தமிழக முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.
முதலமைச்சராக விஜய் மேற்கொண்ட முதல் டெல்லி பயணம் அரசியல் நோக்கர்களால் உற்று நோக்கப்பட்டது.
விஜய் தனது பரப்புரையில், பாஜக அரசை ஆயிரம் முறையாவது ‘பாசிசம்’ என விமர்சித்து இருப்பார்.
இந்தச் சூழலில்தான் பல்வேறு அஜெண்டாக்களுடன் முதலமைச்சர்.
விஜய் நேற்று முன்தினம் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
பிரதமர் மோடியை சந்திப்பது, பயணத் திட்டத்தின் முக்கிய அம்சம்.
27-ம் தேதி மதியம் டெல்லி சென்றடைந்த விஜய்க்கு, தமிழக அரசு விருந்தினர் இல்லத்தில் தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
மாலை 4.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை விஜய் சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மாலை 6 ; 30 மணிக்கு விஜய் சந்திப்பதாக இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
விஜய்யை சந்திக்க நேரம் இல்லை என உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
27 – ஆம் தேதி அரசாங்க ரீதியிலான சந்திப்புகளை முடித்து விட்டு இரண்டாம் நாளான நேற்று அரசியல் ரீதியில் சில சந்திப்புகளை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் இடதுசாரி தலைவர்களை விஜய் சந்திப்பார் என தகவல் வெளியானது.
சோனியாவின் இல்லத்தைச் சுற்றி விஜய்யை வரவேற்று பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் நேற்று முதலமைச்சர் யாரையும் டெல்லியில் சந்திக்கவில்லை.
நேற்று காலை 10 மணியளவில் டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தனி விமானத்தில் விஜய் சென்னை திரும்பினார். அதாவது டெல்லியில் அவர் பாதி கிணறு மட்டுமே தாண்டி இருக்கிறார்.
கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்கள் டெல்லி சென்றால் தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பது வழக்கம்.
ஆனால், விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.
முதலமைச்சர் பயணம் குறித்து சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
“பிரதமர் மோடியுடனான விஜய்யின் சந்திப்பு சுமார் 10 நிமிடம் நீடித்தது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகேதாட்டு அணைத் திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விவரித்தார் முதலமைச்சர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தினார்” என்று கூறினர்.
அமித் ஷாவுக்கு அவசர அலுவல் பணிகள் இருந்ததால் விஜய்யை சந்திக்கவில்லை.
ஆனால், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களைச் சந்திக்காதது குறித்து பல்வேறு செய்திகள் உலவுகின்றன.
காவிரி விவகாரம் மற்றும் தமிழகத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எழுந்த குதிரை பேர சர்ச்சைகள், கர்நாடக காங்கிரஸில் வெடித்துள்ள உள்கட்சி பிரச்சினை போன்றவற்றால் இப்போது காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தால் அது தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் என்பதால் விஜய் இந்தச் சந்திப்பைத் தவிர்த்ததாக தகவல்கள் சொல்கின்றன.
சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை விஜய் சந்திக்க வேண்டாம் என அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
விஜய் மவுனம் கலைத்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.
– பாப்பாங்குளம் பாரதி.