இன்று (ஜூன் 23) ‘சர்வதேச ஒலிம்பிக் தினம்’. 1894 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.
உலகில் நாகரிகம் வளர்வதற்கு முன்பே, கிமு 776-ல் சில நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டில் நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பின்னர் காலம் செல்லச் செல்ல, இப்போட்டியின் மதிப்பு குறைந்து பின்னர் ஒலிம்பிக் போட்டிகளே நின்று போனது.
இந்த சூழலில் சர்வதேச அளவில் விளையாட்டுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சிகளில் கிரேக்க நாட்டினர் 18-ம் நூற்றாண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன் தொடக்கமாக உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பரோன் பியர் டி கூபெர்டின் என்பவர், நவீன ஒலிம்பிக் போட்டிக்கான அடிப்படை விதிகளை வகுத்தார்.
இதைத்தொடர்ந்து 1894-ம் ஆண்டில் ஒலிம்பிக் கமிட்டி தோற்றுவிக்கப்பட்டது.
மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலும், 2 ஆண்டுகள் கழித்து 1896-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதிதான் முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதன்ஸ் நகரில் தொடங்கியது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளிங், கத்திச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், தடகளம், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய 9 பிரிவுகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன.
13 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
முதல் நாளன்று நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை தாண்டும் போட்டி) அமெரிக்க தடகள வீரரான ஜேம்ஸ் கோனோளி தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து நடந்த உயரம் தாண்டும் போட்டியிலும் பங்கேற்ற ஜேம்ஸ் கோனோளி, இதில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஒலிம்பிக்கும் பெண்களும் :
1896-ல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கினாலும், அதில் பெண்கள் பரவலாக பங்கேற்க பல காலம் பிடித்தது.

பெண்களின் போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது என்று ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் கருதியதே இதற்கு காரணம்.
1900-ல் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்க முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போதும்கூட டென்னிஸ், கோல்ஃப் போன்ற சில போட்டிகளில் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து 1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் தடகளப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்தப் போட்டியில் போலந்தைச் சேர்ந்த ஹலினா கொனோபாகா என்ற வீராங்கனை வட்டு எறியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த ஒலிம்பிக்கில் அவர் குண்டு எறியும் போட்டியிலும் பங்கேற்றார்.
இதே ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீராங்கனைகள் பலர் பந்தய தூரத்தை எட்ட முடியாமல் துவண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் பதக்கம் :

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப காலகட்டங்களில் ஹாக்கி விளையாட்டு மட்டுமே இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்தச் சூழலில், தனிநபர் பிரிவிலும் இந்தியாவால் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர் கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ்.
1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தத்தில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கம்.
– ராதா