமன்றம் ஓர் அறிமுகம்” என்ற சிறிய நூலை அச்சிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்து சட்டமன்றம் பற்றிய புரிதலுடன் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தமிழகத்தில் இருக்க வேண்டும் என அந்தப் பணியினைச் செய்தார்.
அந்தப் பயிற்சியை ஒரு நாள் முழுவதும் என்னை எடுக்க வைத்தார். அது மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அவசியம் அதற்கு பயிற்சிக் கல்லூரி தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோளையும் வைத்தார்.
நான் தொடர்ந்து எழுதி வருவதைப் படித்துவிட்டு மறைந்த மாமனிதர் சி.சுப்ரமணியன் அவர்கள் என்னை அழைத்து ஓர் செய்தியைக் கூறினார்.
நான் எம்.ஜி.ஆர் அவர்களிடம் இப்படி பயிற்சி வேண்டும் என்று கூறினேன். அவரும் ஏற்பாடு செய்தார். என்னையும் அந்தப் பயிற்சி வகுப்புக்கு அழைத்திருந்தனர்.
ஆனால் பெரு எண்ணிக்கையில் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவில்லை. எனவே பயிற்சி என்று அழைத்தால் அவர்களின் உளவியலுக்கு அது ஒத்துவராது.
கருத்தரங்கம் என பெயரிட்டு, பெரும் வல்லுனர்களை அழையுங்கள் வருவார்களா என்று பார்க்கலாம் என்று கூறிவிட்டு, இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள், நாம் செய்ய வேண்டியதை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
எப்போதாவது அந்தக் கருத்தை நம்பக்கூடிய ஒரு முதல்வர் வந்தால் அது நடந்துவிடும். எனவே இந்தப் பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறினார்.
இதே பணியை ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி வேண்டும் என்று பயிற்சி வகுப்புக்களை நடத்த ஏற்பாடு செய்தார். அப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற அமைப்புக்கள் அதை நடத்தின.
தமிழக சட்டசபை நூற்றாண்டைக் கடந்த ஒரு மாமன்றம். இதற்கு ஒரு வரலாறு உண்டு. நூறாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர் நம் தமிழகத்தில்.
அது ஒரு சிறப்பு நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நூறாண்டு கால சட்டமன்றச் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி.
பொதுவாகவே உலகத்தில் குறைவான ஆய்வுகள்தான் சட்டமன்றங்கள் பற்றி நடந்துள்ளது.
உலகில் அதற்கான பிரத்தியேக ஆய்வு நிறுவனங்களும் மிகவும் குறைவு. உலகில் ஒருசில பல்கலைக் கழகங்கள்தான் இப்படிப்பட்ட ஆய்வினை மேற்கொள்ளுகின்றன.
இதில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்த இரண்டு பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில்தான் உள்ளன. ஒன்று ஐயவோ மற்றோன்று டியூக் பல்கலைக்கழகம்.
இந்த நூறாண்டு கால சட்டமன்றச் செயல்பாடுகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை.
ஒவ்வொரு விழாவின்போதும் சிறப்புத் தொகுப்பு மலர் வெளியிடுவது உண்டு. எத்தனை நாள் சட்டமன்றம் நடந்தது, எத்தனை பேர் பேசினர், எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது போன்ற புள்ளி விபரங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
அது சிறப்பு மலர்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவைகளெல்லாம் ஆய்வு அறிக்கைகள் அல்ல. அவைகளெல்லாம் புள்ளி விரபங்கள் மற்றும் பலரது நினைவலைகள்.
காத்திரமான ஆய்வுகள் நடத்தப்பட்டால்தான் நம் சட்டமன்றச் செயல்பாடுகளை செம்மைப்படுத்த முடியும்.
இந்தக் கருத்தை 2021ஆம் ஆண்டு 100வது ஆண்டைக் கொண்டாடும்போதும் வலியுறுத்தினேன். அதற்குப் பிறகும் என் கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வருகிறேன்.
மேற்கத்திய நாடுகளின் சட்டமன்றங்கள் பற்றிய ஆய்வுகள் ஒரு நிலையில் புதிய மக்களாட்சி நாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தன. இருந்தபோதிலும் அப்படிப்பட்ட ஆய்வுகளை புதிய மக்களாட்சி நாடுகள் முன்னெடுக்கவில்லை.
காரணம், அரசாங்கங்கள் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவில்லை. அதற்கான முனைப்புக்களையும் காட்டவில்லை.
பொதுவான கோட்பாடு என்னவென்றால் சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்ற மாமன்றங்கள் எந்த அளவுக்கு மக்களாட்சியில் புரிதலோடு, திறம்பட செயல்படுகின்றனவோ அந்த அளவுக்குத்தான் சமூகத்திலும் அது மக்களாட்சிக்கான தாக்கத்தினை உருவாக்கும்.
மேற்கத்திய நாட்டு அறிஞர் ஒருவர், கிராமசபை நடப்பதைப் பார்த்துவிட்டு இது எல்லா விதத்திலும் உங்கள் சட்டமன்றங்கள், நாடாளுமன்றம்போல் கூச்சல் குழப்பத்திலேயேதான் நடந்து முடிகின்றது என்றார்.
அது உண்மைதான். எல்லா இடங்களிலும் மக்களாட்சிக்கான புரிதல் மிகக்குறைவு. அதன் விளைவுதான் தரமற்ற மன்றச் செயல்பாடுகள்.
இன்றைய சூழலில் நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ எவர் ஒருவர் விவாதத்தையோ ஓர் இலக்கியமாக பார்க்க முடியுமா? அந்த அளவுக்கு அது விவாத மன்றமாக இல்லாமல் ஏச்சு மன்றமாக மாறிவிட்டன.
இந்த நிலையை மாற்றி சட்டமன்றத்தின் தரத்தை உயர்த்த முதலில் சட்டமன்ற உறுப்பினர்களின் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு வேறு வழி இல்லை. அதற்கு இன்று நமக்கு இருக்கும் ஒரே வழி, அவர்களுக்கு முறையான, தரமான பயிற்சி அளிப்பதுதான்.
எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தரமான பயிற்சி கிடைக்கப்பெற்றால் அவர்களின் செயல்பாடுகளிலே அதன் திறனைப் பார்க்கலாம்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த திறன் வளர்ப்பை பெற்றுவிட்டால் சீறிய முறையில் பங்கேற்பது என்பது நடைமுறைக்கு வந்துவிடும்.
அப்பொழுதுதான் சட்டமன்றம் தரமான சிறப்பான முடிவுகளை எடுக்கும். அங்கு பெரும் விவாத ஜனநாயகத்தை முன்னெடுக்க முடியும்.
மக்களாட்சியின் தரமும் உயரும். சட்டமன்றத்தின் செயல்பாடுகள் தரத்தில் உயரும். சட்டமன்ற உரையாடல்கள் அனைத்தும் இலக்கியங்களாக மாறும். இல்லையேல் அது ஒரு மேஜையைத் தட்டி ஒலி எழுப்பி தலைவர்களை மகிழ்விக்கும் மனமகிழ் மன்றமாகத் தான் செயல்படும்.
இன்றுள்ள ஒரு தாழ்ந்த அரசியல் கலாச்சாரத்தை மேம்படுத்த முதல் தேவை நம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சி.
பயிற்சி என்பது நிபுணத்தை வளர்க்கும், உள்ளுக்குள் உள்ள செயல் ஆற்றலை வெளிக்கொணர்ந்து செயல்பட வைக்கும்.
உள்ளாட்சி மன்ற உறுப்பினருக்கு பயிற்சியளிக்க நம்மிடம் பயிற்சி நிலையம் இருக்கிறது. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சியளிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இப்படிக் கூறியவுடன் அனைவருக்கும் ஒரு கேள்வி எழும். நிதிக்கு எங்கே போவது என்று பலர் கேட்பார்கள். இதற்கான நிதியை ஒரே நாளில் திரட்டிவிட முடியும். அரசாங்கம் தயாராக இருந்தால் நிதி திரட்டுவது இன்றைய சூழலில் மிக எளிது.
இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகம் வீதியில் நின்று நிதி திரட்டி ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. ஒருவருக்கு கடப்பாடு மட்டும் இருந்தால் நிறுவனம் உருவாக்குவது மிக எளிது.
இதற்குத் தேவை ஒரு முடிவு எடுக்கும் தலைமை. செலவே இல்லாமல் அந்தப் பயிற்சியை அளிக்க முடியும். குறைந்தபட்சம் ஒரு அரங்கம் தேவை. அடுத்து ஒரு சில வல்லுனர்கள் தேவை. அவ்வளவுதான்.
இந்த இரண்டையும் உருவாக்கத் தேவை ஒரு அரசியல் கடப்பாடு அவ்வளவு தான். அது இருந்தால் பயிற்சி சாத்தியமே.
இன்று அரசாங்கத்திடம் இருக்கும் வசதிகள் அனைத்தும் முழுப் பயன்பாட்டில் இல்லை. அவைகளைப் பயன்படுத்தலாம்.
அத்துடன் சட்டமன்றச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கி, அந்த ஆய்வுக்கான நிதியினை மத்திய அரசின் ஆராய்ச்சிக்கான நிதி நல்கை செய்திடும் அமைப்புகளுக்கு அனுப்பி நிதி பெற்று ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
இன்னும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவைகளைப் பயன்படுத்தி நம் சட்டமன்றத்தை முன் மாதிரி சட்டமன்றமாக மாற்றிடலாம்.
தேவை அதற்கான ஒரு பார்வை மற்றும் கடப்பாடு. அவ்வளவுதான்.