கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 20
நவீன உலகில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், இன்னும் ஆன்மீக மயமான கோவில்களுக்கு தமிழ்நாட்டில் தனி இடம் உண்டு.
அதுவே ஒரு காலத்தில் “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு எங்கும் ஆயிரக்கணக்கான கோவில்கள் நிறைந்திருக்கின்றன.
அவற்றுக்கென்று பல்வேறு விலைமதிப்பில்லாத சொத்துக்களும் கூடவே இணைந்திருக்கின்றன.
பிரிட்டிஷார் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் இருந்த அபூர்வமான நகைகள் பறிபோகி இருக்கின்றன.
அப்போதே சிலைகளை கடத்தவும் தொடர்ந்து முயற்சி நடந்திருக்கிறது. தற்போது அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோவில்கள் குறித்த சர்ச்சை அடிக்கடி எழுந்திருக்கும் நிலையில், 2 நேரடி அனுபவங்களை மட்டும் கீழே பதிவிட்டிருக்கிறேன்.
1912-ம் ஆண்டு மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதனகோபால சுவாமி திருக்கோவிலிருந்து அழகான கலைநயம் மிக்க கல்மண்டபமே வெறும் 150 ரூபாய்க்கு லண்டனைச் சேர்ந்த அடிலைன் என்கிற பெண்மணிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால், இப்படியொரு விற்பனை நடந்தபோது கோவில் நிர்வாகப் பொறுப்பு தனியார் வசம் இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அபூர்வமான சிற்பங்கள் அடங்கிய அந்த கல்மண்டபம் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, கப்பலில் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது லண்டனில் உள்ள பிலடெல்பியாவிலுள்ள பிரபலமான மியூசியத்தில் இப்போதும் இருக்கிறது.
மதுரையில் உள்ள மதனகோபால சாமி கோவிலுக்கு நான் சென்றபோது அந்த கல்மண்டபம் பெயர்க்கப்பட்ட இடத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், அழகான கல்மண்டபம் விற்கப்பட்டிருப்பது தற்போது அந்தக் கோவிலை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து வார இதழ் ஒன்றிலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் காட்சிப் பதிவாக்கியிருக்கிறேன்.
மூத்தத் தலைவர்களில் ஒருவரான பழ.நெடுமாறன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மதுரையிலிருந்து லண்டன் மியூசியத்திற்குச் சென்ற அந்தக் கல்மண்டபத்தை மறுபடியும் மதுரைக்கு கொண்டுவரவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்.
இன்றுவரை அந்த கல்மண்டபத்தை மீண்டும் மதுரைக்குக் கொண்டு வரமுடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.
பல கோவில்களிலிருந்து பல அபூர்வமான உலோகச் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு மிக சிலவற்றை மட்டும் மீட்டெடுத்து தமிழகத்திற்குக் கொண்டுவர முடிந்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மிக முக்கியமான கோவில் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அழகான கல்தூண்கள் கடத்தப்பட்டதாக செய்தி கசிந்து அது குறித்து விசாரிக்க நேரடியாக அங்கு போயிருந்தேன்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்தக் கோவிலின் தேவைக்காக மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்ட அழகான வேலைப்பாடு அமைந்த பல தூண்கள் அந்தக் கோவிலில் வெளிப்பிரகாரத்தின் புதைக்கப்பட்டிருக்கின்றன.
எதோ ஒரு காரணத்திற்காக தூண்கள் உருவாக்கப்பட்ட பிறகும் முடிவடையாமல் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
தூண்கள் புதைக்கப்பட்டது தெரிந்ததும் நம்ம ஊர்க்காரர்கள் சும்மா இருப்பார்களா? அந்தக் கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்ததை தோண்டியெடுத்து தமிழகத்தின் இன்னொரு பகுதிக்கு கடத்திவிட்டார்கள்.
நேரடியாக அந்தக் கோவிலுக்குச் சென்றபோது அந்தக் கோவில் நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட ஒருவர் மிகத் தெளிவான ஆதாரங்களுடன் தோண்டி எடுக்கப்பட்ட தூண்களின் அபூர்வத் தன்மை குறித்தும், அவை எப்படி வாகனத்தில் கடத்தப்பட்டன எந்தத் தேதியிலே கடத்தப்பட்டன என்பது குறித்தும் மிகத் தெளிவாக விவரித்தபோது, நாம் தான் அசர வேண்டியிருந்தது.
நம்மை கையோடு அழைத்துப் போனவர் அந்தக் கோவில் வளாகத்தில் எந்தப் பகுதியில், அந்தத் தூண்கள் புதைக்கப்பட்டிருந்தன என்பதையும் விளக்கிச் சொன்னார்.
“ஆனாலும், எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை” என்றும் நம்பிக்கையற்ற தொணியில் சொன்னார்.
அவர் கைவசமிருந்த சில ஆதாரங்களை எங்களிடம் கொடுத்தார்.
அதன்பிறகு சென்னைக்குத் திரும்பி அந்தத் தூண்களை யார் கடத்தியனார்களோ அந்த நிறுவனத் தலைவரை நண்பர் ஒருவருடன் சேர்ந்து சந்தித்தேன்.
நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்ட அவர் இதை எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என்று அதட்டலாகச் சொன்னார்.
அப்படி எழுதுவதை கைவிட்டால் என்னென்ன சலுகைகளை வசதிகளை வழங்கப் போகிறேன் என்றும் விவரித்தார்.
எதுவும் வேண்டாம், நாங்கள் சேகரித்ததை வெளியிடப்போகிறோம் என்று சொன்னதும், கடுமையாக எச்சரித்தார்.
ஒரு வழியாக அங்கிருந்து கிளம்பி பாரம்பரியமான வார இதழின் ஆசிரியரைச் சந்தித்து, கடத்தல் துவங்கி மிரட்டல் வரையிலான அனைத்தையும் விவரித்தபோது, “வருவது வரட்டும், இந்த வாரமே வெளியிட்டுவிடலாம்” என்று சொன்னார்.
அவர் சொன்னமாதிரியே அட்டைப்படத்திலும் இடம்பெறச் செய்து உரிய முக்கியத்துவத்துடன் அந்தக் கட்டுரையை வெளியிட்டார். அந்தக் கட்டுரை வெளியான பிறகும் மிரட்டல்கள் தொடர்ந்தன.
மறுவாரம் அந்தக் கட்டுரை அந்த இதழில் வெளிவந்ததற்கான சன்மானத் தொகையாக 150 ரூபாய் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஃப்ரீலேன்சராக அந்த பத்திரிகையில் இருந்தாலும்கூட, அனுப்பிவைக்கப்பட்டது சிறிய தொகை என்றாலும் அந்த மதிப்பை குறைத்து மதிப்பிட முடியுமா?