ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எது அடிப்படை?

ஜங்க் ஃபுட் எதிர்ப்பு தினம் : ஜூலை 21

வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நாவிற்கு உடனடிச் சுவையையும் நேர மிச்சத்தையும் தரும் உணவுகளைத் தேடி ஓடும் சூழலில் மக்கள் இருக்கின்றன.

உடலுக்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளிலிருந்து மக்களைக் காக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 21-ம் தேதி ஜங்க் ஃபுட் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஜங்க் ஃபுட் என்றால் என்ன?

குறைந்த ஊட்டச்சத்தும், அதிகளவிலான கலோரிகள், கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளே ‘ஜங்க் ஃபுட்’ (Junk Food) அல்லது நொறுக்குத் தீனிகள் என அழைக்கப்படுகின்றன.

பீட்சா, பர்கர், பாக்கெட் சிப்ஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் செயற்கை கலர்,இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள் போன்றவை இதன் முக்கிய வகைகளாகும்.

ஜங்க் ஃபுட்டின் தீமைகள்

உடல் பருமன் (Obesity):

இவற்றில் உள்ள அதிகப்படியான கலோரிகளும் கொழுப்பும் உடலின் எடையைக் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கச் செய்கின்றன.

உலக உடல் பருமன் கூட்டமைப்பின் கணிப்பின்படி, தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் தொடர்ந்தால், 2035-2040 ஆண்டிற்குள் உலகின் மொத்த மக்கள் தொகையில் 50%க்கும் அதிகமானோர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம்:

அளவுக்கு அதிகமான உப்பும் நிறைவுற்ற கொழுப்பும் (Saturated Fat) ரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.

நீரிழிவு நோய் (Diabetes):

செயற்கைச் சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தி, இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வர வழிகோலுகின்றன.

செரிமானப் பிரச்சினைகள்:

நார்ச்சத்து துளியும் இல்லாததால், குடல் ஆரோக்கியம் கெடுவதோடு தீவிர மலச்சிக்கலையும் உண்டாக்குகின்றன.

மந்தநிலை மற்றும் கவனக்குறைவு

இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் இல்லாததால், இவற்றைச் சாப்பிட்டவுடன் உடலுக்குத் தேவையான உண்மையான ஆற்றல் கிடைப்பதில்லை.

இதனால் எப்போதும் சோர்வு, கவனச்சிதறல், மற்றும் சுறுசுறுப்பின்மை ஏற்படும்.

மாற்று உணவுகள்: நமது பாரம்பரிய ஆரோக்கியம்

ஜங்க் ஃபுட்களுக்கு மாற்றாக நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள்:

சிறுதானியங்கள்: தினை, வரகு, சாமை, கம்பு மற்றும் ராகி போன்ற சிறுதானிய உணவுகள்.

இயற்கை உணவுகள்: புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் (பாதாம், முந்திரி, வால்நட்).

ஆரோக்கியமான பானங்கள்: செயற்கைக் குளிர்பானங்களைத் தவித்து இயற்கை குளிர்பானங்களான மோர், இளநீர், பழ ஜூஸ் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.

ஜங்க் ஃபுட்களைத் தவிர்த்து, சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த இயற்கை உணவுகள் மீது ஆர்வம் காட்டுவோம்.

ஒரு நாள் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது என்பது ஒரு தொடக்கமே.

ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் நோயற்ற, சுறுசுறுப்பான நல்வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள முடியும்.

  • யாழினி
 
You might also like