பலருக்கும் வழிகாட்டுதலாய் விளங்கும் சாதனைப் பெண்கள் சிலரைப் பற்றி இங்கு காண்போம்.
ஜெயலட்சுமி:
ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது அந்நாட்டு குடிமக்களின் சுற்றுச்சூழல், தூய்மை, பாதுகாப்பான உணவு, குடிநீர் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.
நோயற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இது அடித்தளமாக அமைகிறது.
தனிநபரின் சுகாதாரமின்மை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தன்மை கொண்டிருப்பதால் இதனை பற்றிய விழிப்புணர்வு பெறச் செய்வது மிகவும் அவசியம். இத்தகைய சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்த தன் ஊரை மீட்டெடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி.
புதுக்கோட்டையில் உள்ள ஆதனக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறு பெண், தன் ஊரில் உள்ள 125 வீடுகளுக்கும் கழிவறை கட்டிக் கொடுப்பதற்குக் காரணமாய் இருந்துள்ளார்.
கழிவறை கட்ட, தனக்கு தனிப்பட்ட முறையில் வந்த உதவியை ஊருக்காக மாற்றி, எல்லாரும் பயன் பெற வழிவகை செய்துள்ளார்.
இவர் கிராமத்தில் கழிவறை வசதி என்பது கிடையாது. பொதுவெளியில் தான் மலம் கழிக்க வேண்டிய சூழல் இருந்தது. வீட்டில் உள்ள பெண்கள் தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று வர வேண்டும்.
வழியில் டாஸ்மாக் கடையில் இருப்போரின் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக நேரிடும் நிலையும் இருந்தது. எவ்வளவு அவசரமான சூழ்நிலை என்றாலும் அது அதிகாலை நேரம் அல்லது இரவு நேரங்களில் மட்டுமே சென்று வர வேண்டும்.
குறிப்பிட்ட இடத்தைத் தாண்டி வேறு எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்தக் காட்டிற்கு சொந்தகாரர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் கிராமத்துப் பெண்கள் அனைவரும் அன்றாடம் சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இது பற்றிய எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்காமல் இருந்தனர்.
ஜெயலட்சுமி படிக்கும் பள்ளியில் மட்டுமே கழிவறை வசதி இருந்ததால், வீட்டிற்கு வந்தவுடன் மிகுந்த அவதிக்கு உள்ளானார்.
படிப்பு நிமித்தமாக அவருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு நிதி உதவி செய்ய பலர் முன் வந்தார்கள். கிராமாலயா தன்னார்வ நிறுவனத்தின் நிர்வாகியும் அதில் ஒருவர்.
அவரிடம் ஜெயலக்ஷ்மி தனக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது என்றும் அதற்கு பதிலாக தன் கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கழிவறை கட்டிக் கொடுக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். அவரின் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டார் நிர்வாகி.
இதுகுறித்து ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அங்குள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊரில் உள்ள ஒரு சில ஆண்களைத் தவிர பெண்கள் அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
ஆண்களுக்கு மாதவிடாய் காலம் என்பதெல்லாம் கிடையாது என்பதால் அவர்கள் பெரிதாக இதில் ஆர்வம் காட்டவில்லை.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மட்டுமே கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.
அது அளவில் மிகவும் சிறியதாக இருந்ததால், எவரும் அதனை பயன்படுத்த முன் வரவில்லை. இம்முறை இப்பிரச்சினைகள் எல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வரவழைத்து கழிவறையின் தேவை மற்றும் சுகாதாரம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இது பலருக்கு விழிப்புணர்வாக அமைந்தது.
வேண்டாம் என்று மறுத்துவர்களும் சம்மதம் சொன்னார்கள். மக்களின் பங்களிப்பாக கழிவறைக்கான அடித்தளம் கட்டும் பொறுப்பு அவர்களுக்கே வழங்கப்பட்டது.
இவ்வாறாக யோசித்து ‘Wash man’ திட்டத்தின் கீழ் 125 கழிவறைகளைக் கட்டிக் கொடுத்தது கிராமாலயா நிறுவனம். கட்டி முடித்த பின்னர், எல்லா வீடுகளிலும் முறையாக பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் அசவுகரியமானது எனக் கூறியவர்கள் இது அவசியமானது என உணரத் தொடங்கினார்கள்.
அடுத்த தலைமுறை பெண்களுக்கான சுகாதாரத்தைப் பெற்றுக் கொடுத்து, பிறருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார் ஜெயலட்சுமி.
கமோயின் – Kmoin Wahlang:
முகத்தில் தெரியும் முதிர்ந்த ரேகைகளைப் புறந்தள்ளிவிட்டு தன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் 77 வயதான கமோயின். நூற்றுக்கும் அதிகமான மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெற்று பதக்கங்களை அள்ளி வருகிறார் இவர்.
மேகாலயா மாநிலத்தில் உள்ள பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த கமோயின், தன் கணவருடன் வசித்து வருகிறார்.
இவருக்கு 12 குழந்தைகள் மற்றும் 55 பேரக் குழந்தைகள் உள்ளனர்.
வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்கு தீர்வு தேடி, பல மருத்துவ முறைகளைக் கையாண்டும் பலன் தராததால், மருத்துவரின் ஆலோசனைப்படி நடை பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்த பொழுது, வயது 70-ஐ கடந்திருந்தது.
மெல்ல மெல்ல ஓட்டப் பயிற்சி செய்ய துவங்கியவர், தன் உடல் நலம் முன்னேறுவதைக் கண்டு மேலும் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தார்.
தினமும் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். இதனை கண்டு ஊரில் உள்ள சிறுவர் சிறுமிகளும் அவருடன் இணைந்து கொண்டனர்.
கமோயின் திறமையைப் பார்த்து வியந்த மூத்த மாரத்தான் வீரர் ஒருவர், அவருக்கு முறையான பயிற்சி அளிக்க தொடங்கினார்.
தொடர் பயிற்சிகள் மூலம் கமோயினால் மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.
இதுவரையில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்துள்ளார் கமோயின்.
தொடர்ந்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் வேலை செய்து வருமானம் ஈட்டும் சுயசார்பு பெண்ணாகவும் இவர் விளங்குகிறார்.
சிறு வயது முதலே தான் சுறுசுறுப்பானவர் என்றும் கற்களை சுமந்து செல்வது போன்ற கடினமான வேலைகளையும் எளிதாக கையாண்டதாகவும் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை என்றும் கூறுகிறார்.
தன் கிராமத்தை விட்டு வெளியே சென்றிடாத கமோயின், மாரத்தான் போட்டிகளுக்காக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருகிறார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘Pan Pacific Masters Games’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க இயலாமல் போனதில் மிகுந்த மன வருத்தம் அடைந்தார்.
எனினும் பிற போட்டிகளில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார். ஊர் மக்கள் அனைவரும் அவரின் வளர்ச்சி நிலை கண்டு பெருமிதம் கொள்கின்றனர்.
இவ்வாறான பயிற்சிகளில் ஈடுபடுவது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுப்பதாகவும் கூறி அதற்கு வழிகாட்டியாக கமோயின் திகழ்வததாகவும் கூறுகின்றனர்.
சாதாரண கிராமத்து பெண்ணாக இருந்து இன்று உலக மாரத்தான் போட்டிகளின் மேடையை அலங்கரிக்கும் சாதனையாளராக மாறி உள்ள கமோயின், பிறருக்கு உந்து சக்தியாக விளங்குகிறார்.
- எஸ்.வாணி