அசாதரண வெற்றிக்கு உதாரணமான ’லீ ஜூன்’!

சாதாரண மனிதராகப் பிறந்து தன் திறமையாலும் அயராத உழைப்பாலும் உலகை உற்று நோக்கச் செய்து, அசாதாரண வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே.

அவர்களில் ஒருவர் தான் லீ ஜூன். இன்று உலகின் மிக முக்கியமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Xiaomi-யின் நிறுவனர் இவரே.

1969-ம் ஆண்டு சீனாவில் பிறந்த இவர், தன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை வூகான் நகரத்தில் நிறைவு செய்தார்.

வூகான், தொழில் நகரமாக இருந்ததால் லீ ஜூன் வளரும்போதே பல தொழில் நிறுவனங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்.

ஒரு பொறியியல் வல்லுனராக 1992-ம் ஆண்டு Kingsoft எனும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார் லீ ஜூன்.

இன்டர்நெட் சம்மந்தமான மென்பொருட்களைத் தயாரிக்கும் இந்நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்தார். படிப்படியாக முன்னேறி, 1998-ம் ஆண்டு நிறுவனத்தின் CEO-வாக பதவியேற்றார்.

இருந்த போதிலும் நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நிறுவனர் கையில் இருந்ததால் லீ-யால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

ஆகையால் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்து, joyo.com எனும், புத்தகங்களை விற்கக்கூடிய இணையதளப் பக்கத்தை, 2000-வது ஆண்டு தொடங்கினார். அவர் எதிர்பார்த்தபடியே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிறகு 2004-ம் ஆண்டு, அமேசான் நிறுவனம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து joyo.com- ஐ வாங்கியது.

தனது 33-வது வயதிலேயே மில்லியனர் ஆனார் லீ ஜூன். தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் இயங்கக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்தார்.

அதில் மொபைல்கள் மற்றும் இன்டர்நெட் துறையில் இயங்கக்கூடிய நிறுவனங்கள் தொடர்ந்து சரிவில்லாமல் முன்னேறிக் கொண்டிருப்பதை கவனித்து, இத்துறையில் முதலீடு செய்வதன் மூலம் முன்னேற முடியும் என்று கணித்தார்.

இவ்வாறாக திட்டம் தீட்டி 8 நபர்களுடன் இணைந்து ஆரம்பித்த நிறுவனம்தான் Xiaomi. சியோ என்றால் சீன மொழியில் சிறு என்று பொருள்.

எதுவாக இருந்தாலும் சிறிய விஷயத்தில் தான் தொடங்குகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு ஏப்ரல் 6, 2010-ம் ஆண்டு Xiaomi அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.

முதலில் ஆண்ட்ராய்டுக்காக பல அப்ளிகேஷன்களை உருவாக்கும் நிறுவனமாக இருந்தது Xiaomi. அந்த காலகட்டத்தில் சீனாவில் ஆப்பிள் செல்போன்கள் தரமானதாகவும் வேண்டும் என்றே விலை அதிகமாகவும் காணப்பட்டது.

இதனைக் கவனித்த லீ, ஏழைகள் கூட வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து, தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பான Xiaomi MI மொபைலை 2011-ம் ஆண்டு கொண்டு வந்தார்.

மொபைல் அறிமுகம் செய்யப்பட்ட 34 மணி நேரத்தில், மூன்று லட்சம் பேர் இதனை முன்பதிவு செய்தனர்.

லீ எதிர்பார்த்தபடியே, அவர் நிறுவனத்தின் முதல் மொபைல்போன் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இவர்களது அடுத்த தயாரிப்பான MI2 மொபைல், அறிமுகம் செய்யப்பட்ட 2012-ம் ஆண்டில் மட்டும் ஏழு புள்ளி இரண்டு மில்லியன் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைத்தது.

இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் அசுர வளர்ச்சி அடைந்த Xiaomi நிறுவனம், சீனாவின் ஐந்தாவது மொபைல் உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்தது.

இதற்கிடையே, நமது நாட்டைச் சேர்ந்த மனு ஜெயின் என்பவர் jabong com எனும் இணையதளத்தில் செல்போன்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

இந்தியாவில் இதனுடைய வணிக தேவை ஏற்படப்போகிறது என்று அனுமானித்த அவர். லீ-யிடமிருந்து 15,000 மொபைல் போன்களை வாங்கி flipkart இல் விற்பனையைத் தொடங்கினார்.

தொடங்கிய மூன்றே வினாடிகளில் 15,000 மொபைல்கள் விற்று தீர்ந்தன. அன்று flipkart-ன் மெயின் சர்வர் crash ஆகியது.

இந்தியாவின் விற்பனை வேகத்தை அறிந்த லீ நிறுவனம் MI4 மொபைலை வேறு எந்த நாட்டிலும் வெளியிடாமல் முதலில் நேரடியாக இந்தியாவில் வெளியிட்டது.

இந்திய சந்தையில் நுழைந்த Xiaomi, மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின விரும்பத்தக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியது.

Vivo மற்றும் oppo போன்ற பிற சீன நிறுவனங்களையும் தோற்கடித்தது. Xiaomi விற்பனையை இந்தியாவில் தொடங்கிய மனுஜெயின், இன்று அந்த நிறுவனத்தின் vice president ஆக உள்ளார்.

சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் Xiaomi, தொடர்ந்து பல்வேறு சலுகைகளுடன் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

சரியான திட்டமிடலுடன் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் லீ ஜூன்.

  • எஸ்.வாணி
You might also like