வித்தியாசமான ‘கதை’யுடன் களமிறங்கிய ‘ஆர்யன்’!

விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ் நடிப்பில், F.I.R படத்தை இயக்கிய மனு ஆனந்த் உடன் சேர்ந்து, திரைக்கதை எழுதி, பிரவீன் கே என்பவர் கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆர்யன்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் தயாரித்து இருக்கிறார்கள்.

மோசமான நடத்தைகள் கொண்டிருந்தாலும் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகன் ஒருவனை (யாரைச் சொல்றாங்க புரியுதா?) கிடுக்கிப்பிடி இன்டர்வியூ எடுத்துக் கிழிக்க, ஒரு சேனலில் செய்தியாளர் (கருணாகரன்) முயல, இன்னொரு சேனலின் கேள்வியாளர் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) நடிகனிடம் அனுமதி வாங்கி விடுகிறார்.

அந்த நடிகனை கேள்வியாளர் மட்டுமின்றி அரங்கில் இருக்கும் பார்வையாளர்களும் கேள்வி கேட்கும் நேரடி ஒளிபரப்புப் பேட்டி அது.

எடுத்தவுடன் நடிகனைத் திக்கித் திணற வைக்கும் கேள்விகளோடு பேட்டி போக, திடீரென பார்வையாளர் பகுதியில் இருந்து அழகர் என்பவர் (செல்வராகவன்) எழுந்து, நடிகனைத் திட்டி, துப்பாக்கியால் அவன் காலில் சுட்டு பயமுறுத்தி, எல்லோரையும் மிரட்டுகிறார்.

தொலைக்காட்சி நிலையத்துக்குள் இருப்பவர்கள் லைவில் பார்க்கும் மக்கள் எல்லோரும் அதிர, போலீஸ் விரைந்து போக,

உள்ளே அவர், ‘அடுத்தடுத்து ஐந்து நாட்களுக்கு தினம் ஒருவராக என்னால் கொலை செய்யப்படுவார்கள், முதலில் நானே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்லி அப்படியே செய்து கொள்கிறார்.

இதை விசாரிக்க நம்பி என்ற போலீஸ் அதிகாரி (விஷ்ணு விஷால்) நியமிக்கப்படுகிறார்.

போலீஸ் அதிகாரி எப்போதும் வேலை வேலை என்று இருப்பதால், இன்னும் ஒரு குழந்தைக்குக் கூடத் தாயாக முடியாத மனைவி (மானசா சவுத்ரி) விவாகரத்து வழக்கு தொடர்ந்து, அது கோர்ட்டில் இருக்கிறது.

போலீஸ் அதிகாரி நம்பி விசாரணையைத் துவக்க, அடுத்த நாள் அசோக் என்ற முன்னாள் ராணுவ வீரர், டெலிபோன் பூத்தில் பாம் வெடித்துக் கொல்லப்படுகிறார்.

அடுத்து ரசியா என்ற பரத நாட்டிய மங்கை, லிப்ஸ்டிக்கில் சயனைடு கலந்து கொல்லப்படுகிறார்.

அடுத்த நாள் யுவராஜ் என்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் கடலுக்கடியில் சுவாசிக்கும் ஆக்சிஜன் மூலம் கொல்லப்படுகிறார்.

இந்த ஒவ்வொரு கொலையையும் அழகர் பொது இடங்களில் உள்ள விளம்பர போர்டுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே தானாக நுழையும் வீடியோ, வாட்ஸ் அப்பில் வரும் வீடியோ,

இப்படி அவர் தோன்றி பேசும்போது அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் கொலை செயயப்பட இருப்பவரின் பெயரையும் சொல்கிறார்.

நால்வரின் பெயரில் முதல் எழுத்தையும் சேர்த்தால் A A R Y என்று வருகிறது. அடுத்து இரண்டு எழுத்துக்களை சேர்த்தால் A A R Y A N என்று (படத்தின் பெயர்) வரும்.

அந்த A என்று துவங்கும் பெயர் கொண்ட நபர் போலீஸ் அதிகாரியின் விவாகரத்துக் கேட்கும் மனைவி அனிதாவா வேறு யாருமா?

கடைசியாக மீதமிருக்கும் N என்று துவங்கும் பெயர் கொண்ட நபர், போலீஸ் அதிகாரி நம்பியா அல்லது வேறு யாருமா? இந்த இரண்டு போரையும் போலீஸ் துறையால் காப்பாற்ற முடிந்தததா? இல்லை எனில், ஏன்? ஆம் எனில் நடந்தது என்ன? என்பதே ஆர்யன்.

நிதானமான ஸ்டைலிஷ் மேக்கிங். விஷ்ணு விஷால், செல்வராகவன் இருவரும் பாராட்டும்படி நடிக்கிறார்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, கருணாகரன் இவர்கள் ஓகே.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்கு ஏற்றபடி இருக்கிறது.

சண்டைக் காட்சிகள் ஓகே ரகம். இடைவேளைப் பகுதியில் ஜிப்ரானின் இசை பின்னிப் பெடல் எடுக்கிறது.

உயிர்வாழ ஆக்சிஜன் முக்கியம்தான் எனினும், அதில் நைட்ரஜனும் இருக்க வேண்டும்.

நூறு சதவீத ஆக்சிஜனை சுவாசித்தால் உயிர் போய் விடும் என்பது உட்பட சில தகவல்கள் பாராட்டுக்குரியன.

செத்துப் போய்விட்ட ஒருவன், வரிசையாக மக்கள் முன் தோன்றி ‘ஒரு மணி நேரத்தில் அடுத்த கொலை செய்யப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் செய்வது என்பது வித்தியாசமான கதைதான்.

அதற்கு ஏற்ப வழக்கமாக இந்த தேதியில் இவர் இதைச் செய்வார் என்று கண்டு பிடித்து அவர்கள் நடவடிக்கையைப் பயன்படுத்தி அந்தந்த நாளில் கொலையாகிச் சாக ஏற்பாடுகள் செய்து விட்டு அழகர் தொலைக்காட்சி லைவிலேயே தற்கொலை செய்துகொள்கிறார் என்பதும் கூட இன்ட்ரஸ்டிங்தான்.

ஆனால், அதை லாஜிக்காக சொல்வதில்தான் ஏகக் குளறுபடி.

எப்படி பப்ளிக் டிஸ்ப்ளேயில் ஒருவன் முன்னரே புரோக்ராம் செய்து தோன்ற முடியும்?

எப்படி டிவி சீரியல் ஓடும்போது இடையில் தனது வீடியோவை இணைத்து மக்களைப் பார்க்க வைக்க முடியும்?

என்பதற்கு எல்லாம் மக்களுக்குப் புரியும் வகையில் காரணம் சொல்லாமல் ஏதேதோ மக்களுக்குப் புரியாத டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நழுவுகிறார்கள்.

எனவே மூன்று மரணம் நடந்து முடிந்த உடனேயே, ‘ஐயோ இன்னும் இன்னும் மூன்று பேர் சாவதையும் படத்தில் நடக்கும் காமா சோமா விசாரணை மூலம் காட்டுவார்களே’ என்ற பயம் வருகிறது.

ஒரு காட்சி நடக்கும்போது இன்டர்கட்டில் வேறு காட்சியைக் காட்ட வேண்டும் என்றால் அந்த காட்சியில் ஏதேனும் முக்கியமான சுவாரஸ்யமான விசயத்தில் அதைக் கட் செய்து, அடுத்த விசயத்துக்குப் போக வேண்டும்.

அதற்கு மாறாக டிவி நிலையத்துக்குள் அழகர் பிளாக்மெயில் செய்து பேசிக் கொண்டு இருப்பதையும்,

போலீஸ் டி.வி. சேனலுக்கு வந்து அழகரைப் பிடிக்க திட்டமிடுவதையும் சும்மா காமா சோமாவான இடங்களில் கட் செய்து பொறுமை இழக்க வைக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரி – மனைவி விவாகரத்து முயற்சியும் அப்புறம் நட்பும் இந்தப் படத்துக்கு தேவையே இல்லாத ஆணி.

இதுபோன்ற தேவையில்லாத கதைப் போக்குகள், முக்கியக் கதைப் போக்குகளும் அலுப்பை ஏற்படுத்துகிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் எதிர்பாராத திருப்பம் என்று ஒன்று சொல்கிறார்கள். அது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

ஒருவர் நல்லவர் என்பதால் அவரைக் கொலை செய்து, அதன் மூலம் அவரைப் போன்ற நல்லவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற்றுத் தர வேண்டும் என்பதெல்லாம், யோசிக்கவே கூடாத கற்பனை. வில்லன்கள் கூட அதைச் செய்யக் கூடாது.

இந்தியன் கமல், ரமணா விஜயகாந்த் இவர்களிடம் எல்லாம் இந்தப் படத்து வில்லன் சிக்கினால் அவன் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு புதிய படக் குழு ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக இப்படி ஒரு படம் எடுத்து இருந்தால் கூடப் பரவாயில்லை.

இத்தனை படங்களில் நடித்து பல படங்களைத் தயாரித்த விஷ்ணு விஷால் எப்படி இப்படி ஒரு கிளைமாக்சுக்கு ஒத்துக் கொண்டார்?

இந்தப் படத்தை இந்தியில் தயாரித்து நடிக்க விரும்பிய அமீர்கான், பின்னர் அந்த முயற்சியைக் கைவிட்டதற்கான காரணம் போரடிக்கும் திரைக்கதையிலும், போட்டு அடிக்கும் கிளைமாக்ஸிலும் இருக்கிறது.

ஆர்யன்… நீ யாருய்யா…?

– சு. செந்தில் குமரன்

#ஆர்யன்விமர்சனம் #விஷ்ணுவிஷால் #செல்வராகவன் #ஷ்ரத்தாஸ்ரீநாத் #மானசாசவுத்ரி #AaryanMovieReview #Aaryan #VishnuVishal #ShraddhaSrinath #Vaani

You might also like