2 அத்லெட்களைத் தத்தெடுத்த சஞ்சு சாம்சன்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் சிறப்பாக ஆடியும் அடிக்கடி ஓரம் கட்டப்படும் வீரர் சஞ்சு சாம்சன். தனது நிலை ‘உள்ளே… வெளியே’ என்று தடுமாறிக்கொண்டு இருந்தாலும், தன் மாநிலத்தில் உள்ள மற்றவர்களுக்கு அந்த நிலை வரக்கூடாது என்று நினைக்கிறார் சஞ்சு.

அதனாலேயே கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சாதனை படைத்த ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனையைத் தத்தெடுத்துள்ளார்.

சஞ்சு சாம்சனால் தத்தெடுக்கப்பட்டுள்ள வீராங்கனையான தேவப்பிரியா ஷைபு, இடுக்கியில் உள்ள கல்வாரி உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பில் படிப்பவர்.

சமீபத்தில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் 100 மீட்டர் தூரத்தை 12.69 வினாடிகளில் ஓடிக் கடந்து மாநில அலவிலான சாதனை படைத்துள்ளார்.

38 ஆண்டுகளுக்கு முன்பு, இதே தூரத்தை 12.7 வினாடிகளில் பிந்து மாத்யூ என்பவர் ஓடிக் கடந்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது.

மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தேவப்பிரியாவுக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை.

அவரது அப்பா ஒரு பத்திரிகை ஏஜெண்ட் என்ற செய்தி வெளியாக, அம்மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் சொந்த செலவில் அவருக்கு வீடு கட்டித் தருவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது பயிற்சி மற்றும் பயணச் செலவுகளைத் தனது பெயரில் செயல்படும் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சனால் தத்தெடுக்கப்பட்ட மற்றொரு தடகள வீரரான டி.எம். அதுலும் ஓட்ட வீரர்தான்.

இதே பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் ஜூனியர்களுக்கான பிரிவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 10.81 வினாடிகளில் ஓடிக் கடந்திருக்கிறார் அதுல்.

இதன்மூலம் 1988-ம் ஆண்டில் இதே பிரிவில் ராம்குமார் என்ற வீரர் 10.90 வினாடிகளில் ஓடிக் கடந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

அதுலும் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர். ஆனால், தனது கடுமையான முயற்சியால் ஏழமையை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார் அதுல்.

இந்த 2 வீரர்களின் சாதனைகளைப் பற்றி கேட்ட பிறகு, அவர்களை தத்தெடுக்கப் போவதாக சஞ்சு சாம்சன் அறிவித்திருப்பதாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார்.

“வாழ்க்கையில் கடுமையான போராட்டத்துக்கு நடுவில் அவர்கள் இந்த சாதனையைப் படைத்திருப்பது எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

யாராவது ஆதரவு கொடுத்தால் தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால் எங்கள் அறக்கட்டளை மூலம் அவர்களைத் தத்தெடுக்கிறேன்.

மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் அவர்கள் பங்கேற்க செல்லும்போது, அவர்களுக்கான போக்குவரத்து செலவு மற்றும் தங்குமிட செலவுகளை எங்கள் சஞ்சு சாம்சன் அறக்கட்டளை பார்த்துக்கொள்ளும்”

– என்று சஞ்சு சாம்சன் தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் அறக்கட்டளை, கடந்த 2023-ம் ஆண்டுமுதல் கேரளாவில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து வரும் பணத்தை மற்ற விளையாட்டுகளின் வளர்ச்சிக்காக செலவழிக்கும் சஞ்சு சேட்டனின் நல்ல மனசுக்கு ஒரு சல்யூட்.

– பி.எம். சுதிர்

You might also like