தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்தப் படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிறச் சட்டை, காக்கி நிற பேண்ட் என சிறப்பு தனித்துவமான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கருப்பு நிற தொப்பி மற்றும் கருப்பு நிற காலணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் நாளை (09.06.2026) மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
இதற்கான விழா சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
சென்னையில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்களது பணியைத் தொடங்க உள்ளனர்.
முன்னதாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை கடந்த 29-ந்தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– வைஷ்ணவி பாலு