அண்மையில் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசிய அடாவடித்தனமான பேச்சு சமூக வலைத்தளங்களில் இன்னும் அலையடித்துக் கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்திலிருந்தே திமுகவைச் சேர்ந்த பலர் பொதுவெளியில் தவெகவையும் முதல்வர் விஜய்யையும் தரக்குறைவாக பேசுவது அதிகரித்தபடியே இருக்கிறது.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தவெகவுடன் கூட்டணி வைத்ததற்காக விசிகவை மிகக் கடுமையாக சாடியவர், முதல்வர் விஜய்யை நாதாரி என்றழைத்து கொச்சையாகப் பேசினார்.
இதைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் இதைப்போலவே அநாகரிகமாக பேசி வழக்குப் பாயும் அளவுக்குப் போனார்.
ஆர்.எஸ்.பாரதியும் தன் பங்கிற்கு அவ்வப்போது, அதிரடியாய் பேசி ஊடகங்களுக்குத் தீனியைக் கொடுத்துக் கொண்டிருப்பார்.
இந்த வரிசையில் பேசியிருக்கிற சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் வரம்பு மீறிய விதத்தில் மானங்கெட்ட தமிழக முதல்வர் என்றும் சட்டசபைக்குள் வந்தால், தாக்குவோம் என்றும் ஏக வசனத்தில் பேசி அதையொட்டி வழக்கும் பதிவாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் கைது செய்யப்பட்டதையொட்டி பல தரப்பட்ட விமர்சனங்கள் ஊடக வெளியில் எழுந்திருக்கின்றன.
சிலர் மார்க்கண்டேயனின் பேச்சை நியாயப்படுத்தியும் கைது செய்யுமளவுக்கு அவர் பேசவில்லை என்றும் வாதம் செய்வதைப் பார்க்க முடிகிறது.
ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். இதே திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, இப்போது அவர்கள் சொல்கிற அதே கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக எத்தனை வேளைகள் நடந்திருக்கின்றன.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் வீட்டிற்குள் மலம் கொட்டப்பட்டது. அடிக்கடி கைது செய்யப்பட்டு, அவரது கை முறிக்கப்பட்டது.
இதைப்போலவே திமுக ஆட்சியை விமர்சித்த சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் கருத்துச் சுதந்திரம் எங்கே போனது?
இந்த சமயத்தில் இத்தகைய அநாகரீகமான பேச்சுக்கள் எப்போதோ துவங்கிவிட்டன.
திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல தேசியக் கட்சிகளிலும் இம்மாதிரி அநாகரீகமாக பேசுவதற்கென்றே பயிற்சிப் பெற்ற பேச்சாளர்கள் இருந்தார்கள்.
அதேசமயம் காங்கிரஸ் மேடையிலேயே திமுகவை தரக்குறைவாக ஒரு பேச்சாளர் பேசியபோது அதே மேடையில் அமர்ந்திருந்த காமராசர் வெளிப்படையாகக் கண்டித்ததை நேரடியாக பார்த்த பலர் சொல்லியிருக்கிறார்கள்.
1967 தேர்தலில் விருதுநகரில் மாணவர் தலைவர்களில் ஒருவரான பெ.சீனிவாசனிடம் காமராசர் தோற்றுப் போனபோது அது குறித்து வருந்திய அண்ணாதுரையின் பேச்சு, கட்சிப் பாகுபாட்டை மீறி அவர்களுக்கிடையே இருந்த நல்ல புரிதலை வெளிக்காட்டியது.
அத்தகையை புரிதல் தற்போது ஏன் தொடரவில்லை?
அவர்களுடைய கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ரசிப்பதும் நடந்திருக்கிறது.
மிகவும் கடுமையாகப் பேசிய சில பேச்சாளர்கள் பேசிவிட்டு மேடையைவிட்டு கீழிறிங்கதும் தாக்கப்பட்டதும் மதுரையைப் போன்ற சில பகுதிகளில் நடந்திருக்கிறது.
ஆகமொத்தம் இத்தகைய பேச்சுக்கள் வன்முறையை நோக்கி நகர்கின்றன என்பது மட்டும் உண்மை.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கிற மார்க்கண்டேயன் சொன்னபடியே பார்த்தால் தமிழக சட்டமன்றத்தில் இதற்கு முன்பு பல்வேறு கலாட்டாக்களை நினைவுகூற வேண்டியிருக்கிறது.
சட்டசபைக்குள்ளேயே அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா அநாகரீகமாக நடத்தப்பட்டதும் நடந்திருக்கிறது.
அதேமாதிரி திமுக தலைவரான கலைஞர் முதல்வராக இருந்தபோது அவர் மீது தாக்குதல் நடந்து, அவர் கண்ணாடியெல்லாம் கீழே விழுந்ததெல்லாம் நடந்திருக்கிறது.
அதைப்போலவே தேமுதிக தலைவரான விஜயகாந்த் நாக்கைத் துருத்திப் பேசியது, அதற்காக நடந்த எதிர்வினைகளும் தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும்.
இதனுடைய தொடர்ச்சியாகவே திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் போன்றவர்களின் வன்முறைத் தனமான பேச்சையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
அந்த எம்.எல்.ஏ சொன்னபடியே தமிழக முதல்வரான விஜய்க்கு எதாவது சிறு பிரச்சனை சட்டசபையில் நிகழ்ந்தால், அது எத்தகைய எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும்?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிதையும் விதத்தில் பல்வேறு ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.
பேச்சின் மூலமாகவும் எழுத்தின் மூலமாகவும் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிற திமுக, இன்றைக்கு தன்னுடைய கட்சி நிர்வாகிகளும் எம்எல்ஏவும் வரம்பு மீறி பேசுவதை அனுமதிக்கக் கூடாது.
அப்படிப் பேசும் பட்சத்தில் அதைக் கண்டிக்கவும் தயங்கக் கூடாது.
இதையெல்லாம் செய்யாமல் இத்தகைய பேச்சுக்களை நியாயப்படுத்தினால் இனியும் இத்தகைய பேச்சுக்கள் மேலோங்கவே அது வழிவகுக்கும்.
இது திமுகவிற்கு மட்டுமல்ல தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்குமே பொருந்தும்.
வள்ளுவர் மொழியில் சொன்னால் ‘யாராக இருந்தாலும் நா காக்க’ என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். ‘காவாக்கால் சொல்லிழுக்குப் பட்டு’ என்பதையும் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
– யூகி