சே.பிருந்தா 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்.
1999இல் ‘மழை பற்றிய பகிர்தல்கள்’. 2009இல் ‘வீடு முழுக்க வானம்’, 2014இல் ‘மகளுக்குச் சொன்ன கதை’, 2022இல் ‘நீயுறை மனது’ ஆகிய தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இவை.
மனதில் தோன்றும் ஒளிக்கீற்றே கவிதைக்கு போனதுமானது.
உதாரணம், வீசும் காற்றில்/ வீடே ஆடுகிறது/ விளக்குச் சுடருடன். சுவரின் யதார்த்தத்தோடு சுடரின் பிரமாண்டமான பிம்பம் ஆடியபடியே விழ, காற்றில் சுடர் ஆடி வீடே ஆடுவது போன்று தோன்றுகிறது.
ஒளிக்கீற்று போதுமானதல்ல.. கொஞ்சம்போல மெனக்கெட வேண்டும் என்ற வகைமையிலும் நிறைய எழுதியுள்ளார்.
உதாரணம், திடும் எனக் காதில் விழுந்தது/குயிலின் குயிலோசை/ பிரமையா நிஜமா என்று / நிதானிக்கவும்/ நேரமில்லை/ மெலி தான ஒரு கூவல்/ இப்போது நினைக்கையில்/ கேவலாகத் தோன்றுகிறது/ என்ன செய்ய முடியும்/என்னால்/ தினசரிப் பரபரப்பில்/தேய்கிறது குயிலின் குரல்/ என்று எழுதிவிட்டு போவது தவிர என்று முடித்துள்ளார்.
எல்லாமும் சாதாரணமாகத் தோன்றக்கூடியதுதான். ஆனால் ‘தினசரிப் பரபரப்பில்/ தேய்கிறது குயிலின் குரல்’ என்பது முகத்தில் அறையும் வாழ்வின் யதாரத்தம்.
மனசாட்சியின் கூரிய மெனக்கெடலை கச்சிதமாக இறக்கிவைத்துள்ளார் கடைசி வரிகளில்.
இவை இரண்டுமே தேவையில்லை. வாழ்க்கையின் தரிசனங்களிலிருந்தே கவிதையை எடுத்துக்கொள்ளலாம் எனும் விதமாகவும் அவர் எழுதியிருக்கிறார்.
எந்தச் சாவு வீட்டிலும்/ பீறிட்டுக் கிளம்பிவிடுகிறது/ பொறுக்க முடியாமல் அழுகை/ என் அப்பா இறந்த/ துக்கம் தாளாது. இக்கவிதை நிதர்சனத்தையே சொல்லிவிடுகிறது.
என் கவிதை எப்படிப்பட்டதென நானே சொல்கிறேன், என்கிறார் ஒரு கவிதையில், ‘வார்த்தைகளுக்கு தவமிருந்து/ வரப் பெற்றவையல்ல/என் கவிதைகள்/ பூமி பிளக்க /விறைந்தெழும்பும்/ விதைகள் போலுமல்ல/ அதன் வார்ப்பு/ அக்கா படிப்பது போல/ அம்மா சமைப்பதுபோல/ காற்றிற்கு/ நெற் பூக்கள் மடங்குவதுபோலும்/ நானும் செய்கிறேன்/ எனக்குத் தெரிந்ததை/ ஒருவேளை/ அவை கவிதைகளாயிருக்லாம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகும், ‘மலர்களை மலர்த்தி/ காற்றை வீசுகிறது/ உன் அன்பு’ என்பன போன்ற காதல் கவிதைகளில் அவரது தனித்துவத்தை அடையாளம் கண்டுவிடமுடிவது அவரது கவிதைகளின் பலம்.
எந்த வயதில் வேண்டுமானாலும் கவிதை எழுதுவது வேறு. இளம்பருவத்தில் எழுதப்படும் கவிதையின் வசீகரத்தை, அதிகாலைப் பனிபடர்ந்த பூக்களின் சில்லிப் பாய் எதிராளியும் உணரமுடிவது வேறு.
செ.பிருந்தாவின் கவிதைகள் 90களின் பிற்பகுதியில் இப்படித்தான் பத்திரிகைகளில் வாசகர்களுக்கு அறிமுகமாயின.
வெளிவந்த அவரது கவிதைகளின் எல்லா மெனக்கெடல்களிலும் பிருந்தா தெரியத் தொடங்கினார்.
இத்தொகுப்பில் இன்னும் சலித்தெடுத்தால் இன்னும் தெளிவாக அவர் தெரியக்கூடும்.
****
எரியும் கனவொன்று (கவிதைகள்)
சே.பிருந்தா
ஸ்நேகா வெளியீடு
விலை: ரூ.450
தொடர்புக்கு: 9840969757
– பால் நிலவன்
நன்றி: இந்து தமிழ் திசை