அதிகப்பட்டு வரும் இளம் குற்றவாளிகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தற்போது கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இதில் அதிர்ச்சியான ஒரு விஷயம், இதில் சிறுவர்களும் ஓரளவு ஈடுபட்டிருப்பதுதான்.

அண்மையில், தமிழகத்தில் நடந்த பல்வேறு வழிப்பறி சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள், சக மாணவர்கள் மீதே நடத்தும் வன்முறை சம்பவங்கள் என்று பலவற்றிலும் 18 வயதிற்குக் குறைவான சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வாசிக்கின்றன.

படிக்கும் பள்ளி வகுப்பறையிலேயே ஒருதலைபட்சமாக, தான் காதலித்த மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால், அவரது கழுத்தை அறுத்திருக்கிறார் அந்த மாணவர்.

இதேமாதிரி நிகழ்வை என்னுடைய ஊடக வாழ்விலும் சந்தித்திருக்கிறேன். 

தஞ்சையில் தன்னுடன் படித்த மாணவியை வகுப்பிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்த அந்த மாணவனுக்கு 17 வயதிருக்கலாம். 

ரத்தக் கறை படிந்துகிடந்த அந்த வகுப்பறையைப் பார்த்துவிட்டு அப்போது அங்கிருந்த மாணவர்களையும் சந்தித்துவிட்டு, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த மாணவனை சந்திக்கப் போயிருந்தேன்.

கொஞ்சம்கூட குற்ற உணர்வின் நிழல்கூட படியாத நிலையில், வெகு சகஜமாக இருந்தார் அந்த மாணவர்.

அவருடன் பேச்சுக் கொடுத்தபோது அந்த கொலையை நிகழ்த்துவதற்கான தூண்டுதலாக தனக்கு இருந்தது ஒரு திரைப்படம்தான் என்று கேஷுவலாகச் சொன்னார்.

நான் பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திற்குள் அந்த மாணவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள்.

அந்த மாணவனை அழைத்துச் சென்றபோது, அவன் முகத்தில் சிறு புன்னகை ஒட்டியிருந்ததைப் பார்க்கச் சிரமமாக இருந்தது.

இதைப்போலவே இன்னொரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி என்று அழைக்கப்பட்டு அப்போதைய மொழியில் மைனர் ஜெயில் என்றும் அழைக்கப்பட்ட அந்தக் கூடத்திற்கு போனபோது, அதில் 4 சிறார்களை மட்டும் தனித்து வைத்திருந்தார்கள்.

பார்க்க மிகச் சாதாரண மாணவர்கள் போல தோன்றினாலும், அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவர்களைப் பற்றிச் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியூட்டின.

கடுமையான வன்முறையின் வலையில் சிக்கியிருந்தார்கள் அந்த இளம் சிறார்கள்.

ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டு மாலையிலிருந்து இரவு வரை தனியாக இரு சக்கர வாகனத்தில் தனித்து வருகிறவர்களை கண்காணித்து தன்னுடைய சில செயல்பாட்டின் மூலம் அவர்களை வீழ்த்தி அவர்களிடம் இருக்கும் பணம், வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் சமயங்களில் அந்த வாகனங்களையும் எடுத்துச் செல்வதுதான் அவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது.

சிலர் இந்தச் சிறுவர்களின் செயல்பாட்டினால் உயிரிழக்கவும் செய்திருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சியூட்டும் விசயம்.

சாலையில் தொடர்ந்து ஒரே இடத்தில் ஏன் இப்படிப்பட்ட விபத்துகளும் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன என்பதை காவல்துறை தொடர்ந்து கண்காணித்ததில் மாட்டியிருக்கிறார்கள் அந்த சிறுவர்கள்.

அந்த சிறுவயதிலேயே கையில் கிடைக்கும் காசை வைத்து அளவுக்குமீறி செலவழித்திருக்கிறார்கள். அந்த வயதிலேயே சில போதைப் பழக்கங்களுக்கும் அவர்கள் ஆட்பட்டிருந்தார்கள். 

“அதனால், அவர்களை கொஞ்சம் தனித்து வைத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள் அங்கிருந்த காவல் அதிகாரிகள்.

நான் அங்கிருந்து கிளம்பும்போது, அந்த சிறுவர்களின் முகத்தில் கொஞ்சம்கூட பெரும் குற்றங்களின் சாயலோ அதுபற்றிய குற்ற உணர்வோ எதுவுமில்லாமல் மிக சாதாரணமாக தங்களுக்குள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

எப்படியெல்லாம் மாறியிருக்கிறது சிறுவர்கள் சிலரின் வாழ்வும்.

– மணா

You might also like