ஒரு கப் ஐஸ்கிரீம் 5 லட்சமா? குளுகுளு சுவையின் உலக வரலாறு!

ஜுலை 19: தேசிய ஐஸ்கிரீம் தினம்

கோடைக் காலத்தின் வெயிலைத் தணிக்கும் அமிர்தமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பு உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது.

உலகளவில் இந்த சுவையான உணவைக் கொண்டாடுவதற்காகவே ஒரு தனி நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவே “தேசிய ஐஸ்கிரீம் தினம்”.

தேசிய ஐஸ்கிரீம் தினத்தின் வரலாறு

தேசிய ஐஸ்கிரீம் தினம் முதன்முதலில் அமெரிக்காவில் தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

யார் தொடங்கினார்கள்?:

அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), அமெரிக்க மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐஸ்கிரீமை விரும்பி உண்பதை உணர்ந்தார்.

இதன் விளைவாக அவர் 1984 ஆம் ஆண்டில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை “தேசிய ஐஸ்கிரீம் தினம்” (National Ice Cream Day) எனக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், ஜூலை மாதம் முழுவதையும் “தேசிய ஐஸ்கிரீம் மாதம்” என்றும் அறிவித்தார்.

அமெரிக்காவில் தொடங்கினாலும், இந்தத் குளுகுளு தின்பண்டத்தின் மீதான உலகளாவிய காதல் காரணமாக, தற்போது பல்வேறு நாடுகளிலும் ஜூலை மாதத்தின் இந்த குறிப்பிட்ட நாளில் ஐஸ்கிரீம் நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகளை வழங்கி இந்த நாளைக் கொண்டாடுகின்றன.

பிரபலமான ஐஸ்கிரீம் வகைகள்

உலகெங்கிலும் பல்வேறு சுவைகளிலும், தயாரிப்பு முறைகளிலும் ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான சில வகைகள்:

ஜெலாட்டோ (Gelato):

இது இத்தாலிய நாட்டு பாரம்பரிய ஐஸ்கிரீம் வகையாகும்.

சாதாரண ஐஸ்கிரீமை விட இதில் பாலின் அளவு அதிகமாகவும், பாலாடைக் கட்டியின் (Cream) அளவு குறைவாகவும் இருக்கும்.

இதனால் இது மிகவும் அடர்த்தியான சுவையுடன் (Dense Texture) இருக்கும்.

சாஃப்ட் சர்வ் :

பொதுவாக மெஷின்களில் இருந்து சுழன்று விழும் மிகவும் மென்மையான ஐஸ்கிரீம் வகை இதுவாகும்.

இதில் தயாரிப்பு முறையின் போது அதிக காற்று உட்புகுத்தப்படுவதால், இது மிக மென்மையாக நாக்கில் கரையும்.

சர்பெட் :

பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமல், வெறும் பழச்சாறு மற்றும் சர்க்கரை பாகு கொண்டு செய்யப்படும் ஒரு ஐஸ்கிரீம் வகை. பால் ஒவ்வாமை (Lactose Intolerance) உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

ரோல்டு ஐஸ்கிரீம் (Rolled Ice Cream):

தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற இந்த வகை, உறைந்த இரும்புத் தட்டில் திரவப் பாலை ஊற்றி, பழங்களை நறுக்கிச் சேர்த்து, உடனுக்குடன் உறைய வைத்து சுருள் வடிவில் (Rolls) தட்டில் பரிமாறப்படும்.

குல்ஃபி (Kulfi):

இந்தியாவின் பாரம்பரிய ஐஸ்கிரீம். பாலை நீண்ட நேரம் சுண்டக் காய்ச்சி, அதில் ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, பாதாம் சேர்த்து குளிரூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சாதாரண ஐஸ்கிரீம்களை விட இது உருக அதிக நேரம் எடுக்கும்.

உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் வகைகள்:

சுவைக்காக மட்டுமன்றி, தங்களின் அந்தஸ்தைக் காட்டுவதற்காகவும், அரிய வகை பொருட்களைப் பயன்படுத்தியும் சில ஐஸ்கிரீம்கள் உலக சாதனை படைக்கும் விலையில் விற்கப்படுகின்றன.

இதில் முதலாவதாக இருப்பது பியாகுயா (Byakuya – Cellato, ஜப்பான்): இதுதான் உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஜப்பானின் ‘செல்லாட்டோ’ நிறுவனம் தயாரிக்கும் இந்த ஐஸ்கிரீமின் ஒரு சிறிய கோப்பையின் விலை சுமார் 6,696 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் தோராயமாக ஐந்து லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்க்கும் மேல்.

இத்தாலியின் அரிய வெள்ளை உணவுக்காளான் (White Truffle), இயற்கை சீஸ் மற்றும் உண்ணக்கூடிய தங்க இலைகள் (Edible Gold Leaf) கொண்டு இது செய்யப்படுகிறது.

ஃபிரோஸன் சாக்லேட் ஹாட் (Frrrozen Haute Chocolate – நியூயார்க்):

அமெரிக்காவின் செரெண்டிபிட்டி உணவகத்தில் கிடைக்கும் இதன் விலை சுமார் 25,000 அமெரிக்க டாலர்கள்.

இதில் அரிய வகை கோகோ கலவைகள், ஐந்து கிராம் எடையுள்ள இருபத்தி மூன்று கேரட் உண்ணக்கூடிய தங்கம் மற்றும் வைர நெக்லஸ் ஆகியவை சேர்த்து வழங்கப்படுகின்றன.

ஸ்ட்ராபெரி அர்னாட் (Strawberry Arnaud – நியூ ஆர்லியன்ஸ்):

இதன் விலை சுமார் 1.4 மில்லியன் டாலர்கள்.

விலை உயர்ந்த ஸ்ட்ராபெரிகள், வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் மது சாஸ் ஆகியவற்றுடன், இதன் முதன்மை விலைக்குக் காரணமாக ஏழு கேரட் இளஞ்சிவப்பு வைர மோதிரம் (Pink Diamond Ring) இதனுடன் பரிசாக வழங்கப்படுகிறது.

அப்பாடியோ இவ்வளவு விலையா? என வியக்க வைத்தாலும் மலிவான தெருவோரக் குச்சி ஐஸ் முதல் லட்சக்கணக்கில் விற்கப்படும் தங்க ஐஸ்கிரீம்கள் வரை இதன் வடிவங்கள் மாறினாலும், அதனை நாவினில் வைக்கும் போது நமக்குத் தரும் மகிழ்ச்சி ஒன்றுதான்.

இந்த தேசிய ஐஸ்கிரீம் தினத்தில் நமக்கு பிடித்தமான சுவையில் ஒரு ஐஸ்கிரீமைச் சுவைத்துப் பார்க்கலாமா…!

  • யாழினி சோமு
You might also like