மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் சட்டசபை நேரலை!

பொதுவாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் மாலை நேரமாகிவிட்டாலே அன்றன்றைக்கான அரசியல் நிகழ்வுகளை விவாதப் பொருளாக்கி பேசுவதற்கென்றே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெருமக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதைவிட சுவாஸ்ரயம் கூடியவையாக இருக்கின்றன தற்போது தமிழக சட்டப்பேரவை நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பும் காட்சிகள்.

நேரலையில் சிலர் நேரடியாக சவால் விடுகிறார்கள்; சிலர் தர்மசங்கடத்தோடு அதற்கு பதிலளிக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு சிலர் உச்சகட்டக் குரலில் கத்துகிறார்கள்.

சபாநாயகரான ஜே.சி.டி பிரபாகர் எவ்வளவோ மன்றாடியும் சிலரை அமர வைக்க அவர் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே எத்தனையோ புள்ளிவிவரங்கள், குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகின்றன.

சட்டசபையில் நேரலையாக நிகழும் இவற்றையெல்லாம் வழக்கமாக சீரியல்களைப் பாக்கும் பெண்களும் இளைஞர்களும் கூட இந்த சட்டசபை நேரடி ஒளிபரப்பைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பார்த்ததோடு மட்டுமல்லாமல் பலரிடமும் பொது இடங்களிலும் அது குறித்து விவாதிக்கிறார்கள்.

அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எத்தகைய மாண்புடன் சட்டசபையில் நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து வருத்தப்படுகிறார்கள். விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

தமிழக முதல்வரான விஜய் ஒரு கூட்டத்தில் பேசியபோது, “ஏண்டா விஜய் மீது கைய வச்சோம்னு வருத்தப்படப் போறீங்க” என்று சொன்னதுமாதிரியே சட்டசபை நிகழ்வுகளை ஏன் நேரலையாக ஒளிபரப்பச் சொன்னோம் என்று, கேட்டவர்களே நொந்துகொள்ளும் அளவுக்கு சட்டசபையில் தங்களுடைய நிறைகளைவிட குறைகளையே அதிகம் வெளிப்படுத்தி, தங்களைத் தாங்களே எக்ஸ்போஸ் பண்ணிக்கொள்வது அவர்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கிறது.

மேடைப் பேச்சில் கவனமின்றி பேசியவர்கள்கூட சட்டசபையில் பல்வேறு திசைகளிலும் கேமராக்கள் தொடர்ந்து கண்காணிக்கும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமரா கண்காணிப்புகளுக்கு இடையே சிக்கிக் கொண்டவர்களைப் போலவே சட்டசபையிலும் சிலர் பேச்சிலும் செயல்பாட்டிலும் தடுமாறி, மாட்டிக் கொள்கிறார்கள். 

இதுவும் மக்களுக்கான ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான்.

– லியோ

 
You might also like