உலகக் கோப்பை கால்பந்து திருவிழா 2026: ஒரு பார்வை!

சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தும் 23-வது உலகக் கோப்பை போட்டிகள் நாளை விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் திருவிழா ஜூன் 11-ம் தேதியில் இருந்து ஜூலை 19-ம் தேதி வரை 39 நாட்கள் நடைபெறுகிறது.

இதனை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

ஓர் உலகக் கோப்பையை இப்படி மூன்று நாடுகள் இணைந்து நடத்துவது வரலாற்றில் இதுவே முதல்முறை.

அதுமட்டுமில்லாமல் இந்தமுறை முதல்முறையாக 48 நாடுகள் கலந்து கொள்கின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள்தான் பங்கெடுத்தன.

இதில் தலா நான்கு அணிகள் என எட்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ரவுண்ட் 16 சுற்றுக்குத் தகுதிபெற்றன. இதிலிருந்து எட்டு அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன.

ஆனால், இந்தமுறை தலா நான்கு அணிகள் என 12 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன் (24 அணிகள்), புள்ளிகள் அடிப்படையில் கூடுதலாக எட்டு அணிகள் நுழையும்.

அதாவது ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு மூன்றாவது இடம் பிடித்துள்ள எட்டு அணிகளுக்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

அப்படியாக ரவுண்ட் 32 என நாக்அவுட் போட்டிகள் நடக்கும்.

பின்னர் இதிலிருந்து 16 அணிகள் நாக்-அவுட்டான ரவுண்ட் 16 சுற்றுக்குத் தகுதிபெறும்.

தொடர்ந்து இந்த நாக்-அவுட்டில் வெற்றிபெறும் எட்டு அணிகள் காலிறுதிக்குள் நுழையும்.

பிறகு அரையிறுதிகளும், மூன்றாவது இடத்திற்கான போட்டியும், இறுதிப் போட்டியும் நடைபெறும்.

இதில் மொத்தமாக 104 போட்டிகள் மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடக்கவுள்ளன.

இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஈஸ்ட் ருதர்ஃபோர்ட்டில் அமைந்துள்ள மிட்லைஃப் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

• பங்கேற்கும் நாடுகள்…

இதில் 12 குரூப்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ‘ஏ’ – மெக்சிகோ, தென்ஆப்ரிக்கா, தென்கொரியா, செக் குடியரசு
குரூப் ‘பி’ – கனடா, போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா, கத்தார், சுவிட்சர்லாந்து
குரூப் ‘சி’ – பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து
குரூப் ‘டி’ – அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, துருக்கி

குரூப் ‘இ’ – ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார்
குரூப் ‘எஃப்’ – நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா
குரூப் ‘ஜி’ – பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து
குரூப் ‘ஹெச்’ – ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே

குரூப் ‘ஐ’ – பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே,
குரூப் ‘ஜே’ – அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்
குரூப் ‘கே’ – போர்ச்சுக்கல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா
குரூப் ‘எல்’ – இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

என மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றுள்ளன.

இதில் கேப் வெர்டே, குேராசாவா, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் முதல்முறையாக இந்த உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.

இதிலும் குரோசாவா வெறும் ஒன்றரை லட்சம் மக்கள் தொகையே கொண்ட கரீபியன் கடல் பகுதியில் உள்ள மிகச் சிறிய தீவு நாடு.

இதேபோல் கேப் வெர்டேவும் 5 லட்சம் மக்கள் தொகை உள்ள சிறிய தீவு நாடுதான்.

இவையெல்லாம் இந்த உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற சூப்பர் ஸ்டார் அணியான இத்தாலி மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை என்பது வேதனைக்குரியது.

கடந்த 2018, 2022ம் ஆண்டுகள் நடந்த உலகக் கோப்பையில் அந்த அணி தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த முறையும் அதேபோல் நடந்துள்ளது அனைத்து கால்பந்து ரசிகர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

• இதுவரை சாம்பியன் பட்டம் வென்றவர்கள்…

கடந்த 1930-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இதுவரை 5 முறை கோப்பையை வென்று முதலிடத்தில் உள்ள நாடு பிரேசில். இந்த அணி 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இதற்கடுத்து இத்தாலி அணி 1934, 1938, 1982, 2006 ஆகிய நான்கு முறையும், ஜெர்மனி அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய நான்கு முறையும் வென்றுள்ளன.

அதன்பிறகு அர்ஜென்டினா அணி 1978, 1986, 2022 ஆகிய மூன்று முறையும், உருகுவே 1930, 1950 என இருமுறையும், பிரான்ஸ் அணி 1998, 2018 என இருமுறையும், இங்கிலாந்து 1966ம் ஆண்டும், ஸ்பெயின் 2010ம் ஆண்டும் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

• இந்த உலகக் கோப்பையின் பரிசுத் தொகை…

கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பையில் 440 மில்லியன் டாலர் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு மட்டும் 42 மில்லியன் டாலரும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு 30 மில்லியன் டாலரும் பரிசுத்தொகைத் தரப்பட்டது.

ஆனால், இந்தமுறை ஒட்டுமொத்த பரிசுத் தொகை 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் 48 நாடுகள் பங்கேற்கின்றன என்பதுதான்.

அப்படியாக மொத்தம் 655 மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 240 கோடி ரூபாயாகும்.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு 50 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 475 கோடி ரூபாய்) இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 33 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 313 கோடி ரூபாய்) கிடைக்கும்.

இதுதவிர, கலந்துகொண்ட அனைத்து அணிகளுக்கும் பரிசுத்தொகை கிடைக்கும்.

இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் வட அமெரிக்க கண்டத்தில் நடப்பதால் இந்திய நேரப்படி அனைத்து போட்டிகளும் நள்ளிரவும், அதிகாலையிலும் நடக்கின்றன.

குறிப்பாக இரவு 12.30 மணிக்கும், அதிகாலை 3.30-க்கும், 6.30 மணிக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.

தற்போது இதன் ஒளிபரப்பு உரிமையை ஜீ எண்டர்டெயின்ட் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அப்படியே ஜீ-5 ஆப்பிலும் அதன் Unite 8 ஸ்போர்ட்ஸ் சேனலிலும் போட்டிகளைக் கண்டுகளிக்கலாம் என்கின்றன தகவல்கள்.

– கவின்

You might also like