சூரியன் – இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை.
தன்னுடைய ஒளி, வெப்பம் மற்றும் ஆற்றலை வழங்கி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் செழிக்க ஆதாரமாக விளங்குகிறது.
தாவரங்கள், ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கின்றன. அந்த தாவரங்களின் மூலம் விலங்குகள் மற்றும் மனிதர்கள் உணவு பெறுகின்றனர்.
பல்லுயிர் பெருக்கம் என்பது, சூரிய ஒளியின்றி நடைபெறாது. உணவுச் சங்கிலியின் தொடக்கப் புள்ளி சூரிய ஒளியே ஆகும்.
நமது பால்வளி மண்டலத்திலிருந்து, பல்லாயிரம் தொலைவில் சுற்றிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரமே சூரியன்.

ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்கள் நிரம்பிய ஒரு பிரம்மாண்ட நெருப்புக் கோளம் இதுவாகும்.
இது ஒரு ஆற்றலின் பிறப்பிடம். உலகை இயக்கும் உன்னத சக்தியாகவும் இருந்து வருகிறது.
கடல் நீரோட்டங்கள், வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு காரணமாகவும் சூரியன் விளங்குகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேல், இவ்வுலகில் நீடிக்கும் ஒன்றாக இந்த சூரிய சக்தி கருதப்படுகிறது.
இந்த சக்தியை உபயோகித்து அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு, பெருமளவில் ஏற்படவில்லை.
சூரியனிடமிருந்து ஒளி மற்றும் வெப்பத்தை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தி ஆற்றலாக மாற்றும் வழிமுறையின் மூலம், சிறந்த பயன்களைப் பெற முடியும். சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் பேனல்கள் மூலம், இது சாத்தியமாகிறது.
வீடுகள், பள்ளிகள், சாலைகள், தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில், மின்சாரம் தயாரிக்க இதன்மூலம் ஏதுவாகிறது. இது புதுப்பிக்கத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சக்தி.
இந்திய அரசு, சூரிய சக்தியை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்கள், இதில் முக்கிய பங்காற்றுகின்றன.
சூரிய சக்தி என்பது, எதிர்காலத் தேவைக்கான ஒரு நிலையான ஆற்றல் ஆகும். இது நம் சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காக்களை இந்தியா நிர்மானித்துள்ளது. சூரிய மின் தகடுகளை உலகின் எந்த ஒரு மூலைக்கும், ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது.

இது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், வீட்டுத் தேவை என்று வரும் பொழுது, மக்கள், மின்சாரத் துறையைச் சார்ந்து இருக்கின்றனர்.
சூரிய சக்தியை பெறுவதற்கான செலவு அதிகம் என்றும் சிக்கலானது என்றும் மக்கள் எண்ணுகின்றனர்.
Solar panel எனப்படும் சூரிய மின் தகடுகளை வீட்டுக் கூரையின் மேல் பொருத்துவதன் மூலம், வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
பிரதமரின் ‘சூரிய வீடு – இலவச மின்சாரம்’ திட்டத்தின் மூலம் இதற்கான மானிய உதவித் தொகையை நாம் பெற முடியும்.
ஒரு கிலோ வாட்டிற்கு, 30 ஆயிரம் ரூபாய் என்று அளவில் இருந்து, இது தொடங்குகிறது. சூரிய சக்தி தகடுகளை வீட்டில் நிறுவுவதற்கு, பல்வேறு அருமையான திட்டங்கள் மூலம் குறைந்த வட்டியில், வங்கிகள் கடன் வழங்குகின்றன.
நாம் செலுத்தும் மின் கட்டணத்தைவிட, குறைந்த அளவே செலுத்தினால் போதுமானதாகும். அதுவும் வெறும் ஏழு வருடங்களுக்கு மட்டுமே.
இதற்காக நாம் செய்ய வேண்டியது, விற்பனையாளரையோ அல்லது வங்கியையோ நாடி, இதற்கான ஏற்பாட்டினை செய்துகொள்ள வேண்டும். அனைத்து நடைமுறைகளும் அழகாக, துரித கதியில் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் பெரிய சூரிய சக்தி பூங்காவான Badla Solar Park, ராஜஸ்தானில் உள்ளது.
14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவின் திறன் 2,225 மெகாவாட் ஆகும்.
இது உலகின் மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள பூங்காவாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விற்பனை, இரண்டு புள்ளி ஐந்து ரூபாய் என்ற அளவில் இருந்து தொடங்குகிறது.
நூறு சதவீத கொள்ளளவில் இப்பூங்கா செயல்பட்டால், கிடைக்கக்கூடிய வருவாயானது 12,000 கோடி ரூபாய்க்கும் மேலாகும்.
நாடு முழுவதும், இம்மாதிரியான பூங்காக்கள் நிறுவப்பட்டால், மின் பற்றாக்குறைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும்.
மேலும், தங்கம் போன்ற புதைப் படிவ எரிபொருட்களைச் சார்ந்து இருக்கும் நிலை, ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக குறையும். ஒவ்வொரு பூங்காவிலும், பத்தாயிரம் பேருக்கு மேல், வேலை வாய்ப்பு கிடைப்பதால், பெரும் சவாலாக இருக்கும் வேலையின்மை பிரச்சனைக்கும் இது தீர்வாக அமைகிறது.

ஒரு நாள், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டின் கூரையில், சூரிய தகடும், அடித்தளத்தில் பேட்டரிகளும் உட்புறத்தில் EV சார்ஜர்களும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த அழகான சுற்றுச்சூழல் அமைப்பு இனி சாத்தியமே.
சூரிய சக்தி மற்றும் எரிபொருள் துறைகளில் தன்னிறைவு பெற்ற நாடாக, இந்தியா விளங்கப் போகிறது.
இத்தகைய சூழ்நிலையில், சூரிய சக்தி அமைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம், மூன்று வருடத்திற்கு உள்ளாகவே, பணத்தை திரும்ப பெற முடியும்.
மாதம் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் வரும் மின் கட்டணத்தை கூட பூஜ்ஜியமாக குறைக்க முடியும்.
அனுமதி அளவுகளுக்கு ஏற்ப, 10 கிலோ வாட்டுக்கும் மேலாக சூரிய மின்சக்தி அமைப்புகளையும் வீட்டில் நிறுவ முடியும் வீடுகள், சாலைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல் விவசாயத்திற்கும் சூரிய சக்தி பயன்பாடு மிக அதிக அளவில் உள்ளது.
நீர் இறைப்பதற்கும், நீர் பாய்ச்சுவதற்கும் விவசாய நிலங்களில் சூரிய தகடுகளின் மூலம் பெறப்படும் மின்சாரம் உதவுகிறது.
சூரிய சக்தி அமைப்புகளை, நிலங்களில் நிறுவும் போது, நிலங்களை குத்தகைக்கு விட்டு இரட்டிப்பு வருமானம் பெற முடியும்.
அந்த நிலங்களில் அமைக்கப்படும் குடில்களுக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும். நூறு சதவீத அளவிற்கு, டீசல் மற்றும் மின் செலவுகளைக் குறைக்க முடியும்.
உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும். 30 வருடங்களுக்குப் பராமரிப்பு செலவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல துறைகளிலும் நாம் சூரிய சக்தி பயன்பாட்டை பெற முடியும் .
சூரியன் இருக்கும் வரை, சூரிய சக்தி தீர்ந்து போகாது. இது உபயோகத்தில் இருக்கும் எரிபொருளுக்கு மாற்றாக இருக்கிறது.

கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைத்து, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க வழி வகுக்கிறது. சூரியசக்தி அமைப்புகளுக்குப் பராமரிப்பு செலவு, மிகவும் குறைவாகும்.
பெட்ரோலிய பொருட்கள் – 40 முதல் 50 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். டீசல் பொருட்கள்- 50 முதல் 60 வருடங்கள் மட்டுமே நீடிக்கும்.
இயற்கை எரிவாயு பொருட்கள் – 80 முதல் 90 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். நிலக்கரியானது – 100 வருடங்களுக்கு மேல் நீடிக்கும்.
ஆனால் சூரிய ஒளியானது, மனிதகுலம் உள்ளவரை நீடிக்கும் சூரிய ஒளியை நம்பித்தான் முழு சுற்றுச்சூழல் அமைப்பும் செயல்படுகிறது.
இதுவே நிலையான ஆற்றல். இந்த சூரிய சக்தியானது, மனிதனுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியை நம் எதிர்காலம் என்று உணர்ந்து செயல்படுவோம்.
- எஸ். வாணி