ஒரு மூதன்னையின் பிரார்த்தனை!

முனைவர் க. பழனித்துரை

வயது 100-ஐக் கடந்தார் காந்தியப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். வயதை அவர் கடத்தவில்லை. மக்களுக்காக வாழ்ந்து வயதை நிறைவாக்கிக் கொண்டார்.

வாழ்தல் என்பது மற்றவர்களுக்காக. மனிதர்கள் என்றாலே தனக்காக வாழ்பவர்கள் அல்ல, மற்றவர்களுக்காக வாழ்பவர்கள்.

அந்த வகையில் கிருஷ்ணம்மாள் 100 வயது கடந்து 101ல் அடி எடுத்து வைத்தார் ஜுன் 16ஆம் தேதி.

“எனக்கு விழா வேண்டாம். இன்னும் 1000 ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்கு பதிவு செய்து தரவேண்டும். இது சம்பந்தமாக அரசிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தற்போது அதை வைத்து நிலப்பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடு செய்வதுதான் என் பணி. இதை நிறைவேற்றிடத்தான் எனக்கு உதவி தேவை” என்றார்.

“விழா என்பது எனக்கு சால்வை அணிவிப்பது, என்னிடம் ஆசி வாங்குவது, என்னுடன் புகைப்படம் எடுப்பது, இவையெல்லாம் நிறைவு அளிக்காது.

எனக்கு நிறைவளிப்பது முகவரி அற்றவர்களுக்கு முகவரி தருவது. அது நிலத்தின் மூலம் தான், ஒரு சிறிய வீட்டின் மூலம்தான், அதுதான் என் பணி.

இன்னும் ஒரு மாதம் வெப்பமாக இருக்கும், என்னால் சென்னை செல்ல இயலாது. கோடை முடிந்ததும் முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். அதுதான் எனக்கு என் பணிக்குத் தேவை” என்றார்.

“ஒரு மாத காலமும் அருட்பெரும் ஜோதி சொல்லி, எல்லாம் செயல்கூடும் என்று கூறி வள்ளலாரிடம் என் பணிக்கான விண்ணப்பத்தை செய்து கொண்டே இருப்பேன். அந்த பிரார்த்தனையின் வலுவுடன் தமிழக முதல்வரைச் சந்தித்து என் பணிக்கான உத்தரவை வாங்கி வரவேண்டும்” என்றார். 

இந்தச் சூழலில்தான் அவருக்காக எனப் பெயரிட்டு எங்களைப் போன்றோர் ஒரு விழாவினை காந்தி கிராமத்தில் எடுத்தோம்.

இந்த விழாவை காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஞா.பங்கஜம் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கேற்றி சர்வசமய பாடலுடன் ஆரம்பித்தோம்.

அந்த நிகழ்வை ஒரு தவமாக ஆக்கி நடத்தியது தான் அந்த விழாவின் உச்சம்.

திருநிதி என்ற பெண்மணி தன் வீணை இசையால் அனைவரையும் அந்தத் தவத்தில் கரைய விட்டார்.

விழாவிற்கு வந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் அவருக்கே உரிய முறையில் வரவேற்றார்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைப் பற்றி 100 பேர் என்ன கூறினார்கள் என்பதை ஒளிப்பதிவு எடுத்து, அம்மாவிடம் சமர்ப்பித்தார். 

அந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக பங்கேற்க வைக்க கண்ணியமிக்க ஒரு விருந்தினர் வேண்டும் என்று எண்ணியபோது, கீழவெண்மணி பற்றி விபரம் அறிந்த ஒருவர்தான் வேண்டும் என்று பலரும் விரும்பினர்.

அதற்காகவே கீழவெண்மணி நிகழ்வை ‘ராமய்யாவின் குடிசை’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்த பாரதி கிருஷ்ணக்குமார் அவர்களை நிகழ்வில் உரையாற்ற அக்னி ஸ்டீல்ஸ் தங்கவேலு அய்யா வர ஏற்பாடு செய்து, தானும் தன் மனைவியுடன் அங்கு வந்திருந்து சிறப்புச் செய்தார்.

அத்துடன் காந்திய பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிய வேணு மாதவ் கோவிந் பெங்களூரிலிருந்து பேச அழைக்கப்பட்டு வந்திருந்தார்.

அடுத்து, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடிய பெசவாடி வில்சன் புதுடெல்லியிலிருந்து வந்திருந்தார்.

இவர்களை அறிமுகப்படுத்தும் பணியும், அந்த நிகழ்வுக்கென ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதையும் விளக்கும் பணி என்னிடம் தரப்பட்டு ஒட்டுமொத்த நிகழ்வையும் அன்று மாலைவரை நடத்தித்தர நான் பணிக்கப்பட்டேன். அது ஒரு தவப்பணி. 

கிருஷ்ணம்மாள் காந்தியத்தை தன் வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுத்தது தன் இளமைக் காலத்தில்.

அது என்ன பாதை. அதுதான் மனிதருள் புதைந்து கிடக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி, அந்த ஆன்ம ஒளியில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்தியத் திருநாட்டில் பெண்களை இணைக்காமல் பங்களிக்க வைக்காமல் எந்தச் செயலிலும் நிறைவை எட்ட முடியாது. அதுதான் காந்தியின் பார்வை.

ஆகையால்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களை இணைத்து போராட வைத்து சுதந்திரம் அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதைச் செய்தது காந்தி மகான்.

அவரை அடியொற்றி கிருஷ்ணம்மாள் தன் களப்பணியில் பெண்களை இணைக்கத் தவறுவது இல்லை.

அவர்களின் ஆத்ம ஒளியை அவர்களுக்கு உணர்வில் கொண்டு வந்து போராட வைத்து சமூக மாற்றத்திற்கு பெண்களை தலைமை ஏற்றிட வைப்பார்.

அப்படித்தான் நிலங்களையும் வீட்டையும் பெண்கள் பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனப் போராடி அரசாங்கத்திடம் ஆணை பெற்று பதிவு செய்து தந்தார்.

சத்தியத்தின் மீதும் அகிம்சை மீதும் மாறா நம்பிக்கை கொண்டு தன் பணியை இன்றுவரை தொடர்கிறார்.

வீட்டில் விளக்கேற்று, விளக்கின் ஒளியில் உன்னைத் தேடு, உன் ஒளிதேட அருட்பெரும் ஜோதியை தினமும் ஒலித்து உள் ஒளி பெருக்கு என்று சாதாரண பெண்களுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்கு கிருஷ்ணம்மாள். 

இன்று கிருஷ்ணம்மாள் வேண்டுவது, அவருக்கு பாராட்டுப் பத்திரம் அல்ல, நற்சான்றிதழ் அல்ல.

சமூக அவலங்களை போக்க சமூக மாற்றத்திற்கு பணி செய்யத் தேவையான இளைஞர்கள். அவர்களை இன்று அவர் இனம் கண்டு தன்னுடனே இணைத்துக் கொண்டார்.

ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கிருஷ்ணம்மாளைக் காண ஆண்டு முழுவதும் வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் தான் அம்மா தன் ஆத்மாவின் கீதங்களை இணைத்த வண்ணம் ஓர் உரையாடலில் இருக்கின்றார்.

அவர்கள் தான் புதுமைக் காந்தியர்கள். 

அந்தப் புதுமைக் காந்தியர்களை ஒளியூட்டி, செயலில் கரைந்து விடுதலையடைய வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் கிருஷ்ணம்மாள்.

காந்தி செயலுக்கானவர். புதுமைகளைப் புகுத்துபவர்.

எனவேதான் இந்தப் புதுமைக் காந்தியர்கள் தங்களைச் செயலில் கரைத்துக்கொண்டு அம்மாவின் கரம் பற்றி திக்கற்றவர்களுக்கு திசை காட்டுகின்றார்கள்.

இந்த விழாவே பிரார்த்தனையானது. யாரால் என்றால் அந்தப் புதுமைக் காந்தியர்களால்.

ஊழியரகம் என்பது கிராம சுயராஜ்யத்திற்கு பணி செய்ய முனைவோருக்கு அது ஒரு பயிற்சிப் பள்ளி. புதிய பாதை தேடும் பணியில் புதுத் தலைமையை உருவாக்கும் உலைக்களமாக அது புதிய வார்ப்புக்களை உருவாக்கிக் கொண்டுள்ளது.

அந்தப் பணி தொடரத்தான் இந்த பிரார்த்தனை. இதில் அம்மாவின் செயல்பாடுகள் ஜெகந்நாதனுடன் இணைந்தது.

அந்தப் பணியினை விளக்கி இளைஞர்களுக்கு வழிகாட்ட வந்த சிறப்பு அழைப்பாளர்கள் முனைவர் வேணு மாதவ் கோவிந்த் அவர்களும், பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும், பெசவாடா வில்சன் அவர்களும்.

இந்த மூவரையும் அறிமுகம் செய்து பேச வைத்தோம். மூவரின் உரைகளும் வரலாறு, மாற்றம், நாம் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியதாக இருந்தன. அத்தனை செயல்பாடுகளும் அன்று பிரார்த்தனையாகவே இருந்தது.

நிறைவாக, அம்மா அவர்கள் பேசும்போது, “இந்த நாட்டில் ஒரு பெரு அவலம் நிகழ்கிறது. பச்சிளம் குழந்தைகள், தெய்வங்கள், வாழ்ந்த வயது முதிர்ந்த பெண்கள் அனைவரையும் பாலினச் சீண்டலுக்கு ஆளாக்கப்படுவது எவ்வளவு பெரிய மனித குல அவமானம்.

சமூகம் அதை ஏன் பேச மறுக்கிறது. அதை, சமூகமாக ஒன்றிணைந்து மாற்ற வேண்டும், அதற்கு நாம் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அன்று செய்திகள் சேகரிக்க வந்த நண்பர்கள் கூறினார்கள், சிறப்புப் பேச்சாளர்கள் காத்திரமான பகிர்வுகளைச் செய்தார்கள்.

ம்மா அவர்கள் இன்றைய சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டி சமூகத்தின் அமைதியையும் கோடிட்டுக் காட்டி செயல்படுங்கள் என்று ரௌத்திரம் பொங்கக் கூறியதுதான் செய்தி என்று கூறிவிட்டு, மறுநாள் செய்தித்தாள்களிலும் அம்மா பேசியதுதான் வெளிவந்தது. 

மாலையில், ஒரு செடியை நட்டு, அருட்பெரும் ஜோதி பாடலுடன் அம்மாவே அந்த நிகழ்வை நிறைவு செய்தது அனைவருக்கும் ஒரு நிறைவைத் தந்தது.

இந்த நிகழ்வு முழுமையும் புதுமைக் காந்தியர்களை நோக்கி வடிவமைக்கப்பட்டு அவர்களின் பங்களிப்புடன் நிகழ்ந்தது.

இன்று காந்தி கண்ட ஓர் உயர்கல்விக் கூடமாக சுயராஜ்யக் கேந்திரம் அதாவது ஊழியரகம் மாறிக்கொண்டிருப்பதை அனைவராலும்  உணர முடிந்தது.

You might also like