உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமா?

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவது குறித்த பேச்சுக்களும் அப்படி நடத்தப்பட்டால், எப்படிப்பட்ட அரசியல் கூட்டணி அமையும் என்பதைப் பற்றியும் பொது வெளியிலும் பேசுகிறார்கள், ஊடக வெளியிலும் பேசுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை தமிழகத்தில் மிகப்பெரும் மாநகராட்சியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒவ்வொரு வார்டிலும் எப்படிப்பட்ட பெயரை எடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே இங்கு உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்ட லட்சணத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

தங்களது வார்டில் எதாவது ஒரு வீட்டின் முன்னால், மண் குவிக்கப்பட்டு எதாவது வேலை நடக்கிறதா உடனே அந்தப் பகுதி கவுன்சிலர் அங்கு சென்று மொய் பணம் வசூலிப்பது மாதிரி ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டு நிற்பார்.

அவருக்கு அந்தத் தொகையைக் கொடுத்த பிறகே வீட்டு வேலையை நகர்த்த முடியும்.

சாலையைப் புதுப்பிக்க வேண்டுமா? மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டுமா?

இப்படி எல்லாவற்றுக்கும் கவுன்சிலர்கள் தலையிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டதை மாநகராட்சியில் உள்ள பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

உதாரணமாக, சென்னையில் மழைநீர் வடிகால் பணித்திட்டத்திற்காக நான்காயிரம் கோடி நிதி அளிக்கப்பட்டதாகவும் 900 கோடி அளவுக்கே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்.

முதல்வர் விஜய் டெல்லி சென்றபோதே இந்தக் குற்றசாட்டை முன்வைத்தார் மத்திய நிதியமைச்சர். இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்றுவரை திமுக தரப்பிலிருந்து பதிலில்லை.

அதோடு, சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் சாலைகள் மிகவும் ஒழுங்கற்ற நிலையில் இருந்துகொண்டிருக்கும் நிலையில், சாலையைச் சீர்திருத்த வேண்டிய பொறுப்பிலிருக்கிற சென்னை மேயரோ, அவ்வப்போது அதே சாலையில் உட்கார்ந்து விஜய் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி கைதாகி உடனே விடுவிக்கவும் படுகிறார்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சாலைக் கட்டமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், தவெக அரசுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் அடிக்கடி தாக்குதல்கள் எல்லாம் ஒரு புறம் நடக்கும்போது, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இதே கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள்?

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கூட நல்ல புரிதல் வந்திருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசுக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குமான இடைவெளிதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இன்னும் சில மாதங்கள்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடு இருக்கிறது என்றாலும், அதற்குள் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து அதற்கான தேர்தலை நடத்தமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பும் வெகுவாக மக்களிடையே இருந்து வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல்களை உடனே நடத்தினால், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைவிட கூடுதல் வெற்றியை, தவெக கூட்டணி ஈட்டும்.

புதிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த பல்வேறு வேலைகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் நடக்கும். 

அதனால் சில மாதங்களுக்குப் பிறகு நடத்த இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவது தவெக அரசுக்கும் நல்லது. வாக்காளப் பெருமக்களுக்கும் நல்லது.

– அ. தமிழரசன்

You might also like