எல் நினோ – மனிதர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றம்!

எல் நினோ – அண்மையில் உலகளவில் உள்ள ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயராக மாறியிருக்கிறது.

எல் நினோ என்கிற பெயரை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமோ இல்லையோ அதன் விளைவை இங்குள்ள பலரும் ஏதோ ஒரு விதத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எல் நினோ விளைவால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாழும் பலருக்கு காய்ச்சல், இருமல் போன்ற தொற்றுகள் பரவி இருக்கின்றன.

கடுமையான வயிற்று வலியும் எந்த உணவையும் சாப்பிட தயங்கும் மனநிலையும் கடந்த ஒரு மாத காலமாக பலருக்கு உருவாகி இருக்கிறது.

அதைப்போலவே முதுகு வலியும் முதுகு முழுக்க பல்வேறு தடிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள் மட்டுமல்ல 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட தோல் சம்மந்தமான தடிப்புகளும் அரிப்பும் உண்டாகி அவதிப்படுவது பரவலாகவே நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழக அரசின் சுகாதாரத்துறையும் எல் நினோவின் விளைவுகள் குறித்து எச்சரிக்கையை விடுத்து, அதோடு அதற்கான அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த நேரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரான கார்த்திகேயன் தட்பவெப்ப நிலை குறித்து ஆய்வு செய்திருக்கும் ஆய்வாளர் ஒருவருடன் நடத்திய நேர்காணலை பார்க்க நேர்ந்தது. 

எல் நினோ தட்பவெட்ப மாற்றம் இனி அடுத்தடுத்த மாதங்களில் எத்தையை  விளைவுகளை  உருவாக்கும், அதனால் ஏற்பாடும் பாதிப்புகள் என்ன என்பதை விவரித்துக் கொண்டு போனவர்,

சில நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் எல் நினோ கடுமையாக பாதிப்பை உருவாக்கியபோது பெருமளவில் உயிரிழப்புகள் நடந்திருப்பது குறித்தும் பேசியபோது தான்  எல் நினோவின் தாக்கமும் அதன் வீரியமும் புரிந்தது.

உலகளவில் நிகழும் இந்த எல் நினோ பருவநிலை மாற்றத்திற்கு குறிப்பிட்ட யாரையும் நாம் குற்றம் சாட்ட முடியாது.

அதே சமயம் முழுக்க முழுக்க லாப நோக்கில் செயல்படும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், பரந்துபட்ட காடுகள் அழிவும், நீர் மேலாண்மையில் ஏற்பட்ட சீர்குலைவுகளும், ஆறு, கடல் போன்றவற்றில் நாம் பயன்படுத்தி இருக்கும் வணிக நோக்கங்களும் இதன் பின்னணியில் இருக்கின்றன.

இயற்கையை நாம் தொடர்ந்து சீரழிக்கும்போது இயற்கை அதற்கான எதிர்வினையை பதிலுக்கு அளிக்கிறது.

அப்படி நிகழ்காலத்தில் அளித்த பதிலான எல் நினோவின் விளைவைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

– ச. தமிழரசன்

You might also like