ஒரு பொருள் பயன்பாட்டில் இருக்கக் கூடிய காலம் முடிவடைந்து விட்டதை குறிப்பதே காலாவதி (expired) என்கிறோம்.
உயிரையும் ஆரோக்கியத்தையும் காக்கும் மருந்துகளில் தொடங்கி நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொன்றுக்குமே காலாவதி காலம் என்று ஒன்று உண்டு.
குறிப்பாக மருந்து பொருட்களுக்கு expiry date உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறை அதை உபயோகிக்கும் போதும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியை கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
காலாவதி தேதி முடிந்த பிறகும் மூன்று மாதங்களுக்கு அந்த மருந்தை உபயோகிக்கலாம் என்கிற பரவலான மூடநம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
மருந்து பொருட்களின் நுகர்வு பெருகிவரும் இக்காலத்தில் இதனைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது.
மருந்துகளின் காலாவதி தேதி என்பது மருந்தியல் விஞ்ஞான முறைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.
அதாவது ஒரு மருந்தின் வீரியத் தன்மையைப் பாதுகாக்க தீங்கு விளைவிக்காத சில பொருட்கள் அதனுடன் சேர்ந்து தயாரிக்கப்படுகிறது.
வெப்பத் தன்மையால் பாதிக்கப்படும் அல்லது குளிர்நிலை அவசியம் தேவைப்படும் மருந்துகள் மற்றும் வெப்பத்தை தாங்கக் கூடிய மருந்துகள் என இவை பிரிக்கப்படுகின்றன.
இதனை அளவுகோள்களாக வைத்தே, ஒவ்வொரு மருந்தும் எத்தனை காலம் பாதுகாப்பாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு, அதற்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு மருந்துகள், தங்களின் வீரிய தன்மையை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கும். அதற்கு காரணம் அதில் உள்ள மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றம்.
அதன் பிறகு அந்த மருந்துகள் நாம் எதிர்பார்க்கிற பலன்களை கொடுப்பதில்லை.
காலாவதியான மருந்து பொருட்கள் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கு தான் காலாவதி மருந்து பொருட்களுக்கான சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதன்படி விற்பனைக்காக வைக்கும் மற்ற பொருட்களில் இருந்து தனியாகப் பிரித்து, இவை காலாவதியானவை என குறிப்பிட வேண்டும் என்று சட்ட விதிகள் கூறுகின்றன.
மேலும் வீட்டில் உள்ள காலாவதியான மருந்து மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது ஆபத்தினை தவிர்க்க உதவும்.
மாத்திரை, பவுடர் வகைகள், திரவம் மற்றும் இன்ஜெக்ஷன் வகையறாக்கள் என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக அப்புறப்படுத்துதல் அவசியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
திடப்பொருட்களைக் குப்பைத் தொட்டியிலும், திரவப் பொருட்களை கழிவறையில் கொட்டியும், இன்ஜெக்ஷன்களை உடைத்தும் போட்டு துப்புரவு பணியாளர்களிடம் தனியாக சேர்ப்பிக்க வேண்டும்.
பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இவற்றை கையாளுவது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கான ஆன்டி-பயாட்டிக் பவுடர்களை தண்ணீரில் கலந்து கொடுக்கும்படி நேர்ந்தால், அதை மருத்துவர் கூறியபடி குறிப்பிட்ட காலத்துக்குள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
திரவ வடிவ மருந்துகள், வாங்கும் போது ஒரு நிறமாக இருந்து பிறகு வேறு நிறம் மாறினாலும், காலாவதி தேதி இருந்த பொழுதும் அதனை உபயோகிக்கக் கூடாது. சில மாத்திரைகள் foil பேப்பரில் சுற்றி வரும்.
ஒரு சில மாத்திரைகளைத் திறக்கும் போது அது உடைந்து தூளாகக் கொட்டும். இப்படிப்பட்ட நிலையில் இவற்றை உபயோகிக்கக் கூடாது.
எந்த மருந்தாக இருந்தாலும் அதனை சூரிய வெளிச்சம் நேராக விழும் மாதிரியான இடத்தில் வைக்கக் கூடாது. குளிரூட்டும் வசதி இல்லாதவர்கள் நிழலான இடத்தில் வைக்கலாம்.
தேவைப்படும் என்று நினைத்து தலைவலி, காய்ச்சல், மற்றும் உடம்பு வலிக்கான மாத்திரைகளை வாங்கி சேகரித்து வைத்தல் கூடாது.
மாத்திரை பட்டையின் ஓரம் அச்சிடப்பட்டிருக்கும் காலாவதி தேதியை கவனிக்காமல் அதனை கிழித்து மாத்திரையை எடுத்திருப்பர்.
மறுமுறை உபயோகிக்கும் போது தேதி தெரியாமல் இப்பொழுது தானே வாங்கியது என்று அதனை தொடர்ந்து உபயோகிப்பர். இம்மாதிரியான செயல்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பொழுது சிலருக்கு சரும அலர்ஜி வரலாம். அரிதாக சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாதிரி உள் உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.
தவறுதலாக மருந்து உட்கொண்டது தெரிய வந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் வேண்டும். ஆகவே எச்சரிக்கையுடன் செயல்படுவோம் ஆபத்தினை தவிர்ப்போம்.
S. வாணி