நூல் மதிப்புரை:
இந்தியா பற்றிய பயணப் பதிவுகளில் வரலாற்று ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நூல் ‘Inside India’. இதனை எழுதியவர் புகழ்பெற்ற துருக்கியப் பெண் எழுத்தாளரான ஹாலித் எடிப்.
இவர் 1935ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பல இடங்களுக்குப் பயணித்து, முக்கியமான இந்திய ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி தனது அனுபவங்களையும் தனித்துவமான பார்வையையும் இந்நூலில் அழகாகத் தொகுத்திருக்கிறார்.
இந்நூல் 1937ம் ஆண்டு வெளிவந்தபோது இங்கே அதிகம் கவனிக்கப்படவில்லை. காலம் செல்லச் செல்ல இதன் அருமையை உணரப்பட்டது.
2002ம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர் முஷிருல் ஹசன் இந்நூலை மறுபதிப்பு செய்தார். இதன் தமிழாக்கம்தான் ‘நான் கண்ட இந்தியா’ எனும் இந்நூல்.
இதில் ஒரு துருக்கிய பெண் எழுத்தாளரின் பார்வையில் இருந்து 1930களின் இந்தியாவின் சித்திரம் விரிகிறது.
நவீன இந்தியா உருபெற்றுக் கொண்டிருந்த முக்கியமான தருணத்தை, சாத்தியமான அனைத்து பரிமாணங்களுடன் படம் பிடித்து காட்டுகிறார் ஹாலித் எடிப்.
அத்துடன் அறிவுத் தேடலாடு இந்தியாவை நுணக்கமாக ஆராய்கிறார். காந்தி, நேரு, சரோஜினி நாயுடு, கான் அப்துல் கஃபார்கான் என பல முக்கியமான ஆளுமைகளைச் சந்திக்கிறார்.
டெல்லி, பம்பாய், ஹைதராபாத், லக்னோ, லாகூர், கல்கத்தா, பெஷாவர், அலிகர் எனப் பல இடங்களுக்குப் பயணம் செய்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அக்காலத்து அரசியல் நிகழ்வுகளுக்கு அளிக்கும் அதே கவனத்தை சாமானியர்களின் வாழ்வியலுக்கும் அளிக்கிறார்.
இந்நூல் மூன்று பாகங்களாக பிரித்து தந்துள்ளார் ஹாலித் எடிப்.
முதலாவதாக சலாம் இல்லத்திலிருந்து கண்டடைந்த இந்தியா என்றும், இரண்டாவதாக நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் கண்டடைந்த இந்தியா எனவும், உருக்குப் பானையில் இந்தியா எனவும் பிரித்துள்ளார்.
முதல் பாகம் சலாம் இல்லத்திலிருந்து தொடங்குகிறது. சலாம் இல்லம் என்பது முன்னாள் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் முக்தர் அஹ்மத் அன்சாரியின் வீட்டினை குறிக்கிறது.
இதன் தலைப்பே டாக்டர் அன்சாரியின் வீடு என்பதுதான். அவரின் வீட்டின் பெயர் டார்-எஸ்-சலாம்.
இந்த வீட்டினை வரலாற்று சிறப்புமிக்க இடம் என்கிறார் ஹாலித். ஏனெனில் இங்குதான் மகாத்மா காந்தியும், இர்வின் பிரபுவும் சந்தித்து கொண்டனர்.
எதிர்கால சுதந்திர இந்தியாவின் உருவாக்கத்தில் சலாம் இல்லத்தின் பங்கு முக்கிய அடையாளமாக இருக்கும் என்கிறார்.
இதேபோல் மகாத்மா காந்தியை முதன்முதலாக சந்தித்த தருணத்தை அத்தனை அழகாக விவரிக்கிறார் ஹாலித்.
‘அவர் ஒரு வசீகர ஆளுமை. அவருடன் நட்பு பாராட்டும் எவரும் தன் தெளிவான முடிவெடுக்கும் திறனை இழக்கிறார்கள்’ என ஆங்கிலேயர்கள் ஏற்கனவே காந்தியைப் பற்றி ஹாலித்திடம் சொல்லியிருந்த வர்ணனைகளைக் குறிப்பிட்டு, இதனால் தீர்க்கமான மனதோடு அவரைச் சந்திக்க சென்றாகச் சொல்கிறார் ஹாலித்.
இதேபோல் காந்தியின் தனிப்பட்ட உதவியாளர் மகாதேவ் தேசாய், காந்திக்கு எப்படி எல்லாமுமாக இருந்தார் என்பதைச் சொல்கிறார்.
இன்னொரு கட்டுரையில் காந்தியுடன் கிராமங்களுக்குப் பயணித்து தருணத்தை எடுத்துரைக்கிறார்.
இந்தியச் சமூகத்தை அடிமட்டத்திலிருந்து கட்டி எழுப்புவதை தன் முதன்மைப் பணியாகக் காந்தி கொண்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
மகாத்மா காந்தியிடம் சென்று, “ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குச் செய்த மிகப் பெரிய பங்களிப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?” எனக் கேட்டேன். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் ‘தேசிய உணர்வு’ என்றார்” என்கிறார் ஹாலித் எடிப்.
அடுத்ததாக இந்தியாவில் கண்ட இஸங்கள் குறித்து எழுதுகிறார்.
அதாவது இந்தியாவில் அதிகம் கேள்விப்படும் சில சொற்கூறுகள் வகுப்புவாதம், தேசியவாதம், சமூகவுடைமை என்பது.
இதனை சலாம் இல்லத்தில் இருந்து ஒரே வாரத்தில் ஒருவரால் தெரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.
இத்துடன் அவர் ஜாமியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதையும் அங்கே மகாத்மா காந்தியின் இருப்பு பற்றியும் மேலும் சில வார்த்தைகளுடன் நெகிழ்கிறார்.
இதன்பிறகு இரண்டாவது பாகத்தில் நெடுஞ்சாலையிலும், புறவழிச்சாலையிலும் ஹாலித் கண்டடைந்த இந்தியாவை விவரிக்கிறார்.
இதில் அலிகர் பல்கலைக்கழகம், லாகூர், பெஷாவர், லக்னோ, பனாரஸ், கல்கத்தா, ஹைதராபாத், பம்பாய் உள்ளிட்ட இடங்கள் வருகின்றன.
இவற்றை இந்நூலினை படிக்கும்போதே அந்தத் விஷயங்களை நம்மால் உள்வாங்கிக் கொள்ளமுடியும். இதில் மத அரசியல், இந்துத்துவம், சாதி முறை, தீண்டாமை போன்ற விஷயங்கள் அடங்கியுள்ளன.
மூன்றாவது பாகத்தில் இந்து மதம், இஸ்லாம், மகாத்மா காந்தியும் இந்தியாவும், சமதர்மத் தலைவர் ஜவகர்லால் நேரு, அப்துல் கஃபார்கானும் ஒற்றை தேசமும், ஒற்றை தேசமா அல்லது இரட்டை இந்திய தேசங்களா, இந்தியாவில் பிரிட்டிஷார்கள் உள்ளிட்ட கட்டுரைகள் இருக்கின்றன.
இதில் ஹாலித் இந்தப் பயணத்தின் வழியே கிடைத்த, தான் கண்டடைந்த ஒரு பரந்துபட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
இப்படி இந்நூலில் விரியும் ஒவ்வொரு பக்கமும் நம் கண்களைத் திறப்பவையாக உள்ளன. அந்தவகையில் இது படிக்கவேண்டிய புத்தகமாகவும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் வந்துள்ள இந்த வரலாற்றுப் பிரதியை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் இஸ்க்ரா.
***
நான் கண்ட இந்தியா
ஹாலித் எடிப்
தமிழில்: இஸ்க்ரா
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 044-4200 9603
– கவின்