யாரும் சற்றும் எதிர்பார்க்காத ஒரு செயல் தான்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்டதைப் பற்றி நாட்டிலுள்ள வெவ்வேறு ஊடகங்களும் தங்களுடைய பாணியில் அதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கின்றன.
பல்வேறு கட்சித் தலைவர்களும் மாநில முதல்வர்களும், சற்றே தாமதமாக பிரதமரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பொறுப்புமிக்க சிலர், இன்னமும் எந்தக் கண்டனமும் தெரிவிக்காத மௌனத்தோடு இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து வந்த வழக்கு ஒன்றிற்காக தலைமை நீதிபதி மீதே எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நடந்துகொண்டவர் ஒரு வழக்கறிஞர்.
அதோடு, சனாதன ஆதரவாளர். அந்த ஆதரவு நிலைதான், அவரை காலணியை வீசுவதற்கான தூண்டுதலாக அமைந்திருக்கிறது.
அதற்காக தான் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொன்ன அதே வழக்கறிஞர், “மீண்டும் அடிப்பேன்” என்றும் அதே வேகம் குறையாமல் பேசியிருப்பதை பல்வேறு ஊடகங்கள் பதிவு பண்ணியிருக்கின்றன.
யார் மீது காலணி வீசப்பட்டதோ, அந்த நீதிபதியே பெருந்தன்மையாக மன்னித்தாலும் கூட, சட்டப்படி இத்தகைய காலணி வீச்சு என்பது எவ்வளவு பெரிய அவலம்.
எப்போதோ உருவான சாதிய கட்டுமானத்தின் அழுத்தங்களை இப்போதும் வெவ்வேறு வடிவங்களில் காண முடிகிறது. அத்தகைய வன்மம் தான் உச்சநீதிமன்றத்திலும் பிரதிபலித்திருக்கிறது.
நாம் வெட்கக்கேடாக உணர வேண்டிய ஒன்றை ஊடகங்களில் அமர்ந்து சிலர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கடவுளின் பெயரால் இச்செயலில் ஈடுபட்டதாக அந்த வழக்கறிஞரும் பேட்டியளித்திருக்கிறார்.
இந்திய நாட்டில் எவ்வளவோ லட்சக்கணக்கான குற்ற வழக்குகள் நீதிமன்ற வளாகத்திற்குள் வருகின்றன. விசாரிக்கப்படுகின்றன. தீர்ப்பும் வழங்கப்படுகின்றன.
இவற்றில், எதாவது ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?
தான் செய்த இழி செயலுக்கு கடவுளை துணைக்கு அழைத்ததன் மூலம் அவர் நம்புகிற கடவுளின் தரத்தைத்தான் குறைத்திருக்கிறார் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்.
இதேமாதிரியான அணுகுமுறை கீழமை நீதிமன்றங்கள் வரை வருங்காலத்தில் தொடர்ந்தால், நீதிபதிகளுக்கே என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?
எத்தகைய மனநிலையில் அவர்கள் தீர்ப்பும் வழங்கமுடியும்?
ஜனநாயகம், குடியரசு போன்ற எத்தனையோ அரசியல் சொல்லாடல்களைவிட சனாதனம் என்கின்ற சொல் நீதிமன்றத்திலும் கோலோச்சுவது யாருக்கு பலன் தரும்? என்பதை எண்ணிப் பாருங்கள்.
புராணத்தில் ‘பாதுகை ஆண்ட நாடு’ என்பது கூட இருந்திருக்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் பாதுகைகளையே கையெறி ஆயுதமாக பயன்படுத்துவது, நம் ஜனநாயகத்தின் பெருமையை குலைத்துவிடவே பயன்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இறுதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஒரு திரைப்படத்தின் பெயரைத்தான் இங்கு மும்மொழிய வேண்டியிருக்கிறது.
“நீதிக்கு தலைவணங்கு”.