தினசரியைக் கையிலெடுத்தவுடன் முதல் பக்கத்தைப் படிப்பதா அல்லது இறுதிப் பக்கத்தில் இருந்து முன்னோக்கிப் புரட்டுவதா என்கிற குழப்பம் வெகுசிலருக்கு வரும்.
ஏனென்றால், ‘எது தலைப்புச் செய்தி’ என்று அன்றைய தினத்தின் மிகமுக்கியச் செய்தியை அறிந்துகொள்வதில் சிலருக்கு ஆர்வமிருக்கும்.
‘எல்லாமே முக்கியம்தான்’ அல்லது ‘எதுவுமே முக்கியமில்ல’ என்கிற தொனியில், ‘விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்’ என்பவர்கள் பின்னாலிருந்து பக்கங்களைத் திருப்புவார்கள்.
இவர்களுக்கு நடுவே, ‘எனக்கு இதுதான் பிடிக்கும்’ என்று குறிப்பிட்ட இலக்கு நோக்கிப் பாயும் உற்சாகத்தில் தினசரியைக் கசக்கிப் பிழிபவர்கள் கொஞ்சம் பேர் உண்டு.
தலையங்கம், பேஜ் 3, சினிமா, வட்டாரச் செய்திகள் என்று அவர்கள் பல திசைகளில் கிளைவிரித்துக் கிடக்கின்றனர். அவர்களில் ஒருபகுதியினர் தான் ‘ராசிபலன்’களைத் தேடிப்பிடித்துப் படிப்பவர்கள்.
’இன்னிக்கு நம்ம நட்சத்திரத்துக்கு, ராசிக்கு என்ன பலன்’ என்றறியாவிட்டால், இவர்களுக்கு ‘விழிப்பு’ திருப்தி தராது.
ஒருவேளை தினசரி வரத் தாமதமானால், ‘ஏன் இப்படி ஆரம்பிக்குது இந்த நாளு’ என்று பதற்றமாவார்கள்.
தொலைக்காட்சி வந்தபிறகு, இவர்களில் சிலர் விடியற்காலையில் ராசிபலன் பார்க்கவும் (வாசிப்பவர்களை அல்ல) அதன் முன்னே அமர்ந்தார்கள்.
‘தினசரி ராசிபலன்லாம் வாய்ப்பே இல்ல. குறிப்பிட்ட காலத்திற்கு இன்னின்ன பலன்கள் இருக்கும்னு சொல்லலாம்.
அதுவும் தனிப்பட்ட நட்சத்திரம், ராசி, ஜாதக அமைப்புன்னு பல விஷயங்களை வச்சித்தான் அதையே சொல்ல முடியும்.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களுக்கே ஒரே மாதிரி ஜாதக அமைப்பு இருக்காதுங்கறபோது, ஒரே தேதியில பிறந்தவங்க, நட்சத்திரம் ராசியில பிறந்தவங்களுக்கு அப்படிப் பொத்தம்பொதுவா எப்படிச் சொல்ல முடியும்’ என்று சொல்கிற ஜோதிடர்கள் கணிசம்.
ஆனால், அதையும் மீறித் தினசரிகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், இணையப் பக்கங்களில் ‘ராசிபலன்’ சொல்லியே முகமறியச் செய்த ஜோதிட நிபுணர்கள் பலருண்டு.
சரி, விஷயத்திற்கு வருவோம். மேற்சொன்னவற்றை மறந்துவிட்டு, ‘இங்கி பிங்கி பாங்கி’ என்றவாறே தினசரியின் குறிப்பிட்ட பக்கத்தைத் திறந்தால், அங்கே ராசிபலன் இருந்தால், அதில் நமக்கு ‘வேண்டிய’ (?!) நட்சத்திரம், ராசி, தேதிக்கு நேரே சில பலன்கள் சொல்லப்பட்டிருந்ததை உடனடியாகக் கவனிக்க நேர்ந்தால் என்ன ஆகும்?
அப்படிப் பார்த்தபோது, குறிப்பிட்ட பலன்களின் பக்கவாட்டுத் தலைப்பாக ‘அதிகமாகப் பேசக் கூடாது’ என்றிருந்தது.
‘ஐயையோ, நாம பேசறது எல்லாமே அதிகமா தானே இருக்கும்’ என்ற எண்ணம் தான், அதனைக் கண்டதும் எவருக்கும் பளிச்சிடும்.
முந்தைய நாள், அதற்கு முந்தைய நாள் ‘அதிகமாக’ப் பேசியது என்று தொடங்கி முன்ஜென்மம் வரை சம்பவங்கள் படையெடுக்கும்.

அதிகமாகப் பேசுவதென்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடாது.
விடாமல் ஒருவர் பேசியும் அந்தப் பேச்சு அயர்ச்சி தரவில்லை என்றால், அந்த நபரைப் ‘பேச்சு வள்ளல்’ என்றழைக்கலாம். கொஞ்சம் பிடிக்காவிட்டால், ‘என்னா வாயி’ எனலாம்.
கொஞ்சம் வஞ்சப்புகழ்ச்சியாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘வாயால வடை சுடுற ஆளு’ என்று புகழலாம்.
இன்னும் சிலர் ‘சூரியன் கிழக்கில உதிச்சதா இன்னிக்கு’ என்று கேள்வி கேட்டால் கூட, ’ஆமாம்’, ‘இல்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லமாட்டார்கள். ஏதேதோ கதைகளைச் சொல்லி நீட்டி முழக்குவார்கள்.
அந்தக் கதைகளில், அதே நபருக்கு எதிரான ஆயுதங்களும் விரவிக் கிடக்கும். அப்புறமென்ன, அந்தப் பேச்சு ஒரு ‘வார்த்தைப் போரு’க்கு வழிவகுத்துவிடும்.
ஈர்க்கிறதா, உகந்ததாக இருக்கிறதா, கேள்விகளுக்குப் பதிலளிக்கிறதா, மனதைத் தொடுகிறதா என்று பல அளவுகோல்களைக் கொண்டு ஒருவரது பேச்சின் பலத்தை அறியலாம்.
அப்படியிருக்கும்பட்சத்தில், பேச்சின் அளவு ஒருபொருட்டில்லை. அதேநேரத்தில், அதிகமாகப் பேசுவது என்பது தொடர்ந்து உரையாடுவதுதான் என்றில்லை.
ஓரிரு வார்த்தைகளில் பதில் சொன்னாலும், எதிரேயிருக்கும் மனிதர்களுக்கு ஒவ்வாமையைத் தருகிற பட்சத்தில் அது ‘அதீதமாகத்தான்’ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
சில நேரங்களில் ‘ஆமா, அப்படித்தான், சரி, ஒத்துக்கிறேன், ஓகே, கேட்காம எப்படியிருப்பேன்’ என்று ‘அடிபணிவது’ கூட ‘அதீதமாக’ எடுத்துக்கொள்ளப்படுவதும் உண்டு.
காரணம், முந்தைய பேச்சு அந்த ரகத்தில் இருக்கும். அதற்குப் பக்கம் பக்கமாகப் பதில் சொல்வதை விட்டுவிட்டு ‘சரி பேசிட்டியா, பேசுன வேகத்துல போவியா, அதை விட்டுட்டு பதிலை எதிர்பார்த்துட்டிருக்க’ என்று ‘வடிவேலு’ பாணியில் மேற்சொன்ன வார்த்தைகள் எதிரே இருப்பவர்களின் மனங்களில் எதிரொலிக்கும்.
பிறகு, அது ‘அதீத பேச்சாக’த்தான் தோற்றமளிக்கும்.
‘அவன் எதைக் கேட்டாலும் கல்லுளிமங்கனாட்டம் பதில் சொல்லாம இருப்பான்’ என்று சிலர் கெட்டபெயரைச் சம்பாதித்துக் கொள்வார்கள். அந்தமாதிரியான சூழலில், ‘மௌனம்’ கூட ‘அதீதம்’தான்.
இத்தனையும் மனதில் நிழலாடுகிறபோது, ‘அதிகமாகப் பேச வேண்டாம்’ என்பதை எப்படி மனதுக்குள் ஏற்றிக்கொள்வது? அதனை அப்படியே பின்பற்றுவது? அப்படிப்பட்ட தருணங்கள், அவ்வப்போது இப்படி வாய்த்துவிடும்.
அப்போதெல்லாம் ‘இந்த ராசிபலன் எழுதறவங்களே இப்படித்தான்.. குத்துங்க எசமான்.. குத்துங்க’ என்று மனதாரச் சொல்லிவிட்டுக் கடந்து செல்பவர்கள் வெகு குறைவு.
அதனை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், வீட்டிலும் வெளியிலும் ‘வாங்கிக் கட்டிக்கொள்பவர்கள்’தான் அனேகம்.
’நம்ம கதைதான் இப்படி’ என்று அடுத்தடுத்த பலன்களைப் படித்துப் பார்த்தால், ’பிரிந்த நண்பர்கள் தேடி வருவார்கள்’, ‘முதல் மரியாதை கிடைக்கும்’, ’அந்தரங்க விஷயங்களைப் பகிர வேண்டாம்’,

’உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள் மீது ஒரு கண் வைப்பது நல்லது’, ’எதிரிகள் விலகியோடுவார்கள்’, ‘பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும்’, ‘கூடுமானவரை திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டாம்’ என்று வெவ்வேறு பலன்கள்.
’இந்த பலன்கள் அனைத்தும் அனைத்து வயதினருக்கும் எப்படிப் பொருந்தும்’ என்ற கேள்வி எழலாம். அங்குதான் புள்ளி வைத்துக் கோலம் போடுவதில் வல்லவர்கள் இந்த தினசரிப் பலன்கள் எழுதும் எழுத்தாளர்கள் (?!) கம் ஜோதிடர்கள்.
அதற்கேற்றாற்போல, ஒரு தூண்டிலை வீசுவார்கள். ’அவங்கவங்களுக்கு பொருந்துற பலன்களை மட்டும் பார்க்கணும்’ என்பதே அது.
இப்போது, நம்மைத் தடுத்து நிறுத்திய அந்த வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன். ‘அதிகமாகப் பேசக் கூடாது’ என்ற பலன் போட்டிருப்பது, நமது இணையருக்குத்தான்.
அசை போட்ட அத்தனை விஷயங்களையும் மறந்து, ‘ஆஹா, இது மாதிரி சந்தர்ப்பமெல்லாம் அல்வாவாச்சே’ என்று ‘மனதின் குரல்’ கும்மாளமிடுவது எனக்கு மட்டும்தானா..!?
- சரோ