நூல் அறிமுகம்:
* இந்தியாவிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாயாக இருப்பது சமஸ்கிருதம் தான் என்ற கொள்கையை தொடர்ந்து நிறுவி வந்த ஆரிய வைதீக கும்பலும் அதை அப்படியே வழி மொழிந்த பிரிட்டிஷ் மொழியாளர்களும் முதல் முறையாக அதிர்ந்து போன தருணம் தான் – 1856ல் இராபர்ட் கால்டுவெல் வெளியிட்ட ஆய்வு நூல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’!
* தமிழும் மற்ற திராவிட மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானவை அல்ல என்றும் இவைகள் தனித்தொரு குடும்பத்தை சேர்ந்தவைகள் என்றும் குறிப்பாக சமஸ்கிருத உதவியின்றி தனித்து இயங்கும் இயல்பு தமிழுக்கு முழுவதும் உண்டு என்ற பெரிய உண்மையையும் அதில் கால்டுவெல் குறிப்பிட்டிருந்தார்!
* 1856ல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பது ஆண்டுகள் முன்னரே 1816ம் ஆண்டு ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன் மொழிந்தவர் பிரிட்டிஷ் அரசின் அதிகாரி ‘எல்லீஸ்’ என்று அறியும்போது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
அந்த ஆச்சர்யமான தகவல்களை தருகின்ற நூல் தான் இது !
* அரிய தகவல்களை தருகின்ற இந்த நூலிற்காக கடந்த இரு நூற்றாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லீசின் கையெழுத்துப் படிவங்களை தேடி அலைந்து கண்டுபிடித்து அவைகளை கொண்டு நூலை எழுதியிருக்கின்றார் பேராசிரியர்.
தாமஸ் டிரவுட்மன் (Thomas Trautmann – 1940). இந்த நூல் வெளிவருவதற்கு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் பேருதவியாக இருந்துள்ளது.
* பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis, 1777 – 1819) திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி.
பிரிட்டிஷ் மதராஸ் அரசாங்கத்தில் வருவாய் வாரியச் செயலாளர், நிலச் சுரங்க அதிகாரி, சென்னை மாவட்ட ஆட்சியர் எனப் பல உயர் பதவிகளை வகித்ததால் மக்களால் ‘ எல்லீஸ் துரை ‘ என்று அழைக்கப்பட்டவர்!
* திருக்குறளின் மீது கொண்ட அளவற்ற பற்றால் தம் பொறுப்பிலிருந்த அரசாங்க தங்க சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு வராகன் தங்க நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர் எல்லீஸ்!
தமிழ் மீது மிகுந்த பற்றும் அக்கறையும் பயிற்சியும் கொண்டவர்.
தமிழ் மீது காதல் கொண்டதால் தன்னை ‘எல்லீசன்’ என அழைத்துக் கொண்டவர். தமிழில் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார்!
* பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சிக்கு எல்லீஸ் துரையே ஊற்றுக்கண் என்று முதன் முதலில் குறிப்பிட்டார் அயோத்தி தாசர்.
இப்பணியில் எல்லீஸ்க்கு அயோத்தி தாசரின் பாட்டனார் (கந்தப்பன்) நேரிடையாகவும் உதவியிருக்கின்றாராம் !
* இத்தகைய பெருமையுடைய எல்லீஸ் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்றுவிப்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை 1812ல் நிறுவினார்.
சென்னை கல்விக் கழகம் என்று தமிழில் அறியப்பட்ட இக்கல்லூரியே எல்லீசின் மொழி ஆய்வுக்கு களமாக விளங்கியது.
1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை கற்றுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தினார் – எல்லீஸ் துரை!
* இந்த நூல் மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டையின் கல்லூரி துவக்கம் (1812) முதல் எல்லீசின் அகால மரணம் வரை (1819) பேசுகிறது.
நூலாசிரியர் தாமஸ் டிரவுட்மன் தனது விடாமுயற்சியால் எல்லீசின் எழுத்துக்களை தேடி அலைந்து கண்டுபிடித்தது மிகவும் போற்றுதற்குரியது!
* இரண்டு நூற்றாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லீசின் கையெழுத்துப் படிகளை இலண்டனிலும் ஆக்ஸ்போர்ட்டிலும் எடின்பரோவிலும் புதையலெனக் கண்டெடுத்து பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் இந்த நூலை ஒரு சிறந்த ஆவணமாகப் படைத்து வழங்கியுள்ளார்.
* எல்லீஸ் துவக்கிய சென்னை கல்விக் கழகத்தில் தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர் முதலான தமிழறிஞர்கள் பணியாற்றினார்கள்.
அந்த வேளையில் தான் இலக்கண நூல்களும், உரைநடை நூல்களும் இங்கு அச்சடிக்கப்பட்டன.
* இந்த மொழி ஆய்வுச் சூழலில் தான் எல்லீசின் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கம் நிறுவப்பட்டது.
1814லிலேயே தெலுங்கைத் தமிழின் சகோதரி மொழி என்று எல்லீஸ் குறிப்பிட்டிருந்தார்.
வேறொரு இடத்தில் தமிழ் பிற திராவிட மொழிகளின் பெற்றோர் (Parent) என்று தெரிவித்திருந்தார்!
* 1816ல் காம்ப்பெல் என்ற மொழியறிஞரின் தெலுங்கு இலக்கண நூலுக்கு முகப்புரையாக எல்லீஸ் எழுதியிருந்த விரிவான ஆய்வுரையில்
தெலுங்குக்கும் சமஸ்கிருதத்துக்கும் குடி உறவில்லை என்பதையும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலானவை ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்றும், சொற்கள் அளவிளான கொள்வினையே சமஸ்கிருதத்துடன் இந்த மொழிகளுக்கு உண்டு என்றும் நிறுவிக் காட்டினார்.
* இதைத் தான் நூலாசிரியர் தாமஸ் டிரவுட்மன் திராவிடச் சான்று (Dravidian Proof) என்று இந்த நூலில் குறிப்பிடுகின்றார்!
* “எல்லீஸ் முன்மொழிந்த ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற இந்த கருத்தாக்கமே கால்டுவெல்லின் நூலாய், முழு மலர்ச்சியுடன், புலமை விரிவுகள் கொள்கின்றது.
எல்லீசின் முன்னோடிப் பங்களிப்பை கால்டுவெல் குறைத்துக் காட்டினார் என்பது ‘முழு நிலவின் களங்கம்’…” – என்று இந்த நூலுக்கு விரிவானதொரு மதிப்புரை வழங்கிய ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்!
* திராவிட மொழி, நாகரிகத்தின் மூல வேரை அறிந்து கொள்ள உதவிய மூன்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களுக்கும் அவர்களது கண்டுபிடிப்புகளுக்கும் நமது தமிழ்ச் சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது!
1) 1816ல் எல்லீஸ் வெளிப்படுத்திய திராவிட மொழிக் குடும்பம்.
2) 1856ல் கால்டுவெல் வெளிப்படுத்திய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.
3) 1924ல் ஜான் மார்ஷல் வெளிப்படுத்திய சிந்துவெளி நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்புகள்.
* எல்லீஸ் துரையை நமது பொதுச் சமூகம் நினைக்காமல் போனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்று தாமஸ் டிரவுட்மன் கருதுகின்றார்..
முதலாவதாக – எல்லீஸ் தனது நாற்பது வயது வரை எதையும் வெளியிடப் போவதில்லை என்று இருந்தார்.
ஆனால், அவரது நாற்பத்தி ஒன்றாவது வயதிலேயே அகால மரணம் அடைந்து விட்டார்!
இரண்டாவதாக – எல்லீஸ் மதுரையில் ரூஸ் பீட்டர் என்ற மதுரை ஆட்சியருடன் தங்கியிருந்தபோது, தனது வயிற்று நோய்க்கான மருந்தென்று கருதி தவறுதலாக நஞ்சை உட்கொண்டு விட்டாராம்.
அந்த அகால மரணத்தின் காரணமாக அவரது பல எழுத்துக்கள், கைப்பிரதிகள் எல்லாம் பாதுகாக்கப்படாமல் அழிந்து விட்டதாம்!
“அந்த அரிய பொக்கிஷங்களில் பல மதுரை ஆட்சியர் ரூஸ் பீட்டரின் சமையல்காரர் அடுப்பெரிக்கவும் கோழி வறுக்கவும் பயன்பட்டன!” என்று அழாத குறையாக நூலாசிரியர் தாமஸ் டிரவுட்மன் குறிப்பிட்டிருக்கின்றார்!
*நமது மொழி, நாகரிகத்தின் சிறப்புகளை கடினமான முயற்சிக்குப் பின்னர் வெள்ளையர்கள் வெளிக் கொணர்ந்தார்கள் என்ற கருத்தாக்கத்திற்கு இந்த நூல் மற்றுமொரு சிறந்த சான்றாக உள்ளது..
எல்லீசின் எழுத்துக்களை தேடி அலைந்து கண்டுபிடித்து நமக்கு வழங்கிய தாமஸ் டிரவுட்மனின் அர்ப்பணிப்பு எல்லோராலும் நினைக்கப்பட வேண்டிய ஒன்று! அவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.
******************************
திராவிடச் சான்று : எல்லீசும் திராவிட மொழிகளும்
ஆசிரியர்: தாமஸ் டிரவுட்மன்
தமிழில்: இராம. சுந்தரம்
காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு: 2007
பக்கங்கள்: 392
விலை: ரூ. 300/-