சமூக சேவை, விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சாதனை படைக்கும் பெண்களைப் பற்றிய தொகுப்பு இது.
கல்பனா சரோஜ்:
நாட்டின் பொருளாதாரத்தில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றி வரும் பெரும் தொழிலதிபர்தான் கல்பனா சரோஜ்.
இவர் தொழில் முனைவோர் மற்றும் TEDx பேச்சாளராகவும் உள்ளார். பல்வேறு துறைகளில் மாற்றத்தை தரக்கூடிய சக்தி வாய்ந்த பேச்சுக்கள் என்பதையே இது குறிக்கும்.
மும்பையின் குடிசைப் பகுதியில், ஏழை தலித் குடும்பத்தில், 1961-ம் ஆண்டு பிறந்தவர் தான் கல்பனா சரோஜ். வறுமையின் காரணமாக, இவருக்கு பன்னிரண்டாம் வயதில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பள்ளிக்கூட புத்தகங்களை சுமந்த கைகள், இல்லறப் பொருட்களை சுமந்தன. அவருடைய கனவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டன.
புகுந்த வீட்டில் பற்பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வதைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் தன் பிறந்த வீட்டிற்கு திரும்பினார்.
கணவனைப் பிரிந்த பெண்கள் பெற்றோருடன் வாழ்வதை ஏற்றுக்கொள்ள மறுத்தது சமூகம். அதனால் தற்கொலைக்கு முயன்றார் கல்பனா. பின்பு அவருடைய அத்தையால் காப்பாற்றப்பட்டு மும்பை திரும்பினார்.
தனி ஒரு ஆளாக, குடும்ப பாரத்தை சுமக்க முடிவு எடுத்தபோது அவருக்கு வயது 16. மும்பை நகரில், ஒரு ஆடையகத்தில், உதவி தையல் கலைஞராக வேலைக்குச் சேர்ந்தார்.
மிகக் குறுகிய காலத்திலேயே, கைத்தேர்ந்த நிபுணராக முன்னேறத் தொடங்கியபோது, அவருடைய இளைய சகோதரி உடல்நலம் குன்றி இறந்து போனார். சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாததே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
ஆதலால் அவரின் மறைவுக்குப் பின்னர், தான் ஒரு சாதாரண வேலைக்கு தொடர்ந்து செல்வது சரியல்ல என்றும், தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று முடிவெடுத்தார் கல்பனா.
பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கடனுதவி பெற்று, வீட்டு உபயோகப் பொருட்கள் வியாபாரத்தைத் தொடங்கினார்.
எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உந்துதலுடன் உழைக்கத் தொடங்கியவர், வெவ்வேறு தளங்களிலும், புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டார்.
KS Film Production என்ற பெயரில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.
பின்பு தொழில்துறை வணிகத்தில் கால் பதித்த அவர், இரண்டு வருடங்கள் சட்டரீதியாக போராடி, நிலத்தின் வழக்குப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்.
பிறகு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அத்தகைய ஒரு நிறுவனமே Kamani Tubes ஆகும்.
உலோக உற்பத்தி வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தில் இணைந்து இருந்தபோது. 2001-ல், இக்குழுமம் கலைக்கப்பட்டது. அப்போது இந்நிறுவனத்தை பொறுப்பேற்று வழிநடத்த கல்பனாவை அணுகினர் அதன் தொழிலாளர்கள்.
ஏராளமான கடன் சுமையில் மூழ்கிக் கொண்டிருந்த நிறுவனத்தைக் காப்பாற்றி கரை சேர்க்க உறுதி பூண்டார் கல்பனா.
நிர்வாகத்தில் மாற்றங்களைப் புகுத்தி, 10 பேர் கொண்ட சிறு குழுக்களை உருவாக்கி, உற்பத்தியைப் பெருக்கி, தொழிற்சாலையை மறு சீரமைப்பு செய்து, கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த நிறுவனத்தை மீட்டெடுத்தார்.
இன்று இந்தியாவில் செம்பு மற்றும் செம்பு கலவை தயாரிப்புகளின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கும் Kamani Tubes-ன் தலைவராக திகழ்கிறார் கல்பனா.
வெற்றிகரமான அசையா சொத்து வணிகத்தை உருவாக்கியவர் என்றும், தனது பங்களிப்பிற்காகவும் தொழில் முனைவோர் திறனுக்காகவும், உலக அரங்கில் போற்றப்படுகிறார் கல்பனா சரோஜ்.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேலாகும். இவரின் அளப்பரிய சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசு 2013-ம் ஆண்டு, நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீயை வழங்கி கௌரவித்துள்ளது.
ருமா தேவி:
சுமார் 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரந்து விரிந்துள்ள பாலைவன பூமியான ராஜஸ்தானின் Barmer மாவட்டத்திலுள்ள எளிய கிராமத்தில் பிறந்தவர் தான்
ருமா தேவி.
சிறு வயதிலேயே தாயை இழந்த காரணத்தால் ருமா தேவியினால் எட்டாம் வகுப்பிற்கு பிறகு கல்வியைத் தொடர முடியவில்லை.
வீட்டுச் சூழலே உலகம் என்றாகி போனவருக்கு, விரைவிலேயே திருமணம் நடைபெற்றது. பொறுப்புகள் நிறைந்த வாழ்க்கை கசப்பை மட்டுமே தந்தது. வறுமையும் பின் தொடர்ந்து வந்தது.
அவரின் முதற் குழந்தைக்கு, பிறந்த சில நாட்களுக்கு உள்ளாகவே உடல்நிலைக் குறைவு ஏற்பட்டது. மூச்சு விட மிகவும் சிரமப்பட்டது.
தரமான மருந்துகளும், நல்ல சிகிச்சையும் கொடுக்க முடியாத காரணத்தால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவத்தால் மிகவும் மனமுடைந்து போன ருமா தேவி, தன்னுடைய பொருளாதார நிலையை மாற்றியே தீர வேண்டும் என முடிவு செய்தார். அப்பொழுதுதான் கைவினைக் கலையை கையில் எடுப்பது என தீர்மானித்தார்.
சிறுவயதில் தன் பாட்டியிடம் கற்ற, துணிகளில் செய்யும் கை வேலைப்பாட்டையே தன் தொழிலாக மாற்றுவது என்ற முடிவுக்கு வந்தார்.
தன்னைப்போல் வறுமையில் வாடும் பிற பெண்களையும் இணைத்துக் கொண்டுக் குழுவாக செயல்பட வேண்டும் என்று திட்டம் திட்டினார். ஆனால், இது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.
பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. பொதுவாகவே ராஜஸ்தானில் 50 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும்.
அந்த வெயில் நேரத்திலும், ஒவ்வொரு பெண்ணின் வீட்டிற்கும் சென்று நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைத்து ஆட்களை சேர்த்தார்.
நிறைவாக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமிருந்தும் 100 ரூபாய் சேமித்து தொழிலைத் தொடங்கினார்கள்.
சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல இந்த குழுவானது லாபம் ஈட்ட தொடங்கியது. அதில் மட்டும் திருப்தி அடையாமல் அடுத்தடுத்த படிகளில் முன்னேறி சென்றது இந்தக் குழு.
நவீன ஆடை உலகை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது.
ராஜஸ்தானின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று, ஜெய்ப்பூரில் Rajasthan Heritage Week என்ற பெயரில் நடைபெற்றது.
தன்னுடைய குழுவும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில், அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை அணுகிய போது, அவர் அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெரிய ஆடை வடிவமைப்பாளர்கள் பங்குபெறும் போது, அறியப்படாத குழுவுக்கு வாய்ப்பு எப்படி தர முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனாலும் விடாது முயன்று Fashion Show செய்வதற்கு அனுமதி பெற்றார்.
நான்கு மாத கடினமான உழைப்பும், நூற்றுக்கணக்கான சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட பிறகு, வடிவமைப்பு ஆடைகள் உயிர்ப் பெற்றன.
இந்த ஆடைகளை உடுத்திய பெண்கள், மேடையில் வலம் வந்த போது, பலத்த கைத்தட்டல்களுடன் அரங்கத்தில் உள்ள அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது இந்தக் குழு.
ராஜஸ்தானின் மிகப்பெரிய பாலைவனமான ‘தாரின்’ பெயரை அடிப்படையாகக் கொண்டு, ‘Thar Fashion Queen’ என்று அழைக்கப்படுகிறார் ருமா தேவி.
பள்ளிக்கல்வியை கூட நிறைவு செய்யாத இவர், இன்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ராஜஸ்தானின் பாரம்பரிய கலை பற்றிய உரை நிகழ்த்தியுள்ளார்.
2006-ம் ஆண்டு, வெறும் 10 பேரை மட்டுமே கொண்டு ஆரம்பித்த இந்தக் குழுவில், சர்வதேச அளவில் 22 ஆயிரம் பெண்கள் இணைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள 75 கிராமங்களில் வசிக்கும் பெண்களும் இக்குழுவின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 50,000 பெண் கலைஞர்களுக்கு பயிற்சியும் ஆதரவும் அளித்துள்ளார். இவர் இந்தியப் பாரம்பரிய கைவினைக் கலைஞர் மட்டுமல்லாது, சமூக சேவகியாகவும், பேச்சாளராகவும் உள்ளார்.
பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் கலைகளின் புனரமைப்பிற்காகவும் பாடுபடுகிறார்.
இவரின் சிறந்த பங்களிப்பிற்காக Nari சக்தி விருது, வருடத்தின் சிறந்த வடிவமைப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் பாரம்பரிய கைவினை கலையை உலகளவில் கொண்டு சேர்த்த ருமா தேவி, ஆடை வடிவமைப்பின் அடையாளமாக திகழ்கிறார்.
இவர்களைப் போன்ற பெண் சக்திகள் இன்னும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை உணர வேண்டும்.
– எஸ். வாணி