உங்கள் கழுதையைக் கட்டிப் போடுங்கள்!

நேற்று டிஸ்கவரியில் ‘கொடுங்காற்றில் ஒரு விளக்கு’ கவிதை நூலை வாங்கியிருந்தேன். எம். கோபாலகிருஷ்ணன் சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார்.

ஒரு நூலை எப்படி உருவாக்க வேண்டும்? என்பதற்கு இலக்கணமாக, நூல்வனம் இந்நூலைத் தயாரித்திருக்கிறது. மணிகண்டனுக்கு பாராட்டுகள்.

காஷ்மீரின் சைவ மரபில் வந்த லல்லா எனும் ஒரு பெண் துறவியால் எழுதப்பட்டவை இக்கவிதைகள். துறவி என்பதைவிட Fakir என்றால் பொருத்தமாக இருக்கும்.

லல்லாவை@ (கி.பி. 1320–1392)

லல்லேஸ்வரி, லால் டெட் (தாய் லல்லா), லல்லா யோகேஸ்வரி, லல்லா அரிஃபா, அல்லது வெறுமனே லல்லா என பலவாறாக அழைக்கிறார்கள்.

இவரது வாழ்வு குறித்த வரலாறு புராணங்களாலும் புனைவுகளாலும் சூழப்பட்டிருக்கிறது.

இவரது தந்தை ஒரு பிராமண பண்டிட். லல்லாவின் காலத்தில் காஷ்மீரில் சைவ திரிக மரபு இருந்தது. ஆனாலும் லல்லாவின் கடவுளோ மதம் இல்லாதவர்.

சைவம் மற்றும் இசுலாம் ஆகிய இரண்டு நம்பிக்கைகளுக்கு இடையே பாலமாக செயல்பட்டவர் லல்லா.

கோயில், மசூதி இவற்றைக் கடந்து லல்லேஸ்வரி கடவுளோடான தனது உறவை உலகளாவிய வகையில் தனித்துவமாக வடிவமைத்திருந்தார்.

காஷ்மீரிகள் ‘எங்களுக்கு அர்த்தமுள்ள இரண்டு வார்த்தைகள் மட்டுமே தெரியும். ஒன்று அல்லாஹ், மற்றொன்று லல்லா’ எனக் கூறினர்.

லல்லாவின் படைப்புகளை ஒரு வசதிக்காகத்தான் கவிதை என்கிறோம். மற்றபடி அவை காஷ்மீர் மரபில் தோன்றிய வாக்கியாக்கள். வாக்கியங்கள். Aphorism போன்றவை.

இத்தகைய வாக்கியாக்கள் நான்கு வரிகளைக் கொண்டவை.

லல்லாவை 12 வயதில் மணம் செய்து கொடுத்திருந்தார்கள். கணவனாலும் மாமியாராலும் கொடுமைப் படுத்தப்பட்டு, வீட்டிலிருந்து வெளியேறி நிராவாணப் பக்கிரியாகத் திரிந்தார் லல்லா.

ஓர் உண்மையான ஆன்மீகவாதியின் அனைத்து ஆர்வத்துடனும் அவர் தனது சத்தியத்திற்கான பயணத்தை மேற்கொண்டார்.

ஆன்மீக அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட அன்பு மற்றும் சகிப்புத்தன்மையின் பிழிவாக அவரது ‘வாக்கியா’க்கள் அமைந்திருந்தன. ரிஷி மரபு மற்றும் சூஃபி மரபின் இணைவு அவற்றில் தென்பட்டன.

சைவம் மற்றும் சூஃபி ஆன்மீகத்தின் வினோதமான கலவை அவரது வாக்யாக்கள், வரம்பற்ற பக்தி, ஆன்மீக வெளிச்சம், ஞானம் மற்றும் தெய்வீக ஒற்றுமையின் பரவசத்தை வெளிப்படுத்துபவையாக அவை திகழ்ந்தன.

லல்லாவின் கவிதைகளில் அவரது காலத்தின் கொந்தளிப்பை உணரமுடியும். நடைமுறையில் காணப்படும் பாசாங்குத்தனமான மதிப்புகளை கடுமையாக விமர்சித்தவர் லல்லா. சாதியத்தை உரக்க எதிர்த்தவர்.

உயர்மட்ட பிராமணிய ஒழுங்கின் கொடூரமான அநீதிகளை வெறுத்தார். ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தை, சடங்குகளை நிராகரித்தார்.

மனித இருப்பை அதன் அன்றாட சிரமங்களோடும் கருணையோடும் கவனித்தார். இந்துக்கள், முஸ்லீம்கள் என இரு சமயத்தவரையும் லல்லாவின் கவிதைகள் பாதித்தன. மனதின் ஆழத்தில் வேரூன்றின.

அவர் உச்சரித்த வார்த்தைகள் பிரார்த்தனைகளாக மாறின.

லல்லாவின் மறைவு ஒரு புதிர். சித்தர்கள், பக்கிரிகள், சூஃபிகள் மறைவு வரலாறு ஆகாமல் புராணமாவது இயல்பே. வள்ளலார் போன்றோரின் இருப்பும் மரணமும் தருக்கத்துக்குக் கட்டுப்படாதவை.

லல்லா ஒரு பேக்கரி கடையின் எரியும் அடுப்பில் குதித்து சாம்பலானார். சாம்பலில் இருந்து மணம் கொண்ட பூக்கள் முளைத்தன எனக் கூறினார்கள். இது ஒரு கதை. இப்படி அவரது மறைவு குறித்து நிறைய புனைவுகள் இருக்கின்றன.

எழுபது வயதான லல்லா, ஒரு கூட்டத்தில், தன் வாக்யாக்களைப் பாடிக் கொண்டிருந்தார். முடித்ததும், அமைதியாக ஒரு பெரிய மண் பானையின் உள்ளே நுழைந்து அதை மூடினார்.

நீண்ட நேரம் கடந்தும் வெளியே வரவில்லை. பதட்டமடைந்த பார்வையாளர்கள் பானையைத் திறந்தார்கள். அது காலியாக இருஇருந்தது.

தனது உடல் இந்துச் சடங்குப்படி அடக்கம் செய்யப்பட வேணாடுமா? முஸ்லிம் முறைப்படியா? என தன் சீடர்களுக்கிடையை சண்டை வரக்கூடாது என விரும்பியே, காற்றாக மறைந்தார் என்று அவரது சீடர்கள் கருதினர்.

தனக்கு வாழ்வும் மரணமும் ஒன்றுதான். வாழ்வதில் மகிழ்ச்சி, இறப்பதில் மகிழ்ச்சி! என நம்பியவர் லல்லா.

லல்லா அரிஃபா, தனது அற்புதமான ஆன்மீகக் கவிதைகளால், இன்றுவரை ஞாபகம் கொள்ளப்படுகிறார்.

இன்றும் காஷ்மீரில் நடைபெறும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சிளிலும், பாடகர்கள் காஷ்மீரின் மிகச்சிறந்த கவிஞரான லல்லாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது கவிதைகளைப் பாடியே தம் நிகழ்வைத் தொடங்குகிறார்கள்.

லல்லாவைப் பற்றி, 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஆன்மீகக் காஷ்மீர் கவிஞரான ஷம்ஸ் ஃபக்கீர் கூறுவதைக் கேட்போம்.

‘லல்லா குளிப்பதற்காக ஒரு புனிதத் தலத்திற்குச் சென்றபோது அவள் கடவுளைத் தவிர வேறு யாரும் இல்லாத ஒரு வசிப்பிடத்திற்கு நீந்தினாள்!’

மனிதர்கள் மனிதர்களோடுதாம் வாழ முடியும். ஆனால், எல்லா மனிதர்களின் இலக்கும் இப்படி கடவுளைத் தவிர வேறு யாரும் இல்லாத ஒரு வசிப்பிடத்தில் வாழும் விழைவாக இருக்கிறது. அதற்கு நாம் லல்லாவாக வேண்டும்.

●●
‘கொடுங்காற்றில் ஒரு விளக்கு’ நூலில் ரசித்த சில வாக்யாக்கள்.

/ நீ உயிருடன் இருந்தபோதும்
ஏற்கனவே மடிந்துவிட்டாய்
இனி ஒரு போதும்
நீ செத்துப்போக முடியாது/

செத்துப்போக முடியாதது எவ்வளவுப் பெருந்துயர். இந்த வரிகள் ‘சுருக்’கென்று தைக்க, துணுக்குற்றேன்.


/தாயாகி அவள் உனக்கு பாலூட்டுவாள்
மனைவியாகி அவள் உன்னைச் சீராட்டுவாள்/

இதுவரை நாம் அறிந்ததுதான்.

லல்லா தொடர்கிறார்.

/வசியக்காரியாய்
அவள் உன் கழுத்தில் சுருக்கிடுவாள்
பெண்ணை அறிந்துகொள்/

ஆக்கல் காத்தல் மட்டுமில்லை, அழிக்கும் சிவமும் பெண்ணே! என்கிறார் லல்லா.

அடுத்த ‘சுருக்’.


/உன் கழுதையை இஷ்டம்போல் திரியவிடாதே
அடுத்தவரின் குங்குமப்பூ வயலை மேய்ந்துவிடும்
உனக்காக அடி உதைகளை வாங்க
அடுத்தவர் எவரும் முதுகைக் காட்ட மாட்டார்கள்/

இதைப் படித்ததும் நான் என் கழுதையைக் கட்டிப்போட்டேன்.

எங்கள் வீட்டு எதிரே இருக்கும் கண்ணம்மா டீ கடைக்குப் போனேன். கடைச் சிப்பந்தி அழகானவள்.

‘ஒரு காஷ்மீர் காஹ்வா’ கேட்டேன்.

கொதிக்க கொதிக்க கொடுத்தாள்.

சுவைத்தால் அவ்வளவு திடம். மணம்.

‘இதில் என்னென்ன கலந்திருக்கிறீர்கள்?’ வினவினேன்.

‘ஏலக்காய், லவங்கம், குங்குமப்பூ!’ – குயில் கூவியது.

குங்குமப் பூ வயல்போல அவளுக்கு செவ்வரி ஓடும் வதனம்.

நல்ல வேளை, என் கழுதையைக் கட்டிப்போட்டு வந்தேன்.

– கவிஞர் கரிகாலன்

You might also like