ஒன்றான அதிமுக… விலகிய சி.வி.சண்முகம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக 172 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

தொடர் தோல்விகளால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்டு, சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்எல்ஏக்கள் ஒரு அணியாக செயல்பட்டு வந்தனர்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த எம்எல்ஏக்கள் மீது கட்சி தடை தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், சி.வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்.

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகுக் கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!

இனி நமக்குள் பிரிவில்லை.. இந்த எஃகுக் கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.

நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலைக் கொடி பறப்பது மட்டுமே!” என பதிவிட்டுள்ளது.

இதனிடையே, நேற்று (மே 27) எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர்.

பின்னர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட இருதரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிமுக கொறடாவாகவும் நியமிக்க கோரி கடிதம் வழங்கினர்.

மேலும், கொறடா விவகாரம் தொடர்பாக இருதரப்பும் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கிய கடிதத்தையும் திரும்பப் பெற்றனர்.

ஆனால், இந்த நிகழ்வுகளில் எஸ்.பி. வேலுமணி தரப்பின் முக்கிய முகமாக இருந்த சி.வி. சண்முகம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like