வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டேன் – காந்தாரா இயக்குநரின் போராட்ட வாழ்க்கை!

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் மூலம் இன்று திரையுலகில் உச்சத்தை எட்டியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

நேற்றைய தினம் வரை 728 கோடி ரூபாயை வசூலித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் 1,000 கோடி ரூபாய் வசூலை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது.

இத்தனை கோடி ரூபாய் வசூலிக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் இயக்குநரான ரிஷப் ஷெட்டி ஒரு காலத்தில் வீடு வீடாகப் போய் தண்ணீர் கேன் போடும் வேலையை செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால், அதுதான் உண்மை. அமிதாப் பச்சனின் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் தன் இளம் வயதுப் போராட்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

“நான் மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் அப்பா ஒரு ஜோதிடர். மிகவும் கஷ்டப்பட்டு நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பெங்களூருவில் இருந்தபோது எனக்கு ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

‘கஷிராம் கோட்வால்’ என்ற மராத்தி நாடகத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்து நாங்கள் அரங்கேற்றினோம்.

அதில் நான் கதாநாயகனாக நடித்தேன். அதற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றேன்.

அப்போதுதான் மக்கள் என்னை அடையாளம் காண ஆரம்பித்தனர். அதனால் திரையுலகில் சேர முயற்சிகளை எடுத்தேன்.

அந்த காலத்தில் என் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நான் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்காக நான் சிறிது சிறிதாக பல வேலைகளைச் செய்துள்ளேன்.

முதலில் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் 20 லிட்டர் தண்ணீர் கேனை போடும் வேலையை செய்தேன்.

பின்னர் பலவிதமான சிறுசிறு வேலைகளைச் செய்தேன். சில நாட்கள் ஓட்டலில் வேலை பார்த்தேன். டீத்தூள் விநியோகம்கூட செய்திருக்கிறேன்.

ஒருமுறை நான் 10 லிட்டர் தண்ணீர் கேனை சப்ளை செய்வதற்காக ஓரிடத்துக்குப் போனேன். அப்போதுதான் அது திரைப்பட இயக்குநருக்கான பயிற்சிப் பள்ளி என்று தெரிந்தது.

உடனே அதில் சேர முடிவெடுத்தேன். ஆனால் அதற்கு பணம் இல்லை. தண்ணீர் பாட்டில்களை விற்று சம்பாதித்த பணத்தில் அந்தப் படிப்பை முடித்தேன்.

அதன் பிறகு எனக்கு 2 படங்களில் சிறிய வாய்ப்புகள் வந்தன. பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்க எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. அந்த காலகட்டத்தில் ஒரு தயாரிப்பாளருக்கு கார் டிரைவராக பணியாற்றியது உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்துள்ளேன்.

இதற்கு முன்பு நான் உங்களை ஒருமுறை சந்திக்க வந்துள்ளேன். 2018-ம் ஆண்டில் நான் இயக்கிய ‘சர்காரி ஹி.பிர. ஷாலே, காசரகோடு, கொடுகு: ராமண்ணா ராய்’ (Sarkaari Hiriya Praathamika Shaale, Kaasaragodu, Kodugé: Raamanna Rai) என்ற திரைப்படம் குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.

அப்படத்தில் அனந்த் நாக் ஜி நடித்திருந்தார். அந்தப் படம் தேசிய விருதை வென்றதைத் தொடர்ந்து, அதை இந்தியில் எடுப்பது தொடர்பாக பேச உங்களை சந்திக்க வீட்டுக்கு வந்தேன்.

ஆனால், அப்போது உங்களைச் சந்திக்க முடியவில்லை. உங்கள் மனைவி ஜெயா பச்சனை தூரத்தில் இருந்து பார்த்தேன்.

உங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறி இருக்கிறது” என்று இந்த நிகழ்ச்சியில் சொல்லியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

ஒரு காலத்தில் அமிதாப் பச்சனை பார்க்கவே அனுமதி கிடைக்காமல் இருந்தவர் ரிஷப் ஷெட்டி. வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டவர்.

இன்று அந்த அமிதாப் பச்சனே தனது ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேட அவரை அழைக்கும் சூழல் வந்திருக்கிறது என்றால், அதற்கு ரிஷப் ஷெட்டியின் உழைப்புதான் காரணம்.

கடுமையாக உழைத்தால் நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்பதற்கு ரிஷப் ஷெட்டியின் வாழ்க்கையே சிறந்த உதாரணம்.

– பி.எம்.சுதிர்

You might also like