கூட்டணி தர்மம் – சொல்லுக்கு அர்த்தம் இருக்கிறதா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்து தவெக கூடுதல் எண்ணிக்கையில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க இன்னும் 10 தொகுதிகள் வரை தேவைப்படும் என்கிற சூழ்நிலை உருவானபோதே பல மற்ற கூட்டணிக் கட்சிகள் மழை மேகக் கூட்டத்தைப் போல களைய ஆரம்பித்து விட்டன.

அதுவரை அந்தந்த கட்சிகள் பேசி வந்த கூட்டணி தர்மம் என்கின்ற சொல்லே பொருள் இல்லாதபடி ஆகிவிட்டது.

முதலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் சட்டென்று விலகி தவெக அணிக்கு மாறி அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறது.

பொதுவுடமைக் கட்சிகள் திமுக கூட்டணியில் அதுவரை அங்கம் வகித்தாலும் அதிலிருந்து தங்களைத் தளர்த்திக்கொண்டு தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக ஜனநாயக ரீதியான குரலையும் கொடுத்தன.

ஆனால், தற்போது பொதுவுடைமைக் கட்சிகளின் நிலைப்பாடும் சற்றே மாறியுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியன் சாவகாசமாக யோசித்து தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்கின்ற சூசகமான தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதேசமயம் மார்க்சிஸ்ட் கயூனிஸ்ட் கட்சி தங்களது வெளியில் இருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டிலேயே தற்போதுவரை நீடித்தபடி இருக்கிறது.

துவக்கத்திலிருந்து கொள்கைக் கூட்டணி என்று கூறிவந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக காலதாமதமாக அறிவித்து, அதன்பிறகு தீவிரமாக யோசித்து அமைச்சரவையில் பங்கேற்றாலும் கூட இன்றுவரை கூட்டணிக்கான குழப்ப நிலையில் நீடித்தபடியே இருக்கிறது.

மதில்மேல் பூனையைப் போல வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் பேச்சுக்கள்.

அதனால், தவெக கூட்டணியில் விசிக எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியை மிஞ்சி நிற்கிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்தவரை அமைதியாக இருந்தபடி கூட்டணி தர்மத்தை பேணிவந்த மதிமுக பொதுச்செயலாளரான வைகோ, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து தவெக பக்கம் இணைவதாக வெளிப்படையாக அறிவித்தபிறகு படு ஆவேசமாக திமுக மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இலையுதிர் காலத்தைப் போல திமுக, அதிமுக இரு கட்சிகளின் கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து பல கட்சிகள் நழுவ ஆரம்ப்பித்து விட்டன.

அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் உட்பட கணிசமாக வெளியேறியவர்கள், அதிமுகவும் திமுகவும் இணைந்து ரகசிய பேரம் பேசின என்கின்ற தகவலை எடப்பாடி பழனிசாமி இன்றுவரை ஆணித்தரமாக மறுக்கவில்லை.

இதற்கிடையில் தான் திமுகவும் அதிமுகவும் கூட்டுக் களவாணிகள் என்று கரூர் கூட்டத்தில் முதல்வரான விஜய் பேச, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களும் ஒருசேர கூட்டுக்குரலாக விஜய்யை எதிர்த்து கடுமையாகப் பேசி வருகிறார்கள்.

இது இப்படி இருக்கிறது என்றால், மத்தியில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற பாஜக, தமிழகத்தில் ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியைப் பெற்ற நிலையில், என்ன நிலைப்பாட்டை எடுத்தபடி இருக்கிறது?

முதல்வர் விஜய் டெல்லிக்கு சென்றபோது, திமுகவை குறைகூறி விஜய் ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் நிதிப்பங்களிப்பில் பிரச்சனை இருக்காது என்று பேசினார்கள். அவர்கள் கூட இப்போது மவுனம் காக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தவெக அமைச்சரான ராஜ்மோகன் மிகவும் வெளிப்படையாக, “திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முயன்றால், ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்கு இன்றுவரை பாஜக தரப்பிலிருந்து பதில் இல்லை.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை மீது போடப்பட்ட வழக்கிலிருந்து கூட இந்த நேரத்தில் பின்வாங்குகிறது திமுக தலைமை.

சனாதனம் குறித்த திமுக பேசிய பேச்சுக்களின் தொனி இப்போது குறைந்து போய்விட்டது.

பாஜகவின் தமிழகத் தலைமையும் திமுக தலைமையும் அதிமுக தலைமையும் தற்போதைக்கு ஒரே இலக்கை நோக்கித் தான் அடுத்தடுத்து தங்களது அம்புகளை ஏவிக்கொண்டிருக்கின்றன.

அந்த ஒற்றை இலக்கு தவெக தலைவரான விஜய் மீதான எதிர்ப்பு.

இந்த ஒற்றைப் புள்ளியில்தான் மேலே சொன்ன தேசியக் கட்சியும் இரு மாநிலக் கட்சிகளும் ஒரே நேர் கோட்டில் ஒன்றுசேர்வதைப் போன்ற தோற்றம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இனி உள்ளாட்சித் தேர்தலோ, தாமதமாக இடைத்தேர்தலோ நடப்பதற்குள் மீண்டும் கூட்டணி மேகங்கள் கலைந்து அல்லது ஒன்றுசேர்ந்து புதுக் கூட்டணி உருவாகலாம். கூட்டணி தர்மங்களும் உருவாகலாம்!

அதுவரை நாமும் சொல்லிக் கொள்வோம் – வாழ்க இப்போதைய ’கூட்டணி தர்ம’ நியாயங்கள்!

– துரை. இளையபெருமாள்

You might also like