இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்தியுள்ளன.
கடந்த 13 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ரூ. 8 வரை அதிகரித்துள்ளது. இதனால், பொது மக்களின் செலவுகள் அதிகரித்து, குடும்ப பட்ஜெட்டில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றம், வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹைதராபாத்தில் தான் அதிக பெட்ரோல் விலை பதிவாகியுள்ளது.
அங்கு பெட்ரோல் 115.69 ரூபாய்க்கும் டீசல் 103.82 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னை இதில் 9-வது இடத்தில் உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.108.01 மற்றும் டீசல் விலை ரூ. 99.78 ஆக உள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து விலை உயர்வாக இருக்கிறது. 13 நாட்களிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் தினசரி வாகன பயனாளர்கள், நடுத்தர குடும்பங்கள், சரக்கு போக்குவரத்து துறை மற்றும் சிறு தொழில்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக வேலைக்கு செல்ல தினமும் வாகனத்தை பயன்படுத்தும் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகமாகிறது. அந்த தாக்கமாக காய்கறி, உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.