கரூர் நிகழ்வு: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான (CBI) அதிகாரிகள் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையது அலி உள்ளிட்ட காவல்துறையினரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிபிஐ விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் தொடர்பாக 10 காவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், சிலர் விசாரணைக்கு ஆஜராகியிருக்கின்றனர்.

2026 சட்டசபைத் தேர்தல் காரணமாக சில மாதங்கள் விசாரணை நடைபெறாத நிலையில், ஜூன் 11, 2026 அன்று சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

2025 செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் உண்மையான காரணங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை கண்டறிவதற்காக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல்துறையினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி, அவர்களிடம் நேரடி விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் சம்பவம் நடந்த சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

– சு. சுரேகா

You might also like