கல்விச்சாலைகள் இன்று பணம் பெற்று சான்றிதழ் தரும் இடமாக மாறிவிட்டது. உண்மையில் கல்விச்சாலைகள் என்பது தவச்சாலைகள். திருவுருவ மாற்றம் நடக்கும் இடம்தான் அந்த தவச்சாலைகள்.
அப்படி இருக்க வேண்டும் என்று எண்ணும் கல்விப்புரவலர்கள் இந்த சந்தைக் காலத்திலும் இருக்கிறார்கள் என்பதுதான் நாம் பார்க்கும் அதிசயம்.
பொள்ளாச்சியில் ஒரு கல்லூரி. அது தியாககால பேராளுமையால் உருவாக்கப்பட்டது.
இன்றுவரை பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்கி சமூகத்திற்குக் கடத்துகிறது அந்தக் கல்லூரி. அதன் நிறுவனர் போற்றிய நெறிகளைக் காத்து இன்றுவரை செயல்படுவது ஒரு அறச்செயல்.
அந்தக் கல்லூரியின் தலைவராக இருந்து மறைந்த அருட்செல்வர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவர். நான் பெரிதும் மதித்த மாமனிதர். எனக்கு அவருடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
நான் ஆற்றிய பஞ்சாயத்துப் பணிகளைப் பாராட்டி என்னைப் பற்றி ஓம் சக்தி என்ற மாதச் சஞ்சிகையில் கட்டுரை எழுதியவர். அவர் காலத்திலேயே அவரின் கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றியவன்.
தற்போது அந்தக் கல்லூரியின் தலைவராக இருக்கக்கூடிய முனைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் எனக்கு மிகவும் பழக்கமானவர்.

அந்தக் கல்லூரியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு.
எங்கள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் காந்தியச் சிந்தனை என்ற ஒரு சான்றிதழ் படிப்பு இந்த ஆண்டிலிருந்து துவக்க இருக்கிறோம்.
அதைத் துவக்கி வைத்து மாணவர்களுக்கு உரையாற்ற கல்லூரியின் தலைவர் அழைப்பதாக் கூறினார் கல்லூரியின் மாணவர் நல புலத் தலைவர்.
அதோடு அந்த பாடத் திட்டத்தைப் பார்த்து, கருத்துக்களையும் கேட்டு இறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் நிற்கவில்லை, இரு பேராசிரியர்கள் பொள்ளாச்சியிலிருந்து என் வீடு தேடி வந்து விவாதித்துவிட்டு தேதியையும் முடிவு செய்துவிட்டுச் சென்றனர்.
இந்த பாடத்திட்டத்திற்கு இவர்கள் எடுக்கின்ற முன்னெடுப்புக்களை பார்த்தபோது அந்தக் கல்லூரியின் தலைவருக்கு இருந்த பார்வையையும், அந்த கல்லூரியை வழி நடத்தும் முதல்வர், புலத் தலைவர்களின் கடப்பாட்டையும் பார்த்தபோது, எதோ ஒரு தவிப்பு அவர்களிடம் இருந்ததை உணர முடிந்தது.
அந்தக் கல்லூரியின் தலைவர்கள் தியாக காலத்தைச் சேர்ந்தவர்கள். சமூகச் சேவையை பொறுப்பாக ஏற்று இன்றுவரை தொய்வின்றி நற்சமுதாயத்தை உருவாக்க பணியாற்றிக் கொண்டிருப்பதை அறிந்தவன்.
எனவே அவர்களின் அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதியைத் தந்துவிட்டு, ஜுலை 16ஆம் தேதி காலை 8 மணிக்கு பொள்ளாச்சிக் கல்லூரிக்குச் சென்றடைந்தேன்.
கல்லூரியின் தலைவர் 10 மணிக்கு வந்துவிட்டார். அந்த வளாகத்திற்குள் நுழைந்தவுடன் கல்விக் கோவிலுக்குள் நுழைந்த ஒரு உணர்வு.
கனவுகளைத் தாங்கி நிற்கும் விவேகாநந்தரின் சிலை, மிடுக்காக நடந்துவரும் தோரணையில் இருந்த பாரதியின் சிலை ஆகியவற்றைப் பார்ப்பதற்கு ஒருவித நல்லுணர்வை ஊட்டியது.
உள்ளே அருட்செல்வரின் சிலை, கல்லூரியைப் பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. எங்கும் தியாக காலத்தை நினைவுபடுத்தும் படங்கள்.
புதிய காந்தி சிலை ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. கல்லூரி வளாகத்தில் வைக்க உள்ள அந்தப் படத்தையும் கல்லூரியின் தலைவர் காட்டினார். எதிலும் அதில் உச்சத்தைத் தொட வேண்டும் என்பதை அவரிடம் பார்க்க முடியும்.
நான் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது ஒரு அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருந்தேன்.
அப்போது ஒரு அற்புதமான ஆழமான, மாணவர்களுக்குத் தேவையான ஒரு உரையை ஆற்றிச் சென்றார்.
எனவே அவரின் பண்பு, பார்வை, பக்குவம், கண்ணியம் அனைத்தும் அறிந்தவன் என்பதால் அன்று அவருடன் ஐக்கியமாவதில் எனக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

ஏன் காந்தியை மாணவர்கள் அத்தனைபேரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கினார்.
அப்பொழுது அவருக்கு இருந்த சமுதாயப் பொறுப்பை நாட்டின் மேம்பாட்டில் அவருக்கு இருந்த பார்வையை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
சந்தை உலகில் கல்வி வணிகமாகிக் கிடக்கின்ற சூழலில் தங்கள் குடும்பக் கண்ணியம் காத்து, ஊழல் மலிந்த காலத்தில் வணிகக் கல்வித் தந்தைகள் போல் இல்லாமல் என் நாடு என் பொறுப்பு,
என் சமூகம், என் பொறுப்பு என்று லாபம் பார்க்காமல் ஒரு கல்விச் சாலையை நடத்துவது என்பது நெறுப்பாற்றில் நீச்சலிடுவது போலாகும்.
அதைத் தவமாகச் செய்து கொண்டிருப்பதை அந்த ஆசிரியர்களிடம் உரையாடியபோது ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
இங்கு படித்துச் செல்லும் மாணவர்கள் வெறும் சான்றிதழைப் பெற்றுச் சென்று வேலை தேடும் மனிதராக இருக்கக்கூடாது.
அவர்கள் சமூகக் கண்ணோட்டம் கொண்ட பொறுப்புமிக்க குடிமக்களாக இருக்க வேண்டும்.
அதற்கு அவர்களைத் தயார் செய்ய இந்த பாடத்திட்டம் உதவும் என்ற அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதை நீங்கள் இன்று துவக்கி வைப்பது மட்டுமல்ல, மாலையில் அந்த பாடத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமும் உரையாடிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அத்துடன் அரங்கம் நோக்கிப் புறப்பட்டோம். அப்படிச் செல்லும்போது அங்கு எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பற்றி விளக்கினார். வைக்கப்பட்டிருந்த சிலைகள் பற்றி விளக்கினார். அப்போது அவரிடம் இருந்த ரசிப்புத் தன்மையை உணர முடிந்தது.
ஒவ்வொன்றிலும் எவ்வளவு கவனம் கொடுத்து செய்து வைத்திருக்கிறார்கள் என்பதனை அறிய முடிந்தது.
என்னை சந்திக்க வந்த ஆசிரியர்கள் கல்லூரியின் தலைவர் எவ்வளவு ஆர்வமாக இருப்பார் என்பதை ஒரு நிகழ்வுக்கு போஸ்டர் அழைப்பிதழ் அடிப்பதுவரை தன் கவனத்தை தருவார் என்று கூறினார்கள்.
அந்த அழைப்பிதழில் காந்தி படம் போட வேண்டும் என்றால் எந்த காந்தி படத்தைப் போட வேண்டும் என்பது வரை ஆலோசனை வழங்குவார் என்று கூறினார்கள்.
இன்று மேய்ப்பதை தலைமைத்துவமாக கருதிச் செயல்படும் காலத்தில் எது வழிகாட்டும் தலைமை என்பதற்கு அவர் உதாரணமாக இருந்து அந்தக் கல்லூரிக்கு வழிகாட்டுவதை உணர முடிந்தது.

அரங்கத்திற்குள் சென்றால் ஒரு அமைதியான தியானச் சூழல். பெருங்கூட்டம். அந்த அரங்கம் நிறைந்திருந்தது.
அனைவரும் முதலாமாண்டு மாணவர்கள் என்றனர். அந்த அரங்கில் நிலவிய அமைதி எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கோயமுத்தூரில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்குச் சென்றால் மாணவர்களின் முகத்தைப் பார்த்தால் மிகப் பளபளப்பாக பொலிவுடன் இருப்பார்கள். அவர்கள் அமைதியாக இருப்பார்கள்.
இங்கு அமர்ந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். கிராமங்களிலிருந்து, சாதாரணக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்களது முகங்களைப் பார்த்ததும் தெரிந்தது.
அவர்களை யாரும் விசில் ஊதி அமைதிப்படுத்தவில்லை. மிகவும் அமைதியாக, ஆர்வமாக இருந்தது எனக்கு உற்சாகத்தைத் தந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வை துவக்கினர். விளக்கேற்றி, வரவேற்புரையை முதல்வர் ஆற்ற விழா ஆரம்பித்தது.
கல்லூரியின் தலைவர், ஏன் இந்த நிகழ்வு, ஏன் இந்தப் பாடத் திட்டம், இதை எதற்காக நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை மிகத் தெளிவாக தலைமை உரையில் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் புலத் தலைவர், இந்தப் பாடத்திட்டம் எப்படி உருவாக்கப்பட்டது, எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்பதனை விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து என்னைப் பேச அழைத்தனர்.

பெரும்பாலும் மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும் கல்லூரியோ, பல்கலைக் கழகமோ, அவைகளின் பின்புலமோ அறியாமலேயே படித்து பட்டம் வாங்கிக்கொண்டு சென்று விடுவார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் படிப்பார்கள். ஆனால், கல்லூரியின் வரலாறே அவர்களுக்குத் தெரியாது.
நான் மேற்கத்திய நாடுகளில் மாணவர்களிடம் உரையாடும்போது ஏன் இந்தக் கல்லூரியை தேர்ந்தெடுத்தோம், பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தோம் என்று மாணவர்கள் மிகத் தெளிவாகக் கூறுவார்கள். இந்தியாவில் அப்படி மாணவர்கள் கூறுவது இல்லை.
ஆகையால் இந்தக் கல்லூரியின் பின்புலம், அதன் தலைவர்களாக இருந்தவர்கள், இருப்பவரின் நோக்கங்கள், குறிக்கோள்கள் என்ன என்பதை அவர்களிடம் கூறிவிட்டு, காந்தியை ஏன் நாம் படிக்க வேண்டும் என்றால் காந்திக்கு பெருமை சேர்க்க அல்ல.
நமக்கு அவர் தேவைப்படுகிறார். நாம் இன்று வாழும் காலம் ஒரு சந்தைக்காலம். அது சுயநலம் தேடும் காலம், சுகபோகம் அனுபவிக்க புலன்களைத் தூண்டிவிடும் காலம். எனவே நாம் முதலில் மனிதராக வாழ முயற்சிக்க வேண்டும்.
நாம் இந்த நாட்டில் குடிமகனாக குடிமகளாக வாழ நம் பொறுப்புக்கள் தெரிந்து வாழ்வதன் மூலம் சமூகம் தேடும் மனிதராக நாம் வாழ முடியும்.
நாம் கண்ணியமான, பக்குவமான மானுட வாழ்க்கை வாழ நாம் நம்மை செதுக்கிக் கொள்ள காந்தி தன் வாழ்க்கை மூலம் வழிகாட்டுகிறார்.

மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு நான் என் குடும்பத்தில் பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும்.
பள்ளியில் கல்லூரியில், பொறுப்புமிக்க மாணவனாக இருக்க வேண்டும்.
அதேபோல் நான் வசிக்கும் இடத்தில் சமூகத்திற்கு பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.
பொறுப்புமிக்க மனிதராக நாம் எங்கும் செயல்பட்டால் நாம் சமூகம் தேடும் மனிதர். அப்படி பொறுப்புமிக்க மனிதராக நாம் வாழ வழிகாட்டுபவர் காந்தி.
கருப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியப் போராளி மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் காந்தியைப் பற்றி இந்தியாவை சுற்றிவிட்டு அமெரிக்கா செல்லுமுன் அகில இந்திய வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
“இந்தியர்கள் காந்தியை சுதந்திரப் போராட்டத்திற்கான மனிதராகவே பார்க்க பழகிவிட்டனர்.
அவர் இந்தியாவிற்கான மனிதர் அல்ல. அவர் உலக சமூகத்திற்கானவர், பிரபஞ்சத்திற்கானவர்.
அவர் வாழ்க்கைக்கு மாற்று வழி, புது வழி காட்டியவர். அதற்கு இந்தியாவை களமாகப் பயன்படுத்த எண்ணியவர்.
மானுட வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இந்தியர்களை வாழ வைத்து உலகுக்கு வழிகாட்ட வேண்டும் என்று எண்ணியவர்” என்று கூறினார்.
அவர் நம் வாழ்வை எப்படி பொருருள்ளதாக மாற்ற வேண்டும், அதை எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர்.
சாதாரண குறையுடைய மனிதராக இருந்து, முழுமனிதராக மாறி, உயர்ந்த மனிதராக, உத்தமராக மாறி, மகாத்மாவாக உயர்ந்ததை அவருடைய சுயசரிதையை முறைமையுடன் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
அதைப் படிப்பது ஆசிரியருக்காக அல்ல. அது நமக்காக. இந்தப் பாடத்திட்டத்தை படித்தால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்தி நம் வாழ்வில் பார்த்தால் நாம் ஒவ்வொரு நாளும் நாம் மாறுவதை, உயர்வதை, மேம்படுவதை நம்மால் உணர முடியும்.

அதற்கு காந்தி சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் ஒருசில ஆசிரமங்களுக்குச் சென்றால், அங்கு தங்கிப் பயின்றால் ஒரு சில மாற்றங்கள் நமக்குள்ளே வந்துவிடும்.
அதைத் தொடர்ந்தால் பல மாற்றங்கள் நம்முள் வருவதை உணர முடியும்.
எனவே வகுப்பறையில் காந்தியத்தை கற்பதோடு, காந்தியம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடங்களுக்கு சென்று வருவதன் மூலம் நம் சிந்தனையில், நடத்தையில், செயல்பாடுகளில் மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும்.
எனவே இந்தப் பாடம் நமக்கானது. சான்றிதழுக்கானது அல்ல. இந்தப் பாடத்திட்டத்தை கற்கும்போது நாம் விழிப்புடன் உணர்வுடன் நான் மாறவேண்டும், நான் மேம்பட்டவராக மாற வேண்டும் என்று நோக்குடன் பயில வேண்டும்.
நான் அடிக்கடி இங்கு வந்து உங்களுடன் உரையாட ஒரு உறுதிமொழியையும் தருகிறேன் எனக் கூறி என் உரையை நிறைவு செய்தேன்.
அதன் பின் அந்தக் கல்லூரியில் படித்த ஒருவர், ஆனைமலையில் மகாத்மா காந்தி ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
அவர், தான் எப்படி மாற்றம் அடைந்தேன் என்பதை விளக்கிவிட்டு, மாணவர்கள் தங்கள் ஆசிரமத்திற்கு வரவேண்டும் என அழைப்புத் தந்துவிட்டு உரையை நிறைவு செய்தார்.
அடுத்து கல்லூரித் தலைவர் ஒரு உறுதிமொழியைப் படிக்க, மாணவர்கள் படித்து ஏற்றுக் கொண்டனர்.
“இந்த நாடு சுதந்திரம் அடைந்து பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், நீங்கள் காண விரும்பிய இந்தியாவாக இல்லை.
எனவே, அதனை உங்கள் வழியில் அடைய இன்னொரு விடுதலைப் போராட்டத்தை நாங்கள் செய்து அந்த இந்தியாவை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை எடுத்த பிறகு நன்றி நவிலலுடன் இனிதே விழா நிறைவுற்றது.
மாலையில் ஆசிரியர்களுடன் ஒரு மணி நேரம் உரையாடிவிட்டு ஊர் திரும்பினேன்.
அந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஒரு தவத்தில் இருந்ததுபோல் ஓர் உணர்வைத் தந்தது.