நவீன காலத்தில் உலகெங்கிலும் பாலின சமத்துவத்துக்கான விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும், பாகுபாடுகள் முழுமையாக மறைந்து விட்டதா என்பது விவாதத்துக்குரியது.
முன்பெல்லாம் கருவிலேயே பெண் குழந்தைகள் அழிந்து விடும் அவலங்கள் அரங்கேறியதால், பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்க கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இன்றும் இவை முற்றிலும் நடப்பதில்லை என்று ஆணித்தரமாக சொல்ல இயலாவிட்டாலும் ஓரளவு முதிர்ச்சி பெற்றுவிட்ட சமுதாயத்தில் இவை பெரும் சதவீதத்தில் குறைந்துவிட்டது என்பது உண்மை.
மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக விளங்குவது கல்வியும் சுதந்திரமும்.
பல துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குவதும், பொருளாதார ரீதியாக குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் நிலையும் நிலவுவதால் பெரும்பாலான பெற்றோருக்கு பெண்ணை பாரமாக நினைக்கும் சிந்தனையும், மகனை மட்டுமே அண்டி வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் நம்மிடம் திணிக்கப்பட்ட சில எண்ணங்கள், பார்வைகள் அத்தனை எளிதாக நம்மை விட்டு நீங்குவதில்லை.
பிள்ளை வளர்ப்பின்போது காட்டப்படும் பேதங்கள் அவர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி நிலைத்து விடுகின்றன.
இது அடுத்தடுத்த சந்ததிகளுக்கு பாலினப் பாகுபாடுகளைக் கடத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
இதுதான் பிற்காலத்தில் தன் இணையரும் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும் அப்பெண் சமைப்பதை கடமையாகவும் தான் என்றாவது சமையல் செய்வதை தன் இணையருக்கு தான் செய்யும் உதவியாகவும் பார்க்க வைக்கிறது ஆண்களை.
பெண் குழந்தைகள் வளர்ப்பில், அவர்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு படிக்க வைத்து, வேலைக்கும் சென்று பணம் ஈட்டும் அளவோ இல்லை பெரிய பதவியில் பொறுப்பேற்று சமுதாயத்தை துணிவுடன் எதிர்கொள்ளும் அளவிற்கோ துணை நிற்கின்றனர் பெற்றோர்.
ஆனால், வீட்டில் இருந்து கொண்டு பிள்ளைகளையும் குடும்பத்தையும் மட்டுமே பராமரித்து கொண்டு வாழ்ந்து வந்த அம்மாக்களையும், அத்தைகளையும், பாட்டிகளையும் பார்த்து வளர்ந்த ஆண்களுக்கு,
சுயமாக சிந்தித்து செயல்பட்டு முன்னேறும் பெண்களுடன் வாழ்வதற்கான வளர்ப்பு முறைகளை கற்றுக் கொடுத்திருக்கிறார்களா என்றால், இல்லை என்றே சொல்லும் நிலைதான் நிலவுகிறது.
பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட அன்றும் சரி, சுதந்திரமாக செயல்பட வைக்கும் இன்றும் சரி, பெற்றோர்களின் கவனம் பெண் குழந்தைகளின் வளர்ப்பின் மீது மட்டுமே உள்ளது.
ஆண் குழந்தை வளர்ப்பிற்கான அடிப்படைகள் இன்னும் வகுக்கப்படாமலே உள்ளன.
வெளி உலகில் எவ்வளவுதான் பிரகாசித்த போதிலும் வீட்டினரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யாத பட்சத்தில் குடும்பத்தை சீர்குலைப்பவள் என்ற குற்றச்சாட்டும் பெண்ணின் மீது வைக்கப்படுகிறது.
ஆணும் பெண்ணும் இணைந்து, வாழ்வில் வளர்ச்சி பெறும்போது தான் அடுத்த சந்ததிகளை சரியாக வளர்த்தெடுக்க முடியும் என்ற கருத்து இன்னும் ஆழமாக விதைக்கப்பட வேண்டிய தருணம் இதுவாகும்.
இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலும் அதில் ஒருவர் பின் தங்கியும் ஒருவர் முன்னேறியும் செல்லும்போது வாழ்வின் இலக்கை சென்றடைய முடியாமல் பயணம் தடைப்பட்டுவிடும்.
திருமணமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் பெண்களின் சதவீதம் தற்போது அதிகரித்து வருகிறது இது போன்ற காரணங்களினால் தான்.
முன்னேற்றம் என்பது வெறும் பதவியிலும் பணத்திலும் மட்டுமல்ல, வாழ்வை பார்க்கும் பார்வையில் உள்ளது என்றும் பெண்ணின் முன்னேற்றத்தை ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனநிலை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை உயரும்போது மெல்ல மெல்ல பாலினப் பாகுபாடுகள் களையப்படும் என்பதில் ஐயமில்லை.
S. வாணி