பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!

எப்போதும் அந்தப் பயணம் மனதில் உருவாக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியுமே என்னை எழுதவைக்கிறது.

இரு மாதங்களுக்கு முன்பு பூவிருந்தவல்லி வழியாக ஏலகிரி, ஜோலார்பேட்டை சென்றுவந்த அனுபவத்தை இப்போதுதான் எழுத நேர்கிறது. காலம் கைகூடி வரவேண்டும்.

ஜோலார்பேட்டையில் பரிதி பதிப்பக அலுவலக திறப்பு விழா. என் ‘கிராமத்து ரயில்’ நூல் வெளியீடும். நண்பர் இளம்பரிதியின் அன்பு அழைப்பு.

விழாவுக்கும் போகவேண்டும், அப்படியே ஏலகிரியையும் பார்க்கவேண்டும் என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அல்ல பழங்கள் தந்தவர் அன்பிற்குரிய நண்பர் உதயகுமார்.

இந்தப் பயண நேரத்தை ராஜாவின் பாடல்களால், அழகிய உரையாடல்களால் இனிதாக்கியவர்.

அன்று காலையில் நானும் சங்கரும் மண்ணூரில் உள்ள அவரது பேக்டரிக்குச் சென்றோம். அங்கிருந்து நண்பகலில் ஏலகிரி நோக்கிப் புறப்பட்டோம். வெயில் தணிந்து வானிலை மாறியிருந்தது. மழைவருவது போன்ற சூழல். வானில் மேகங்கள் திரண்டுகொண்டிருந்தன.

ஸ்ரீபெரும்புதூர் வரை ஒரு கிராமத்துச் சாலையில் சென்றோம். வழியெங்கும் கால்நடைகள் வருவதும் போவதுமாக இருந்தன.

சென்னை டு பெங்களூர் ஹைவே எப்போதும் அழகானது. இருபுறமும் மரங்களும் செடிகொடிகளுமாக சில இடங்களில் பூக்களுமாக இயற்கையின் காட்சிகள் நீளும்.

எங்களுக்கு முன்பே புறப்பட்டிருந்தார் உதயகுமாரின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் செந்தில். உடனே லைவ் ப்ராட்காஸ்ட்டும் தொடங்கியது. எங்கே சென்றுகொண்டுள்ளார்கள் என்பதை சொல்லிவந்தார்கள்.

நாங்கள் காஞ்சிபுரம் தாண்டும்போது அவர்கள் வேலூரை நெருங்கினார்கள். வேலூரில் புறப்படும்போது அவர்கள் ஏலகிரியின் அடிவாரத்தில் இருந்தார்கள்.

மிதமான வானிலையும் பாடல்களும் பயணத்திற்கு இனிமை சேர்த்தன. வாலாஜாவில் மெரினா டீ ஸ்டால். “வாணியம்பாடி ஸ்பெஷல் டீ போடுங்க” என்றார் உதயகுமார். மாஸ்டர் புரியாமல் முழித்தார்.

“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா” என்றார் காமெடியாக சங்கர்.

எனக்கும் புரியவில்லை.

“நாங்க போடுவதெல்லாம் வாணியம்பாடி டீதான் சார்” என்றார் சிரித்துக்கொண்டே.

மூவரும் குடித்தோம். சூப்பர் டேஸ்ட். சுண்ட காய்ச்சிய பாலில் தேநீர். சென்னை திரும்பும்போதும் அங்குதான் டீ குடித்தோம்.

வேலூர் போகும்போது மதியமாகிவிட்டது. கடும் பசி. அங்கு பிரபலமாக இருந்த அலங்கார் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

சுவையான சைவ சாப்பாடு. அங்கே சாப்பிட கூட்டம் அலைமோதியது. நிம்மதியாகச் சாப்பிட்டோம். மீண்டும் பயணம் தொடங்கியது.

ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.

நெருக்கடியற்ற குண்டூசி வளைவுகள். மலையேறும் சாலையோரங்களில் குரங்கார்களின் ராஜ்யம்.

மலையில் ஏறும்போது கீழே பார்த்தால் ஊர் சிறிதாகிக்கொண்டே வந்தது. தீப்பெட்டியாக வீடுகள் தெரியும்போது ஏலகிரி வந்திருந்தது. வானை முட்டும் உயரத்தில் பழைமையான யூகலிப்டஸ் மரங்கள்.

மலையோரக் காடுகளில் சீத்தாவும், கொய்யாவும் அதிகம். சாலையில் அவ்வப்போது வாகனங்கள்.

மாலை இரவாக மாறும் அரும்புப் பொழுதில் ஏலகிரியை எட்டியிருந்தோம். ஊரே அமைதியாக இருந்தது. பெரிய பரபரப்பு இல்லை. அங்கங்கே பழங்கள் விற்றார்கள். டீக்கடைகளில் ஆவி பறந்தது.

நாங்கள் தங்கப்போகும் ரிசார்ட்டின் சாலையைத் தவறவிட்டு, பின்னர் தீர விசாரித்து இடத்தை அடைந்தோம். ஏதோ காட்டுக்குள் இருப்பதுபோல இருந்தது.

வார விடுமுறை என்பதால் காட்டேஜ்களில் பயணிகளின் நடமாட்டம் அதிகம் தென்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்கள் பார்ட்டி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் இருந்தார்கள்.

மஞ்சள் நிற கூடுமூங்கில்களால் வளாகம் நிறைந்திருந்தது. களைப்பாக இருந்தது. சூடாக டீ ஆர்டர் செய்து குடித்தோம்.

பிறகு ஒரு வாக்கிங் செல்லலாம் என்று புறப்பட்டோம். பார்ட்டிகள் களைகட்டியிருந்தன. கூலி படத்தின் ‘சிக்கிட்டு’ பாடலை ஒலிக்கவிட்டு ஆடத் தொடங்கியிருந்தார்கள்.

ஏலகிரி மேலும் குளிரத்தொடங்கியிருந்தது.

– சுந்தரபுத்தன்

You might also like