ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள வேண்டும். “ஞானம் வேறு; பிரேமம் வேறு”.
ஞானத்தைப் பற்றி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பிரேமம் இல்லாமல் மனித உயிர்க்கூட்டம் எப்படியிருக்கும்? உங்கள்
வீட்டுச் செடியில் அன்றைக்கு மலர்ந்த மலரைத் தனியாக நின்று பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும்.
அது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவம்தானே?
எந்த வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் குழந்தையின் சிரிப்பை ஏற்றுக் கொள்கிறோம்.
இன்னுமொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக்கொள்கிற இந்த மனப்பாங்கு இருக்கிறதே அதுதான் பிரேமம். உயிர்க் கூட்டங்களுக்கு இடையேயான இயைபு எனச் சொல்வது இதுதான்.
அறிவுவாதமும் அன்புவாதமும் இரண்டும் சமமாகப் பிரிக்க முடியாதபடி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல இருக்க வேண்டும்.
பிரேமமும், ஞானமும் பிரிக்கமுடியாதபடி இருக்க வேண்டும். நாணயத்தின் ஒரு பக்கம் தேய்ந்துபோனாலும் செல்லாத நாணயம்தான்.
எனவே அறிவுவாதம் மட்டுமே மனித சமூகத்தை வளர்க்காது. அன்புவாதம் மட்டுமே சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்செல்லாது.
– தொ. பரமசிவன்