1969 பிப்.3 – பேரறிஞர் அண்ணா என்னும் பேரொளி நம்மை விட்டு மறைந்த நாள்! ஆனால் அவர் காட்டிய பாதையும், ஊட்டிய சிந்தனையும் இன்னும் இந்த மண்ணில் நிலை பெற்று நிற்கின்றன!
அறிஞர் அண்ணா – ஓர் அரசியல் தலைவர், முன்னாள் முதலமைச்சர், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர், எண்ணற்ற கட்டுரைகளையும், நூல்களையும் தந்த எழுத்தாளர், மிகச் சிறந்த பண்பாளர் என்பனவற்றை எல்லாம் நாம் அறிவோம்! எல்லாவற்றையும் தாண்டி, அவர் ஓர் ஆசிரியர்!
ஆம், அவர் முறைசாராக் கல்வியின் ஆசிரியர், பொதுக்கூட்டங்கள் அவருடைய வகுப்பறைகள், எழுதிக் குவித்த வெள்ளைத் தாள்கள் நமக்கான கரும்பலகைகள்!
1930-களில் அவர் நேரடி அரசியலுக்கு வந்தார். அப்போது முதல், அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்! அன்றைய இளைய தலைமுறை, அவரிடமிருந்து கற்றவைகளும், பெற்றவைகளும் மிகுதி!
தன் கட்டுரைகளுக்கு அண்ணா சூட்டிய, பிரென்னர் கால்வாயில், ஸ்லட் நதிக்கரையில் போன்ற தலைப்புகள் எல்லாம் புதிய பாடங்களை அன்றைக்குச் சொல்லிக் கொடுத்தன.
ஆம், ஹிட்லரும், முசோலினியும் சந்தித்துப் பேசிய இடம் பிரென்னர் கால்வாய்!
இந்து மதத்தை விட்டு வெளியேறி, சமத்துவக் கருத்துகளைச் சீக்கிய மதம் எடுத்துச் சொன்ன இடம் ஸ்லட் அல்லது சட்லெஜ் நதிக்கரை!
சோவியத் நாட்டில், ஸ்டாலினும், ட்ராட்ஸ்கியும் எங்கே வேறுபட்டார்கள்? அண்ணாவைப் படித்தவர்களுக்குப் புரியும்!
எமிலி ஜோலாவின் நானா பாத்திரத்தை அண்ணாவின் வகுப்பில் இருந்தவர்கள் அறிவார்கள்!
என் தாய் மொழியில்தான் நான் என் ஆய்வேட்டை எழுதுவேன் என்று சொன்ன லெமனசோவை எடுத்துக்காட்டி, தாய்மொழிக் கல்வியின் தேவையை அன்றே உணர்த்தியவர் அண்ணா!
கம்பனின் கவிதை நயத்தை, கற்பனைத் திறத்தை, ஒப்புமை வளத்தை ஒப்புக்கொண்டாலும், கம்பரசம் பல இடங்களில் காமரசமாக இருக்கிறது என்பதை விளக்கியவரும், சேக்கிழார் ஒரு சீர்திருத்தக்காரரா என்று கேட்டு, செவ்விய விடையைத் தந்தவரும் நம் அறிஞர் அண்ணா!
உள்ளூர் அரசியலைத் தாண்டி, உலக வரலாற்றை, எண்ணற்ற இலக்கியங்களை, தத்துவச் சிந்தனைகளைத் தன் அழகிய தமிழில் எடுத்துச் சொன்ன இணையற்ற பேராசான், பேரறிஞர் அண்ணா!