இன்னும் எத்தனைக் காலம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?

சாதனைப் பெண்கள் சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாட்டைக் கடந்து, உடல் குறைபாட்டையும் புறந்தள்ளி, தான் மேற்கொண்ட பாதையில் வெற்றி பெற்றதன் மூலம் பிறர் நெஞ்சங்களிலும் நம்பிக்கையைப் பூக்க வைத்திருக்கும் சாதனைப் பெண்கள் சிலரை பற்றி பார்ப்போம்.

வர்ஷா:

திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் 25 வயதான மாற்றுத்திறனாளி வர்ஷா. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

பார்வைக் குறைபாட்டின் காரணமாக பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிரமத்திற்கு உள்ளானார்.

பத்தாம் வகுப்பு வரை கண்ணாடி அணிந்து படித்தவர், பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் உருப்பெருக்கி எனப்படும் magnifier மூலம் படிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.

ஆடியோ புத்தகம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளின் உதவியோடு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படித்தார்.

தொடர்ந்து ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தினால் போட்டி தேர்வுக்குத் தன்னை தயார்படுத்தினார்.

பார்வைக் குறைபாடு கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் போது, அவர்கள் சொல்வதைக் கேட்டு விடைத்தாளில் எழுதுபவரை Scribe என்று குறிப்பிடுவார்கள்.

இத்தகைய Scribe-களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படாததால், தேவையற்ற கால தாமதத்தையும் மன அழுத்தத்தையும் சந்தித்திருக்கிறார்.

எனினும் எல்லா சிக்கல்களையும் தன் உழைப்பினால் வெற்றி கண்டு 2024-ம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில், மாநில அளவில் வெற்றி பெற்று இன்று அரசுப் பதவியை அலங்கரிக்கிறார்.

பிரியா:

ஆண்களே ஆண்டு கொண்டிருக்கும் குறிப்பிட்ட துறைகளில், அரிதாக சில பெண்களும் ஆதிக்கம் செலுத்துவது உண்டு.

அப்படிப்பட்ட துறைகளில் ஒன்றான லோடு ஆட்டோ ஓட்டும் பணியில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஈரோட்டை சேர்ந்த பிரியா.

வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். என்றாலும் கல்வியின் மீது இருந்த ஆர்வம் காரணமாக மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி அடைந்தார்.

பின்பு செவிலியருக்கான பட்டயப் படிப்பையும் முடித்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே கணவரின் உடல்நலக் குறைவால் அவரின் தொழிலான ஆட்டோ சவாரியை கையில் எடுத்தவர், கூடுதல் வருமானத்திற்காக செவிலியர் வேலையை விட்டுவிட்டு முழு நேர ஆட்டோ ஓட்டுனர் ஆனார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பு மண முறிவை சந்திக்க நேர்ந்தது.

குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்க இன்னும் சற்று சிரமமான லோடு ஆட்டோ டிரைவராக தன் வேலையைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில், பெண் எவ்வாறு இந்த வேலையில் ஈடுபட முடியும் என்று யோசித்த வாடிக்கையாளர்கள், நேரம் காலம் பார்க்காமல் இவர் உழைக்கும் விதத்தை கண்டு, நம்பிக்கையுடன் பொருட்களை ஏற்றினார்கள்.

இன்று சொந்தமாக வண்டிகளை வாங்கி ஓட்டுநரை அமர்த்தி நிர்வகிக்கின்ற நிலைக்கு உயர்ந்துள்ளார்.

பழமை சிந்தனைகளை உடைத்தெறிந்து தனக்கான பாதையில் தனி முத்திரைப் பதித்து, பிறருக்கு உத்வேகம் தருகிறார் பிரியா.

  • எஸ்.வாணி
 
You might also like