நிதி ஆயோக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் இன்று (11.06.2026) நடைபெற்றது.

இதில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தின் கலாசார மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் இரு கட்டங்களாக நடைபெற்றது.

இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டார். பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகளில், ‘‘மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், குறிப்பாக தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

‘புதிய இந்தியா’ என்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அடுத்த 15 ஆண்டுகளுக்கான நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம், பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதோடு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

அதேபோல், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், ‘நாரி சக்தி’ திட்டம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான அம்சங்கள் குறித்தும் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனுடன், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

– வைஷ்ணவி பாலு

You might also like