தடைகளைக் கடந்து வெற்றியைத் தொட்ட ராஜா!

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்​கும் போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி.

இந்​திய ரயில்வே ஊழிய​ரான ராஜா, தூத்​துக்​குடி மாவட்​டம், கோவில்​பட்​டி​யில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்​தார்.

சிறு வயதிலேயே பளுதூக்​கும் விளை​யாட்​டின் மீது கொண்ட ஆர்வத்​தால், முறையான பயிற்சிகளை மேற்​கொண்டு ஜூனியர் பிரிவு​களில் பல்​வேறு சாதனை​களைப் படைத்​தார்.

2017-ம் ஆண்டு காமன்​வெல்த் இளை​யோர், ஜூனியர் சாம்​பியன்​ஷிப் போட்டிகளில் தங்​கம் மற்றும் வெள்​ளிப் பதக்​கங்​களை வென்றார்.

இவரது அபாரத் திறமையால், 2018-ல் ஆஸ்திரேலி​யா​வின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டிக்​கான இந்​திய அணியில் வாய்ப்பு கிடைத்​தது.

தனது முதல் காமன்​வெல்த் தொடரில் 62 கிலோ பிரி​வில் பங்​கேற்ற ராஜா 6-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

எனினும் கடின பயிற்​சிகளின் வாயி​லாக 2019-ல் தேசிய சாம்​பியன்​ஷிப் பட்​டம் வென்று தனது தரத்தை உயர்த்​திக் கொண்டதுடன் இந்​திய பளுதூக்​கும் உலகின் வளர்ந்து வரும் இளம் நட்​சத்​திர​மாக உரு​வெடுத்​தார்.

வெற்​றிகளை நோக்​கிச் சக்கரத்​தைக் சுழற்​றத் தொடங்​கிய வேளை​யில், 2019 காமன்​வெல்த் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் போது ராஜாவுக்கு மிகப்​பெரிய பின்னடைவு ஏற்​பட்​டது.

‘ஸ்​னாட்ச்’ பிரி​வில் எடையைத் தூக்​கும் போது, அவரது வலது முழங்​கை​யில் தசை​நார் கிழிவு ஏற்​பட்​டது.

காயத்​துக்கு ராஜா, உடனடி​யாக அறுவை சிகிச்சை செய்​து​கொண்​டார். ஆனால், எதிர்பாராத​வித​மாக உலகையே முடக்​கிய கோவிட் பெருந்​தொற்​று, அவரது மறுவாழ்​வுப் பயிற்​சியை வெகு​வாகத் தாமதப்​படுத்​தி​யது.

உத்​தரபிரதேச மாநிலம் மோடி நகர் தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளி​யேற வேண்டிய சூழ்​நிலை ஏற்​பட்ட போதி​லும், மனம் தளராமல் சொந்த செல​வில் தனிப்​பட்ட முறையில் பயிற்​சிகளை மேற்​கொண்டு மீண்​டும் களத்​துக்கு திரும்பினார்.

2022-ம் நடை​பெற்ற தேசிய சாம்​பியன்​ஷிப்​பில் பதக்​கம் வென்ற போதி​லும், துரதிஷ்டவசமாக அந்த ஆண்டு நடை​பெற்ற காமன்​வெல்த் போட்​டிக்​கான இந்திய அணித் தேர்​வில் நூலிழை​யில் வாய்ப்பை இழந்​தார்.

சோதனை​கள் இத்துடன் முடிய​வில்​லை, அதே ஆண்​டில் ராஜாவுக்​குக் கடுமையான மஞ்​சள் காமாலை பாதிப்பு ஏற்​பட்​டது.

இதிலிருந்து அவர் குணமடைந்து வெளியே வரு​வதற்​குள் குடல்​ வாலழற்சி ஏற்பட்டு மீண்டும் ஒரு அறுவை சிகிச்​சையை எதிர்​கொண்​டார்.

தொடர்ந்து 10 மாதங்​கள் பயிற்​சியே செய்ய முடி​யாமல் படுக்கையில் முடங்கிய சூழலில், ‘இனி பளுதூக்​கு​வது சாத்​தி​யமா?, விளை​யாட்டை விட்டு விலகி விடலாமா‘? என்று தீவிரமாக யோசிக்கும் அளவுக்கு மன வேதனை அடைந்​தார் ராஜா.

ஆனால், மனம் தளராமல் உடல்​நலம் தேறியதும் இரட்​டிப்பு வேகத்​துடன் பயிற்சிகளைத் தொடங்​கி​னார்.

இதன் பலனாக 2025-ம் ஆண்டு அகம​தா​பாத் காமன்​வெல்த் சாம்​பியன்​ஷிப்​பில் 296 கிலோ எடையைத் தூக்கி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

அதே ஆண்டு நார்​வேயில் நடை​பெற்ற உலகச் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில், தனது வாழ்நாளின் சிறந்த செயல்திறனை வெளிப்​படுத்தி 299 கிலோ (ஸ்​னாட்ச் 130 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 169 கிலோ) தூக்கி ஒட்​டுமொத்​த​மாக 9-வது இடத்தையும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரி​வில் உலக அளவில் 5-வது இடத்தை​யும் பிடித்து அசத்​தி​னார்.

கடந்த பிப்​ர​வரி மாதம் மோடி நகரில் நடை​பெற்ற 20-வது சீனியர் தேசிய பளுதூக்கும் சாம்பியன்​ஷிப்​பில் அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​னார் ராஜா.

இந்தத் தொடரில் 65 கிலோ பிரி​வில் பங்​கேற்ற ராஜா, ஒட்​டுமொத்​த​மாக 302 கிலோ (ஸ்னாட்ச் 130 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 172 கிலோ) எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்​துத் தங்​கம் வென்​றிருந்​தார்.

கடந்த 8 வருடங்​களுக்கு முன்​னர் பதக்​கம் வெல்ல முடி​யாமல் திரும்​பிய ராஜா, அதே மேடையில் தற்​போது வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தி உள்​ளார்.

செப்​டம்​பரில் நடை​பெறும்​ ஆசிய விளையாட்டுப் போட்​டியிலும்​ அதைத்​ தொடர்ந்​து 2028-ல்​ நடைபெறும்​ லாஸ் ​ஏஞ்சல்​ஸ்​ ஒலிம்பிக்கிலும்​ பதக்​க மேடையை அலங்​கரித்​துவிட வேண்டும்​ என்​பது​தான் ராஜா​வின் அடுத்த இலக்கு​.

அவரது முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்!

நன்றி: தி இந்து திசை

You might also like