இந்தியாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். பல நூற்றாண்டுகள் ஒன்றாக இருந்த தேசத்தின் ஒரு பகுதி, ‘பாகிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடாக உருவெடுத்த நாள் இன்று (14.08.2026).
சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், அந்த சுதந்திரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இந்தியா பிரிக்கப்பட்டது.
இந்தியாவை பிரிப்பதற்கான முதல் விதை 1930-ம் ஆண்டில்தான் ஊன்றப்பட்டது.
1930-ம் ஆண்டில் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் லீக் மாநாட்டில் இந்தியாவை 2 நாடுகளாகப் பிரித்து இஸ்லாமியருக்காக தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முழக்கம் ஒலித்தது.
அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த எண்ணத்தில் இருந்து அவர்களை திருப்பிவிட முடியும் என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருதினர்.
ஆனால், நாளடையில் முஸ்லிம் லீக் தலைவர்கள் மத்தியில் இந்தியாவை பிரித்து தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது.
மும்பையில் இருந்த ஜின்னாவின் இல்லமான ‘ஜின்னா ஹவுஸ்’ அப்போது மிகப் பிரபலமானதாக இருந்தது.
1936-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் இந்த வீட்டை வாங்கினார் ஜின்னா.
தனிநாடு கோரிக்கையை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த வீட்டில்தான் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் ஜின்னா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து, 1940-ல் நடந்த லாகூர் மாநாட்டில் தனிநாடு கோரிக்கையை முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார்.
முஸ்லிம் லீக் தலைவர்கள் அவர் பின்னால் அணிவகுக்க, மனதளவில் நொறுங்கிப் போனார் காந்தி.
“என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காந்தியடிகள், இந்தியா பிளவுபடாமல் இருக்க தன்னால் இயன்றவரை போராடினார்.
ஜின்னாவின் வீட்டுக்கே போய் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். வேண்டுமென்றால் அவரையே பிரதமராக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.
14 சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஜின்னாவை தன் வழிக்கு கொண்டுவர முடியாததால் இந்தியாவை பிரிக்க ஒப்புக்கொண்டார் மகாத்மா காந்தி.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக உருவானது.
ஒரு பக்கம் மக்கள் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில், மறுபக்கம் லட்சக்கணக்கான மக்கள் துன்பத்தை அனுபவித்தார்கள்.
பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை வெளியேறுமாறு அங்கிருந்த தீவிரவாத அமைப்புகள் மிரட்டின. அதற்கு உடன்படாதவர்கள் மீது கோரத் தாக்குதல்களை நடத்தினர்.
மறுபக்கம் இந்தியாவில் உள்ள சில அமைப்புகள், இங்கிருந்த இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். அவர்களும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானவர்கள் வீடுகள் மற்றும் இதர சொத்துகளை விற்று அகதிகளாக வெளியேறினர்.
பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் பிரிவினையால் ஏற்பட்ட காயம் அதிகம். இந்த பிரிவினையின்போது உடமைகளை இழந்து, ரயிலில் உயிரை மட்டும் சுமந்துவரும் ஒரு சிலரை மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்.
அந்த காயம் இன்னும் ஆறாமல் இரு நாடுகளுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி வருகிறது.
இங்கு கொஞ்சம் பாகிஸ்தானில் கொஞ்சம் என்று சிதறிப்போன குடும்பங்கள் இன்னும் இரு நாடுகளிலும் உள்ளன.
இனியும் ஒரு பிரிவினை ஏற்படாமல் நாட்டை ஒற்றுமையுடன் வைத்திருக்க நமக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.
– லலித்