என் சமூகம், என் பொறுப்பு!

முனைவர் க. பழனித்துரை

நாம் வாழும் காலம் சந்தைக் காலம். எதைச் செய்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று சிந்திக்கும் காலம்.

எதைச் செய்தாவது எனக்கு பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும், பணம் வேண்டும், சுகபோகமான வாழ்க்கை வேண்டும். அதுதான் பெரும்பான்மை மக்களின் சிந்தனைப்போக்கு.

இதை நோக்கித்தான் பெரும்பான்மையான மக்கள் ஒரு இனம் புரியாத சூழலில் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

சமூகத்தில் திக்கற்று, வழி தெரியாமல் நிர்கதியான மக்களுக்கு வழிகாட்ட யார் இருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தால் இந்த மண்ணுக்கான தர்மத்தைக் காக்க சிலர் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவர்கள்தான் விவேகாநந்தர் தேடிய மனிதர்கள், அரவிந்தரும் அன்னையும் தேடிய மனிதர்கள், காந்தி தேடிய மனிதர்கள், வினோபா தேடிய மனிதர்கள்.

மகாத்மா காந்தி கூறிய தாரக மந்திரம் “நீ பார்க்கும் மனிதர்களில் கடைநிலையில் உள்ள மனிதரின் வாழ்வில் எதாவது உன்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று எண்ணி செயல்பட்டு மாற்றத்தை அவர்கள் வாழ்வில் கொண்டு வந்தால் உன் வாழ்க்கை பயனுள்ளது”.

இந்த கருத்தை தன் இதயத்தில் ஏற்றி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர செயல்களைத் தவமாய் செய்து வரும் இணையர் டாக்டர் துரைசாமியும் டாக்டர் சாந்தி துரைசாமியும் அவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையின் 25வது ஆண்டு விழாவினை (சக்திதேவி அறக்கட்டளை)

ஜுலை 27 அன்று பெருந்துறையில் அவர்களுக்கச் சொந்தமான ஒரு பெரும் அரங்கில் ஏற்பாடு செய்து 25 ஆளுமைகளுக்கு விருது வழங்கி, பல நிறுவனங்களுக்கு நிதி வழங்கி சிறப்புச் செய்தார்கள். அதற்கு அவர்கள் செலவிட்ட தொகை பல கோடி.

இவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை செலவழித்து அனைத்துச் சமூகச் செயல்பாடுகளையும் எனது பொறுப்பு என்று கருதி செய்து வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு.

ஒரு பெரிய தொழிலதிபர் ஒரு மகானைச் சந்தித்தார். மகான் கேட்டார் என்ன செய்கின்றீர்கள்? நான் பெரிய தொழில் நிறுவனம் நடத்துகிறேன் என்றார்.

எவ்வளவு வருமானம்? பலகோடி என்று பதில் கூறினார்.

அடுத்த ஆண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்றார் மகான்.

தொழிலில் வரும் லாபத்தை 25% அதிகரிக்க தொழிலை அபிவிருத்தி செய்யப்போகிறேன் என்றார்.

அதற்கு அடுத்த ஆண்டு என்றார்.

50% லாபத்தை அடைய தொழிலை விருத்தி செய்யப் போகிறேன் என்றார்.

பரவாயில்லை, நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள், என்ன நோக்கம் என்றார் மகான்.

உங்கள் ஆசியைப் பெற்றுச் செல்ல வந்தேன் என்றார் தொழிலதிபர்.

அப்படியா, உங்கள் ஊரில் பசியோடு இரவு படுக்கச் செல்வோர் உண்டா என்று கேட்டார் மகான்.

எனக்குத் தெரியவில்லை என்றார் தொழிலதிபர்.

மகான் கூறினார், “எங்கள் ஆசிரமத்திலிருந்து உணவு வண்டி கிராமங்களுக்குச் செல்லும். அந்த வண்டியுடன் பின்னால் செல்லுங்கள், அந்த வண்டியிலிருந்து பல ஊர்களில் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி உணவு ஏழைகளுக்குத் தருவார்கள்.

முடிந்தால் அவர்களைப் பார்த்து விபரம் அறிந்துகொண்டு மீண்டும் என்னை வந்து பாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

அந்த ஆஸ்ரமத்திலிருந்து உணவு வண்டி மூன்று புறப்பட்டது, மூன்று திசைகளில் சென்றது. இவர் ஒரு வண்டியின் பின் சென்றார்.

பல ஊர்களில், எப்படி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் பயணம் செய்ய பயணிகள் நிற்பார்களோ, அப்படி குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்திருக்கின்றார்கள் பெண்களும் ஆண்களும் பாத்திரத்துடன்.

இந்த வண்டி சென்றவுடன் அனைவரும் வண்டியை நோக்கி ஓடிவந்து வரிசையில் நிற்கிறார்கள்.

அனைவருக்கும் உணவு தேவைக்கு வழங்கப்படுகிறது. உணவு கொடுத்த இடங்களில் சற்று நேரம் நின்று உணவு பெற்றவர்களிடம் ஒரு உரையாடலை நடத்தினார்.

இந்த உணவை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை முதியவர்கள். அவர்களின் உடையும், அவர்கள் வைத்திருந்த பாத்திரமும் அதைத் தெரிவிக்கின்றது.

அவர்களிடம் உங்கள் சட்டமன்ற உறுப்பினரைத் தெரியுமா? அவர் பெயர் என்ன, உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் யார்? அவர் பெயர் என்ன? என்று கேட்டார். தெரியாது என அனைவரும் பதிலளித்தனர்.

உங்களுக்கு உணவு வந்ததே, அதைத் தந்தவர் யார் என்று கேட்டார். அனைவரும் அவர் பெயரை முழக்கமாகக் கூறினர்.

அப்படி இரண்டு மூன்று குக்கிராமங்களில் இந்த உணவை வாங்கிச் சாப்பிடுவோரை பேட்டி கண்டு விட்டுச் செல்கையில், இந்த உணவு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்றார்.

என்ன செய்வது பிச்சை எடுக்க வேண்டியதுதான் என ஒரு வயதான பெண்மணி கூறியதுடன் தான் சென்ற மகிழுந்தை ஆசிரமத்தை நோக்கி திரும்பி விட்டார்.

மீண்டும் மகானைச் சந்திக்கச் செல்கிறார். சென்றவுடன் மகான் கேட்டார், உங்கள் அனுபவம் என்ன என்று? உடனே கூறினார், நான் வாழும் உலகம் வேறாக இருக்கிறது.

வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டேனே இந்த பணத்தின் பின் சென்று என்று எண்ண வைத்துவிட்டது.

நான் ஊர் சென்று எங்கள் பகுதியில் சென்று உணவின்றி இருப்போரைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உணவு வழங்குவதை முதல் பணியாகச் செய்வேன் என்று உறுதியளித்தார்.

அந்த மகான் கூறினார், நீங்கள் அவர்களின் பசியைப் போக்குங்கள் அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்று வாழ்த்தியனுப்பினார்.

அவர் ஊர் வந்தவுடன் அந்தப் பணியைத் தொழிலைவிட அதிகமாக நேசித்து செய்ய ஆரம்பித்து செய்யும்போதுதான் பசியோடு இருப்போர் எவ்வளவு பேர் என்பதைக் கண்டுபிடித்தார்.

இந்த அனுபவம் இங்கு எதற்கு என்றால் ஒரு மகான் கூறியதால் ஒருவர் மனம் மாறி பணம் சம்பாதிப்பது எதற்காக என்பதை உணர்ந்து சமூகத்திற்கான மனிதராக மாறினார். 

ஆனால், முனைவர் துரைசாமியும், முனைவர் சாந்தி துரைசாமியும் வழிகாட்டி இணையர்கள், பிறவிப் பணக்காரர்கள் அல்ல.

உழைப்பால் உயர்ந்து, வள்ளுவன் கூறியதுபோல் செய்க பொருளை என்று செய்து பொருள்பட வாழ்வதில் உச்சம் பெற்றுவிட்டனர்.

ஏழையாக இருந்தவர்கள் பணம் வரும்போது புதுப் பணக்காரத் தன்மை வந்துவிடும்.

ஆனால், இந்த இணையர்களின் தனித்துவமிக்கச் செயல் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களையும் உயர் மனிதராக்கும் செயல்தான் இவர்களின் அன்பு, அறம், இறக்கம், கொடை, கருணை அனைத்திற்கும் புது இலக்கணம் எழுகிறது. 

செல்வந்தர்கள் செல்வந்தர்களுடன் இணைவார்கள். இந்த இணையர்களும் அப்படித்தான் இணைந்துள்ளார்கள். பொறுப்புமிக்க செல்வந்தர்களுடன் இணைந்துள்ளார்கள்.

ஆம், ராமராஜ் காட்டன், அக்னி ஸ்டீல்ஸ் போன்ற சாதாரண குடும்பத்தில் பிறந்து தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டி அதன் மூலம் பெற்ற வளத்தை சமூகத்திற்கு தருவதில் மகிழ்ச்சியடையும் கூட்டத்தில் இந்த இணையர்கள் உச்சத்தில் விளங்குவதை என்னால் பார்க்க முடிந்தது அந்த விழாவில் பங்கேற்றபோது.

அந்த நிகழ்வு ஒரு பொது நிகழ்வு. அது ஒரு குடும்ப விழாபோல் ஒவ்வொருவரையும் மதித்து வரவேற்று மரியாதையுடன் பக்குவமாக நடத்தியது ஒரு வித்தியாசமானது.

அந்த விழாவில் தந்த மூன்று நூல்களைப் படித்தால் இந்த இணையர்கள் கல்விக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, பொதுச் செயல்பாட்டாளர்களுக்கு இலக்கியவாதிகளுக்கு, விவசாயிகளுக்கு என பல்வேறு நிலைகளில் அவர்கள் செய்துள்ள பணிகளை நம்மால் உணர்ந்து வியக்க முடியும்.

இதில் எது மகத்தானது என்றால், தான் உழைத்து ஈட்டியதில் மற்றவர் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர அள்ளிக் கொடுத்தது.

பெரும் செல்வந்தர்கள் கிள்ளிக் கொடுத்து பெருமை சேர்க்கும் காலத்தில் அள்ளிக் கொடுத்து வாழ்க்கையை பொருளுள்ளதாக மாற்றிக்கொண்டதுதான் இந்த தம்பதிகளின் சிறப்பு.

விழாவில் பேசிய திரைக்கலைஞர் சிவக்குமார், இவர்களின் ஆரம்பம் தொட்டு இன்றுவரை எப்படி வளர்ந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டினார்.

6வது படித்த சாந்தி துரைசாமி, கல்வியில் முனைவர் பட்டம்வரை உயர்ந்து, மனிதத்துவத்தில் மிளிர்ந்து பெண் சமத்துவத்திற்கும் பொருள்பட வாழ்வது எப்படி என்பதற்கும் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருப்பது வசதி படைத்த சீமாட்டிகளுக்கும் ஒரு பெரும் எடுத்துக்காட்டு. 

அந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதியரசர் மகாதேவன் தனித்துவமிக்க உரையை ஆற்றினார். அது அவருக்கே உரிய பாணியில்தான் இருந்தது.

தமிழர் வாழ்வு எவ்வளவு அறம் சார்ந்தது, தமிழர் உலகுக்கு வழிகாட்டும் வாழ்வியல் அறத்தை வைத்திருந்தார்கள் என்பதை விளக்கி சிறப்புரையாற்றி அந்த விழவுக்கு சிறப்புச் செய்தார்.

அங்கு வந்த சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இந்த இணையர்கள் முனைவர் சாந்தி துரைசாமி, முனைவர் துரைசாமி சமூகப் பணியில் நீண்டகாலம் தொடர்பில் இருந்தவர்கள் என்பதை அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

சமூக மேம்பாட்டில் தொழிலதிபர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. அதை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என சட்டம் போட வேண்டியிருக்கிறது.

அதேபோல் தொழில் முனைவோருக்கு சூழல் காக்கும் பொறுப்பு இருக்கிறது என சட்டம் போட வேண்டியிருக்கிறது.

ஆனால், இந்தத் தம்பதியினர் இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே இந்த சமூகத்தில் நான் வாழ்கிறேன், வளர்கிறேன். எனவே இந்த சமூகத்தை உயர்த்துவது என் பொறுப்பு என்று பொறுப்பேற்று செயல்பட்டதுதான் ஒரு வியப்பூட்டும் செயல்.

இந்த இணையர்கள் போல் இந்தியாவில் உள்ளவர்களெல்லாம் இது என் சமூகம் என் நாடு, இதில் சாதாரண மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது என்று செயல்பட்டால்

இந்த நாட்டில் சமூகப் பிரச்சினைகள் எவ்வளவு குறையும் என்பதைத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

விவேகாநந்தர் கூறிய மனித வாழ்வுக்கு முழு அர்த்தம் தரும் மனிதர்களாக இந்தத் தம்பதியர்கள் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அப்துல் கலாம் கூறுவார், “உன் பிறப்பு ஒரு சம்பவம்தான், ஆனால் உன் இறப்பு ஒரு வரலாறாக இருக்கட்டும்” என்று.

இந்த இணையர்கள் செய்யும் பணி சேவையாகவோ தொண்டாகவோ, கொடையாகவோ, உதவியாகவோ நான் பார்க்கவில்லை.

அது ஒரு பொறுப்பேற்றலாக பார்க்க முடிந்தது. அந்த நிகழ்வு, நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள், அனைவரையும் பார்க்கையில் உள்ளுணர்வு எனக்குக் கூறியது ஒன்றுதான்.

கொங்குப் பகுதியில் எதோ ஒருவித பொறுப்புக் கலாச்சாரம் இருக்கிறது. அந்தக் கலாச்சாரத்தில் தான் அனைத்தும் நடந்தேறுகிறது என்பதை என்னால் உணர முடிந்தது. 

அந்த நிகழ்வில் இருந்தபோது நான் என்றும் வணங்கும் அன்னையிடம் பிரார்த்தனை ஒன்றை வைத்த வண்ணம் இருந்தேன்.

சுயநலம் பேணும் மனிதர்களுக்கு மத்தியில் கடினமாக உழைத்து சம்பாதித்து சமூகத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் இந்த தம்பதியர்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து இந்த பணி தொடர அருள வேண்டும் என்பதாகவே அமர்ந்திருந்தேன். 

சற்று தாமதமாக மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது முனைவர் சாந்தி துரைசாமி, அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள், உணவு தாமதமாகிவிட்டது என்று கூறி அன்புடன் அனைவரையும் வழியனுப்பி வைத்தது அனைவர் மனதிலும் இடம்பிடித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

மனிதத்துவத்துடன் உயர்ந்த மனிதராக மனிதர்களுக்காக வாழ்வதில் எவ்வளவு சுகம் என்பதை முனைவர் சாந்தி துரைசாமியிடமும் முனைவர் துரைசாமியிடமும் கற்றுக்கொள்ளலாம். 

You might also like