இந்திய ரயில்வே கடந்து வந்த பாதையும் நவீனமயமும்!

பயணங்கள் எப்போதும் இனிமையானவை. அதிலும் ரயில் பயணங்கள் சுவாரசிய அனுபவத்தை தரக்கூடியவை.

கார் அல்லது பேருந்தில் பயணம் செய்வதைவிட ரயிலின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பது அலாதியான சுகத்தை தரும்.

ஒவ்வொருவரின் குழந்தை பருவ நினைவுகளும் ரயில் பயணங்களை ஒட்டியே பெரும்பாலும் இருந்திருக்கும்.

வயல்வெளிகள், மலைகள் மற்றும் ஆறுகள் கடந்து செல்லும்போது மனம் கொள்ளும் உற்சாகத்தை வார்த்தைகளில் வடித்து விட முடியாது.

குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதால் இது உலகெங்கிலும் உள்ள மக்களின் விருப்ப தேர்வாக உள்ளது.

இன்று நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக வளர்ந்து நிற்கிற இந்தியன் ரயில்வே சுமார் 173 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய முயற்சியாகவே தொடங்கப்பட்டது.

பம்பாய் – தானே இடையேயான 34 கிலோமீட்டர் தூரத்தை 1853 ஆம் ஆண்டு கடந்தது இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.

அக்காலகட்டத்தில் போக்குவரத்து நடைமுறைக்கான விதிமுறைகளும் அனுமதியும் வழங்கப்பட்டதால் போரி பந்தர் ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.

21 குண்டுகள் முழங்க மக்களின் ஆரவாரத்தோடு ரயில் புறப்பட்டது.

இந்த வரலாற்று நிகழ்வை காண மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

14 பெட்டிகளில் ஏறக்குறைய 400 பேர் பயணித்த அந்த ரயிலை நீராவி இன்ஜின்கள் இழுத்துச் சென்றன.

அதன் பின்னரும் நீண்ட காலம் வரை நீராவி மற்றும் டீசல் இன்ஜின்களை சார்ந்தே ரயில் போக்குவரத்து இருந்து வந்தது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் 42 ரயில்வே அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியன் ரயில்வே உருவாக்கப்பட்டது.

1985 ஆம் ஆண்டிற்கு பின்னர் நீராவி இன்ஜின்களின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டது.

தொழில் நுட்பங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை காரணமாக 21 ஆம் நூற்றாண்டில் அபார வளர்ச்சியை இந்திய ரயில்வே எட்டி இருக்கிறது.

ரயில் வடிவமைப்பு, பயணிகள் வசதி, செயல்பாட்டு திறன், தடையற்ற இணைப்பு ஆகிய அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் பயணிகளின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நாட்டில் 99 சதவீத ரயில் வழித் தடங்கள் மின்மயமாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 120 கோடி லிட்டர் டீசல் பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

இதில் பிற நாடுகளை விடவும் முன்னணியில் இந்தியா உள்ளது. தற்போது நாள்தோறும் 25 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாட்டில் பல முக்கிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன.

வந்தே பாரத் விரைவு ரயில் :

2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட முதலாவது ஓரளவு அதிவேக ரயிலாகும்.

தற்போது வரை ஒரு லட்சம் பயணங்களை நிறைவு செய்திருக்கும் இந்த ரயில் சேவை பல கோடிக்கும் மேற்பட்டோரை சுமந்து சென்றுள்ளது.

நடப்பாண்டில் படுக்கை வசதிகளும் இதில் செய்து தரப்பட்டுள்ளன அதிநவீன தானியங்கி கதவுகள், ‘கவச்’ என்ற விபத்து தடுப்பு அமைப்பு, wi-fi வசதிகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் தானியங்கி படிக்கட்டுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

மேலும் கழிவுகளை சேமிக்கும் நவீன உயிரிக் கழிவறைகள் மற்றும் காற்று சுத்திகரிப்பு கருவிகளும் இதில் உள்ளன.

அம்ரித் பாரத் ரயில் :

ஏழை எளிய மக்களுக்காக இந்தியன் ரயில்வேயால் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த கட்டண அதிவேக ரயிலாகும்.

push – pull தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ரயில் எளிதாக வேகம் எடுக்கவும் நிறுத்தவும் முடியும்.

சாதாரண முன்பதிவில்லாத பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே உள்ளன.

LED விளக்குகள், மேம்படுத்தப்பட்ட கழிவறைகள் மற்றும் மொபைல் சார்ஜர் வசதிகள் ஆகியவை இதில் உள்ளன

பாரத் கௌரவ் ரயில் :

நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சுற்றுலா பயணிகளுக்காகவே இந்த ரயில் தொடங்கப்பட்டது.

தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து ஆகியவை ஒரே தொகுப்பாக வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.

ஆன்மீக தலங்களை சுற்றிப் பார்க்கும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு புதுமைகள் பலவற்றை தன் உள்ளே புகுத்தி புறப்படும் ரயில்வே துறை, மக்களின் பயணங்களை இனிதாக்குகிறது என்றால் அது மிகையில்லை.

S. வாணி

You might also like