பசி நகர்த்திய அந்த நாட்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 19

எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்தக் கால பாரதியிலிருந்து ‘எழுத்து’ இதழை நடத்திய படைப்பாளியான சி.சு.செல்லப்பா வரை பல எழுத்தாளர்களை எப்போதும் பற்றாக்குறையான வாழ்க்கையைத்தான் வாழ வைத்திருக்கிறது நம் தமிழ்ச் சமூகம்.

இது தொடர்பான இரு சம்பவங்கள் மட்டும் இங்கே…

இலங்கையைச் சேர்ந்த தமிழின் நவீனப் படைப்பாளியாக கருதப்படும் பிரமிள் என்று அழைக்கப்படும் தருமு சிவராமு 80-களில் மதுரையில் தங்கியிருந்தார்.

ஒன்றை ஆண்டுகள் வரை மதுரையிலுள்ள கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவரோடு நல்ல பரிட்சயம் ஏற்பட்டது.

அப்போது எனக்கு 20 வயதிருக்கும். மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புத் தமிழ் படித்துக் கொண்டிருந்தேன்.

சங்க இலக்கியத்தோடு, புதுமைப்பித்தன் துவங்கி அப்போது நவீன படைப்பாளிகள் வரை தீவிர வேட்கையுடன் வாசித்துக்கொண்டிருந்தேன்.

தருமு சிவராமு ‘எழுத்து’ பத்திரிகையில், எழுதிய தீவிரமான இலக்கிய கட்டுரைகளையும் அவரை பிரபலப்படுத்திய ‘கைப்பிடி அளவு கடல்’ என்கிற கவிதை தொகுப்பையும், கோடரி உள்ளிட்ட அவரது அபூர்வ சிறுகதைகளையும் மவுனியின் சிறுகதைகளுக்கு அவர் எழுதிய கச்சிதமான முன்னுரையும் படித்திருந்ததால், அவரோடு நட்புப் பாராட்டுவது எளிதாக இருந்தது.

தேர்ந்த ஓவியரும் சிற்பக் கலைஞராகவும் இருந்த அவர் அனுபவித்த பொருளாதாரக் கஷ்டங்கள் மிக அதிகம்.

ஒரு நாள் முழுக்க பட்டினியாக இருந்த நிலையில், இரவு நேரத்தில் எனது வீட்டுக் கதவைத் தட்டி தனது பசியைத் தயக்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

நானும் வீட்டிலிருந்து இரண்டு ரூபாயை வாங்கி அவரிடம் கொடுத்தபோது, அருகிலுள்ள தவிட்டுச் சந்தையில் இட்லிக் கடையிலுள்ள திண்ணையில் அமர்ந்து பசியின் வேகத்தோடு அவர் சாப்பிட்டது ஞாபகத்திலிருக்கிறது.

ஒரு நாள் மதியம் 3 மணிக்கு மேலிருக்கும் கல்லூரி வகுப்பறைக்குள் இருந்தபோது, உங்களைப் பார்க்க ஒருவர் வந்து கிழே காத்திருக்கிறார் என்று கல்லூரி பணியாளர் வந்து சொன்னார்.

மாடியிலிருந்த வகுப்பறையிலிருந்து கீழே போனேன். கல்லூரி வளாகத்திலிருந்த வயதான மரத்தின் கீழே, லேசாக புன்னகைக்க முயன்ற நிழலாக சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார் தருமு சிவராமு.

போனதும், “எவ்வளவு கையில வைச்சிருக்கீங்க?” என்று கேட்டபோது, கைவசம் அப்போது 2 ரூபாய் கூட இல்லை.

“காலையிலயிருந்து இன்னும் சாப்பிடல. சரி, கிளம்பி வாங்கய்யா” என்றவர், ஆங்கிலப் பேராசிரியர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் ஓட்டலுக்கு முன் வரச்சொன்னதாகச் சொல்லி, என்னையும் அழைத்தார்.

பஸ்சில் ஏறி அரைமணி நேரத்தில் அந்த ஹோட்டலுக்கு முன் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் அந்த ஆங்கிலப் பேராசிரியர் வந்தார்.

தீவிர இலக்கிய வாசகராக அறியப்பட்டிருந்த அவர், தருமு சிவராமுவுக்கு சில உதவிகளைச் செய்திருக்கிறார்.

அவருடைய சில உடைகளை தருமு சிவராமுவிற்கு கொடுத்து அவர் ஆல்டர் பண்ணிப் போட்டுக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.

நாங்கள் நின்று கொண்டிருந்த ஓட்டல், அசைவத்திற்கு பேர் போனது.

அப்போதைய நிலையில் அந்த ஓட்டலுக்குள் தருமு சிவராமுவை அவர் அழைத்துச் செல்ல முயன்றபோது, தருமு சிவராமு என் கையையும் பிடித்து ஓட்டலுக்குள் அழைத்தார்.

நான் சிவராமுவைப் பக்கத்திலே அழைத்து, “என்னிடம் பணமில்லை, நான் வந்தா நல்லாயிருக்காது. அவர் உங்களைத்தான கூப்பிட்டுருக்காரு. நீங்க மட்டும் போங்க” என்று நான் சொன்னபோதும், விடாப்பிடியாக “எதாவது கொஞ்சம் சாப்பிடுய்யா” என்றபடி உள்ளே கூட்டி போனார்.

குளிரூட்டப்பட்ட அந்த ஓட்டலுக்குள் அமர்ந்ததும், அந்த ஆங்கிலப் பேராசிரியர் அவருக்கும் சிவராமுவுக்கும் பிரியாணி, சிக்கன் வகையறாக்களை ஆர்டர் கொடுத்தபோது, நான் தயக்கத்துடன் எனக்கு டீ மட்டும் போதும் என்றேன்.

“இரண்டே இரண்டு புரோட்டா மட்டும் சாப்பிடுய்யா” என்று சிவராமு வலியுறுத்த எனக்கு முன்னால் 2 புரோட்டாவும் அதற்கான சால்னாவும் வந்தன.

அதைச் சாப்பிடும்போது எதனாலோ மிகவும் அந்நியமாக இருந்தது.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்து ஓட்டலுக்கு முன்னால் இருக்கிற பில் கவுன்ட்டருக்கு முன்னால் வந்தபோது, நாங்கள் சாப்பிட்ட தொகைக்கான பில் அந்த ஆங்கிலப் பேராசிரியரிடம் கொடுக்கப்பட்டது.

எனக்கு அருகில் பசித் தீர்ந்த நிலையில் நின்றிருந்தார் சிவராமு. எதிரே நின்றிருந்த அந்த ஆங்கிலப் பேராசிரியர் என்னை அருகில் அழைத்தார். போனேன்.

அந்த பில்லைக்காட்டி, “6 ரூபாய்க்குச் சாப்பிட்டிருக்க, உன் கிட்ட காசு இருக்கா” என்றவரிடம் மிகவும் தயக்கத்துடன் “இல்லை” என்று மெதுவாகச் சொன்னேன்.

“என் காசுல வந்து சாப்பிட்டுருக்க, உனக்குக் கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? நான் சிவராமுவுக்கு செலவழிக்கலாம். உனக்கு ஏன் நான் செலவழிக்கணும்” என்று கத்தியபோது, அந்த பில் கவுன்ட்டர் முன்னால், தலைகுனிந்த நிலையில் நின்று கொண்டிருந்தேன்.

ஒன்றும் பேசத் தோன்றவில்லை. ஓட்டலுக்கு வெளியே டவுன் ஹால் ரோட்டின் போக்குவரத்து நெரிசலுக்கிடையே கண் பார்வையற்ற நிலையில், புல்லாங்குழல் விற்பவர் வாசித்துக் கொண்டிருந்த சினிமா பாடல் இசை அந்த அடர்த்தியான சூழலுக்குப் பொருத்தமான பின்னணியைப் போலத் தோன்றியது.

“கேட்டுட்டே இருக்கேன். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம துப்புக்கெட்டவன் மாதிரி நிக்கிறியே” என்று குரலை அவர் உயர்த்தியபோது, 20 வயது வயதில் அப்படிப்பட்ட அதிகாரப் பேச்சுக்களை அதுவரை சந்தித்திராத எனக்கு கண்ணில் கனத்தத் தூசி விழுந்ததைப் போல கலங்கியது.

அருகில் நின்று கொண்டிருந்த கவிஞரான தருமு சிவராமு, ஒன்றும் பேசாமல் நின்றிருந்தார்.

“நான் வீட்டுக்குப் போய் அந்த 6 ரூபாயை எடுத்துட்டு வந்து உங்க வீட்ல கொடுத்துறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

சொன்னபடியே வீட்டிற்குப் போய் அம்மாவிடம் 6 ரூபாய் வாங்கிக் கொண்டு அந்த ஆங்கிலப் பேராசிரியரின் வீட்டிற்குப் போய் கொடுத்துவிட்டு திரும்பியபோது, மனம் கனத்த இறுக்கத்திலிருந்தது.

மறுநாள் காலை நேரத்தில், என் வீட்டிற்கு வந்திருந்தார் தருமு சிவராமு.

முந்தின நாள் நடந்த நிகழ்வுக்காக வருத்தப்படுவதாகச் சொன்னார்.

மவுனமாக இருந்த நான் அவர் முகத்தைப் பார்த்தபடி “நேத்து ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போய், ஒரு அனுபவப் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி” என்றேன்.

தமிழின் நவீனப் படைப்பாளியாக இன்றும் கொண்டாடப்படுபவரான பிரமிள் என்ற தருமு சிவராமு மவுனமாக நின்றிருந்தார்.

இன்னொரு நிகழ்வு…

சென்னைக்கு நான் இடம்பெயர்ந்து, நண்பரும் எழுத்தாளருமான பிரபஞ்சனுடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘அசைடு’ என்கிற ஆங்கில இதழை நடத்திக் கொண்டிருந்த நிறுவனம் தமிழில் ‘செய்தி ஒலி’ என்கிற பத்திரிகையைத் துவக்குவதாக இருந்தது.

அதன் ஆசிரியராக பிரபஞ்சனும், துணை ஆசிரியராக நானும் இருந்தோம். சில மாதிரி இதழ்களையும் தயாரித்திருந்தோம்.

நவீன இலக்கியமும் கருத்துச் செறிவான கட்டுரைகளும் கலைப் படைப்புகளும் நிரம்பியதாக அடுத்தடுத்து 3 இதழ்களைத் தயாரித்திருந்தோம்.

சாம்பிளுக்கு அச்சடிக்கப்பட்ட அந்த இதழ்களை எழுத்தாள நண்பர்களிடம் காண்பித்தபோது, வெகுவாக வரவேற்றார்கள்.

ஆனால், என்ன காரணத்தினாலோ அந்தப் பத்திரிகையை நடத்துவதிலிருந்து பின்வாங்கிவிட்டது அந்த நிறுவனம்.

வேலையிலிருந்து நாங்கள் நீக்கப்பட்டோம். அப்போது, திருவல்லிக்கேணியில் உள்ள ஜானி ஜான்கான் சாலையிலிருந்த ஒரு மேன்சனில் பிரபஞ்சனும் நானும் அடுத்தடுத்த அறையில் தங்கியிருந்தோம்.

கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளம் 20 நாட்களுக்குள் தீர்ந்துவிட்ட நிலையில், ‘இதயம் பேசுகிறது’ இதழுக்காக அதன் ஆசிரியரான மணியனைச் சந்தித்தோம்.

வாரத்திற்கு இரண்டு கட்டுரை. அதற்கு இருவருக்கும் ஒரு தொகை நியமிக்கப்பட்டு அந்த வேலையும் ஒன்றரை மாதங்களுக்குள் நின்றுபோனது.

பிரபஞ்சன் அவரது கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் கூட அடமானம் வைக்கச் சொல்லி, அதற்கு 50ரூபாய் கிடைத்தது.

இப்படிக் கடுமையான சிரமங்களுடன் நகர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில், பிரபஞ்சனும் நானும் ஒரே ஒரு பிரட் பாக்கெட்டை வாங்கிப் பகிர்ந்து சாப்பிட்டிருக்கிறோம்.

பசிப்பது இயல்பாக இருப்பதுபோல, அதைச் சமாளிப்பதும் இயல்பாக இருந்தது.

ஒரு நாள் காலை, மதியம் இரண்டு வேளையும் சாப்பிடாத நிலையில், மாலை நேரத்தில் எனது அறைக்கு வந்தார் பிரபஞ்சன்.

“கிளம்பி வாங்க, பக்கத்துல இருக்க நண்பர் இன்குலாப் வீட்டிற்குப் போயிட்டு வருவோம்” என்று அழைத்தார்.

சற்று நேரத்தில் இருவரும் கிளம்பி சற்று தூரத்திலிருந்த இன்குலாப்-ன் வீட்டிற்குப் போனோம். போனதும், ஏக உற்சாகத்துடன் எங்களை வரவேற்றார் இன்குலாப். 

எங்கள் இருவரது முகத்திலும் பசியின் அடையாளம் துளியும் வெளிப்படவில்லை. சிறிது நேரம் கழித்து பிரபஞ்சனின் பேச்சில் இங்கிதமாக வெளிப்பட்டது.

போய் அமர்ந்த சிறிது நேரத்தில், “என்ன சாப்பிடுறீங்க, டீ போடச் சொல்லவா” என்று இன்குலாப் சொன்னதும், தலையாட்டினார் பிரபஞ்சன்.

கூடவே சற்று தயக்கத்துடன், “இங்கே, வர்றப்ப ஒரு குட்டி சமோசா வாங்கிக் கொடுத்துருக்கீங்க. நல்லா அருமையா இருக்கும். இப்பவும் கூட அந்த சமோசாவை சாப்பிட்டுட்டு, அப்புறம் டீ சாப்பிட்டுக்கலாமே” வழக்கமான புன்னகையுடன் சொன்னார் பிரபஞ்சன்.

“அதுக்கு என்னங்க“ என்று சொல்லிவிட்டு, யாரையோ அழைத்து அருகிலிருந்த கடையிலிருந்து சமோசாவை சூடாக வாங்கி வரச்சொன்னார் இன்குலாப்.

அவர் சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்தில் எங்கள் இருவருக்கும் முன்னால், சமோசாக்களை ஒரு தட்டில் வைத்துவிட்டு, டீயை எடுக்க உள்ளே சென்றார் இன்குலாப்.

அதற்குள் வேடிக்கையாக, “இதில், உங்களுக்கு 3, எனக்கு 3 சரியா” என்று சமோசாவை சரிசமமாக பாகப்பிரிவினை செய்துகொண்டே சிரித்தபடியே கேட்டார் பிரபஞ்சன். நானும் சிரித்தபடியே தலையசைத்தேன்.

சமோசாவை கையிலெடுத்த பிரபஞ்சன், சமோசாவிற்கு வலி எடுக்காத மாதிரி அவ்வளவு மெதுவாகக் கடித்து, ரசித்துச் சாப்பிட்டபோது அவரது முகபாவம் நல்லதொரு இசை அனுபவத்தை அனுபவிப்பது மாதிரி இருந்தது.

நானும் பிரபஞ்சனைப் பின்பற்றி, எனக்கான சமோசாக்களை அதே மாதிரி மிருதுவாகக் கடித்து, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இஞ்சி கலந்த தேயிலை வாசனை அறைக்குள் வந்தது.

அதைப் பின் தொடர்ந்து கையில் தேநீர் கோப்பைகள் அடங்கிய டீயுடன் வந்தார் இன்குலாப்.

மூவரும் அமர்ந்து தேநீர் குடித்தோம். இன்குலாப் விரைந்து டீ-யைக் குடித்து முடிக்க, பிரபஞ்சனும் நானும் டீ-யைத் துளித்துளியாய் அவ்வளவு ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தோம்.

சமோசாவும் டீயும் வயிற்றுக்குள் இறங்கிய பரவசம் பிரபஞ்சனின் முகத்தில் தெரிந்தது.

இன்குலாப்பிடம் பசியைக் குறித்து குறிப்பிடக்கூடாது என்றும், அவரிடம் எதாவது பணம் கேட்டுவிடக் கூடாது என்பதையும் முதலிலேயே நாங்கள் முடிவு செய்திருந்தோம்.

இன்குலாப்பின் வீட்டிலிருந்து நாங்கள் கிளம்பியபோது, இருவரிடமும் கைகளை இறுகப் பற்றி விடைகொடுத்தார் இன்குலாப்.

மீண்டும் தெருவிற்கு வந்தோம். சுற்றிலும் போக்குவரத்து வாகனங்களில் மெலிதான இரைச்சல்.

மேன்சன் நோக்கி நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரபஞ்சன் அடிக்கடி மிகவும் லயித்துப்பாடும் ஓர் பாடலை அன்றும் உற்சாகமாக லேசான கரகரத்தக் குரலில் பாடினார்.

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா?” என்கிற ‘ஓர் இரவு’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதிதாசனின் வரிகளை அருகில் நடந்து வந்து கொண்டிருந்த எனது முக எதிர்வினையை பார்த்தபடியே பாடிக் கொண்டே வந்தார் பிரபஞ்சன்.

அதற்குள் மேன்சன் வந்துவிட்டது. மாடியிலிருந்த எங்களுடைய அறைகளின் கதவுகளைத் திறந்தோம்.

அவரது அறைக் கதவை திறந்தபடியே, அவர் வழக்கமாகச் சொல்கிற ஒரு வரியை அன்றும் பிரகாசமான முகத்துடன் சொன்னார் பிரபஞ்சன்.

“இன்றைய பொழுது இனிதே கழிந்தது”.

மறுநாள் காலை, எனது அறைக் கதவைத் தட்டினார் பிரபஞ்சன்.

கையில் ஒரு பேக் இருந்தது.

“பாண்டிச்சேரிக்கு போய்ட்டுக் குடும்பத்தைப் பார்த்துட்டு வந்துறேன். நண்பர் ஒருத்தரை இரவில் வரச்சொல்லி கொஞ்சம் பணம் வாங்கினேன். அதை வைச்சுதான் போறேன்” என்று சொல்லி கைகொடுத்துவிட்டு அவர் கிளம்பியபோது காலை 7 மணி.

எனக்கும் வயிறு பசித்தது.

சட்டென்று ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த துக்ளக் ஆசிரியரான சோ அவர்களைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அதற்கு முன்பே நான் துக்ளக்கில் சில கட்டுரைகளை எழுதியிருந்தேன். சோ அவர்களையுமு் அடிக்கடி சந்தித்திருக்கிறேன்.

காலை 8 மணிக்குள் அவருடைய அலுவலகத்திற்குப் போய் விட்டேன்.

அதிகாலையிலேயே அலுவலகத்திற்கு வந்துவிடுகிற வழக்கத்தை வைத்திருந்தவரான சோ, அன்றும் காலையிலேயே வந்துவிட்டார்.

மாடியிலுள்ள அவரது அறைக்குப் போனேன்.

“வாங்க“ என்று சிரிப்புடன் வரவேற்றவர், என்னைப் பற்றி விசாரித்தபோது, “உண்மையைச் சொல்லட்டுமா?” என்று அந்தப் பசித்திருந்த நாட்களைப் பற்றிச் சொன்னேன்.

பரிவுடன் என்னைக் கண்டித்த அவர், அருகிலிருந்த ஓட்டலுக்குப் போய் எனக்கான காலை உணவை வாங்கி வரச் சொல்லி, கீழே போய் உடனே சாப்பிட்டு வரச் சொன்னார்.

நான்கு இட்லிகளும் ஒரு ஸ்பெஷல் நெய் ரவா தோசையும் எனக்காக காத்திருந்தன.

சாப்பிட்டு முடித்ததும் மாடி அறைக்குப் போனேன். எதிரேயிருந்த நாற்காலியில் அமரச் சொன்னவர், ஒரு வெள்ளைக் கவரை என்னிடம் கொடுத்தார். அதில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

நான் அதை மறுத்தபோது, “நம்ம ஆபிசுல இன்னைலயிருந்து நீங்க ஸ்பெஷல் கரெஸ்பாண்டன்ட்டா சேர்ந்துட்டீங்க.

நீங்க மதுரைக்குப் போயிட்டு அங்கயிருந்து தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும் போகலாம், எழுதலாம்” என்றவர் எனக்கான மாத ஊதியத் தொகையை அட்வான்சாக கொடுத்தார். நல்ல தொகைதான்.

“மதுரைக்குக் கிளம்புங்க, உங்களுக்கான ஆர்டர் எல்லாம் உடனே அனுப்புறேன்” என்றார் மெல்லிய புன்னகையோடு.

வயிற்றுக்குள் குடியிருக்கும் பசி சதுரங்கக் காய்களைப் போல, நம்மை எப்படியெல்லாம் நகர்த்தியிருக்கிறது!.

– மணா 

You might also like