அஞ்சலி: ரமேஷ் பிரேதன்
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் எழுத்துலகில் தனித்துவமிக்கவர். அவர் மறைந்த செய்தி எழுத்தாளர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.
எழுத்தாளர்கள் சிலர் அஞ்சலியை கட்டுரையின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் முகநூல் மூலம் தெரிவித்திருந்தனர். அந்த அஞ்சலிகளில் சில….
ரமேஷ் பிரேதனின் நினைவாக….
எங்கே இருக்கிறாய்?
இறந்த காலத்திலிருந்து நிகழ்காலம்வரை அவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
என்னிடமிருந்துத் தப்பித்து வரலாற்றில் எங்கோ ஓரிடத்தில் பதுங்கிக் கொண்டிருக்கிறான்.
அவனால் என்னைச் சுமக்கமுடியவில்லை.
காதல் என்னும் உணர்வு, பருப்பொருளைவிட கனமானது, அதை இறப்பின் எல்லைவரை சுமந்துச் செல்ல இயலாதபோது அதனிடமிருந்து விலகிப் பதுங்கிக் காலத்திலிருந்துத் தொலைவதே எளிய வழி.
பெரும் பாறை ஒன்று கிழக்குக் கடலில் படகு நிலைக்குமிடத்தில் மூழ்காமல் கிடக்கிறது. முதுகில் சுமந்துவந்து கடலில் போட்டவன் அதில் எனது பெயரைச் செதுக்கியிருக்கிறான்.
என் காதல் அத்தனைக் கனமாவெனக் கலங்கினேன். சுமக்க முடியாத பாரத்தை விரும்பிச் சுமப்பதை நான் ஏற்பதில்லை.
அன்பின் நிமித்தம் உருவாகும் வல்லாதிக்கம் அறம் வழுவி வன்முறையில் முடியும்; அதைத் தவிர்க்கவே கைக்குலுக்கி முத்தமிட்டுப் பிரிய காலத்தில் முன்னும் பின்னும் பயணித்து அவனைத் தேடுகிறேன்.
எனக்குத் தெரியும்; என்னை இச்சிப்பது ஓர் ஆணுக்குத் தற்காலிக விழைவாகத்தான் இருக்கமுடியும்.
கண்ணில் தூசு விழுந்து உறுத்திக்கொண்டிருப்பதைப்போல நிர்வாணம் செய்யப்பட்டு எனது உடம்பில் புதைக்கப்பட்ட ஆண்குறி, என்னை இணையும்போது அவனை ஊடாக நுழைந்து அறுத்துக்கொண்டேயிருந்திருக்கும்.
உடம்பைக் கடந்த காதல் என்பதைச் சொல்லிப்பார்க்கக் கவித்துவமாக இருக்கும்; ஆனால், பழகப்பழக அலுத்துவிடும்.
எதிர் பாலுறவில் உறுத்தலில்லாமல் அமைவதே முயற்கொம்பாகும்போது பால் பிறழ்ன்ற உடம்புடன் கொள்ளும் உறவில் உயிர்க் கொல்லும் திருகல் உண்டாவது இயல்பே.
பேசிப் பிரிவதில் மன அழுத்தம் விலகும். அவனுடன் பேசிப் பிரியத்தான் காலவெளியில் பைத்தியம்போலத் தேடித் திரிந்து, நிலவெளியில் மனித நடமாட்டமில்லாத ஊருக்கு வெளியே தனித்திருக்கிறேன்.
இதே அழுத்தம் அவனுக்குள்ளும் இருக்கும். ஒருநாள் என்னைத் தேடிவருவான். அவன் என்னை எதிர்கொள்ளும் நாளில், நான் இந்த உடம்பைக் கிழித்து எறிந்துவிட்டு அவனால் அடையாளம் காணமுடியாத வேறொன்றை உடுத்தியிருப்பேன்.
புற அடையாளம் குழம்பி என்னை மோப்பமுற்று பின்தொடர்வான். எனது வழி கடலுக்குச் செல்லும். மோதும் அலைநடுவே மூழ்காமலிருக்கும், அவன் தூக்கிச் சுமந்து கைவிட்டப் பாறைமேல் அமர்வேன்.
எனது அடையாளம் உறுதிபட நெருங்கிவந்து காலடியில் நிற்கும் அவனை அலையில் அமுக்கிக் கொல்லலாம், தாவிக் கட்டிக்கொண்டு கதறியழலாம், என்னுடன் சேர்ந்து வாழ இனி இது உனக்குத் தேவையில்லை எனச் சொல்லியபடி
குறுங்கத்தியால் குறியை வெட்டிக் கடலில் எறியலாம், நான் அவளில்லை எனக்கூறி அவனை விரட்டியடிக்கலாம், கொலைக்கும் தற்கொலைக்கும் நடுவில் அவனை நிறுத்திப் பைத்தியமாக்கலாம்.
காலமெல்லாம் உன்னுடன் கண்ணாமூச்சி விளையாட ஆசைப்படுகிறேன். இந்தப் பரந்த நிலத்தில் ஐந்திணைகளிலும் ஐம்புலன்களைப் பதுக்கி உன்னுடன் ஆடும் விளையாட்டில், மிச்சக் காலத்தையும் என்னைக் கண்டுபிடிப்பதிலேயே நீ செலவிடவேண்டும்.
கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் என்னைக் கண்டடையும் எத்தனமே உன்னை ஆட்கொள்ள வேண்டும்.
இறுதிவரை என்னைத் தீண்டமுடியாதப் பரிதவிப்பில் நீ வெம்பி வெம்பி இறப்பதை நான் ஒளிந்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்ற அறிதலோடு உனது உயிர்ப் பிரிவதை என்னுள் வாங்கவேண்டும். தோழா, நீ எங்கே இருக்கிறாய்?
அ. ராமசாமி
****
ரமேஷ் உடன் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக பழக்கம் என்றாலும், கடந்த பத்து வருடங்களாக மாதம் ஒருமுறை தொலைபேசியில் உரையாடுவோம். பல உரையாடல்கள். அவ்வபோது பாண்டி செல்லும்போது ரமேஷையை சந்திப்பது வழக்கம். மிகச்சிறந்த புனைவெழுத்தாளர்.
அவர் எழுதிய நல்ல பாம்பு, ஐந்தவித்தான் நாவல்களை சிலாகித்து உரையாடியது நினைவுக்கு வருகிறது. பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் இன்னும் இதர உடல் பிரச்சினைகளால் பத்து வருடங்களுக்கு மேலாக 10 X 10 அடி அறையில் அடைப்பட்டுப்போனார்.
ஏகப்பட்ட மருத்துவ சிகிச்சை. வருமானம் இல்லை. நெருங்கியவர்களும் அவரை விட்டு விலகிவிட்டனர். பல நண்பர்கள் உதவி புரிந்தார்கள். படுக்கையிலிருந்து எழ முடியாது. கழிவறைக்கும் செல்ல முடியாது.
படுக்கையில் உட்காருவதற்கும், புரண்டு படுப்பதற்கும் பிறர் உதவி தேவை. அவர் அனுபவித்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பல முறை அவர் கதறி அழுதது நிலைகுலயவைக்கிறது.
“வானம், நிலா, சூரியன், பறவை, மரம்,செடிகளை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன” என பலமுறை புலம்பினார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு இரண்டு நாள் முன் என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார்.
‘விஷ்ணுபுரம் விருது’ வழங்கப்படுவதை ஒட்டி, அவரை பலவாறு தூற்றுகிறார்கள் என மனம் நொந்து வருந்தி பேசினார்.
‘சில லட்சங்கள் வரும், மருத்துவ சிகிச்சைக்காக அதைக்கொண்டு இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ முடியும்’ என பரிதாபமாக பேசினார்.
‘தாராளமாக பெற்றுக்கொள்ளுங்கள். அத்தகைய நபர்களை சட்டை செய்ய வேண்டாம். இதிலெல்லாம் அரசியல் பார்ப்பது வக்கிரம்’ என அவரை சமாதனப்படுத்தினேன்.
உரையாடலை முடிக்கும்போது ‘விருது பெறுவதற்காக என்னை கோவைக்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருக்கிறார்கள். நான் வானத்தை பார்க்கப்போகிறேன்’ என குழந்தையின் குதூகூலத்துடன் பேச்சை முடித்தார்.
அதற்குப்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்து, பாண்டி நண்பர் விசாகனை தொடர்பு கொண்டேன்.
விசாகனும், பிரேமாவும் (அவருக்கு பணிவிடை செய்யும் பெண்ணை தங்கை என்றே அழைப்பார்) இறுதி வரையில் அவரை காப்பாற்றியவர்கள். இன்னும் பல நண்பர்கள் உதவியிருக்கலாம்.
பிரேமா அவருக்கு உணவு ஊட்டுவது முதற்கொண்டு ஒரு கைக்குழந்தைப்போல் பார்த்துக் கொண்டவர். விசாகன் நேற்றே என்னிடம் தகவல் சொல்லி ‘இறுதிக் கட்டம்’ நெருங்கிவிட்டது என்றார்.
வாசுதேவன்
**************
என் பிறந்த மண் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட இளம் எழுத்தாளர்களாக நான் பார்த்து ரசித்த ரமேஷ், பிரேம் ஆகியோர் தற்காலத் தமிழின் முக்கிய இலக்கிய சக்திகளாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஒரு மூத்தவன் என்ற வகையில் மகிழ்ந்து நின்றேன்.
Ramesh Predan உடல் நலம் கெட்டு, படுத்த படுக்கையான பிறகும் “எழுதுகிறேன் அதனால் இருக்கிறேன்” என்ற அவரது ஒவ்வொரு எழுத்தையும் படித்த போது அதன் சிந்தனை ஜூவாலையின் வெளிச்சம் பார்த்து பெருமிதப்பட்டேன்.
இன்றைக்கு என்னை விட இளம் எழுத்துக் கலைஞனை, மரணத்தின் வாயில் வாரிக் கொடுத்து விட்டு, நேரில் அஞ்சலி செலுத்தக் கூட முடியாமல் அயர்லாந்து நாட்டில் நிற்கிறேன்.
ஒருமுறை புதுச்சேரியின் இலக்கிய செயல்பாட்டாளர்கள் Pns Pandian, Balasubramanian Munisamy, சீனு தமிழ்மணி, பேராசிரியர் ரவிக்குமார், விசாகன், போன்றவர்கள் ஒன்று கூடி ரமேஷ் பிரேதனுக்கு என்னை முன்வைத்து விருது அளிக்க வேண்டும் என்று அழைத்தபோது என் உடல்நிலை சரியில்லாத போதும், கவிஞர் வசந்தகுமாரனுடன் புதுச்சேரியில் ரமேஷ் பிரேதன் வீட்டுக்குச் சென்று விருது அளித்த காட்சி நினைவுக்கு வருகிறது.
அப்போது அவர் என்னைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இன்னும் காதில் எதிரொலிக்கின்றன.
தமிழ் மண்ணின் பாரம்பரிய ஞானத்தையும், உலக இலக்கியவாதிகளின் சிந்தனைப் போக்குகளையும் உள்வாங்கி,
சுய சிந்தனையோடு கூடிய விமர்சனப் பார்வையோடும் படைப்பு சக்தியோடும் ரமேஷ் பிரேதன் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் – சாதி மத குழு மாச்சாரியங்களைக் கடந்த நிலையில் – வாசகர்களின் மனதில் உயர்ந்த விவாதங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இந்திரன்
******
நான் தோழர் ரமேஷ் பிரேதன் அவர்கள் குறித்து தெரிந்துகொண்டதும் அபோதுதான் வெளிவந்திருந்த அவரின் நாவலான “நல்ல பாம்பு நீல அணங்கின் கதை” வாசித்திருந்ததும் ஏறக்குறைய சமகாலத்தில் நடந்திருந்தது.
அதுவரையில் நான் அப்படியான ஒரு எழுத்தை வாசித்ததில்லை. அதிர்வும் பித்துமாக பாதிக்கப்பட்டு அவரின் எழுத்தில் கள்வெறி கொண்டேன்.
அவரிடம் தொடர்ந்து அலைபேசியும் கடந்த நான்கு ஆண்டுகளாக புதுவை செல்லும்போதெல்லாம் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டும் அவரது இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து வருவேன்.
ஒருமுறை தோழர் செருகுடி செந்தில் அவர்களுடனும் ஒருமுறை தோழர் கோ. கலியமூர்த்தி அவர்களுடனும் கூட சென்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த வாரம் சென்று சந்திக்கலாம் என்றிருந்தேன்
கோ. பாரதி மோகன்
*************
அவன் பெயர் சொல். வெறும் சொல்லாகப் போய் இருப்போம் ரமேஷ்.
கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்புகள் என மொழியின் அத்தனை தளங்களிலும் களமாடியவர் ரமேஷ் பிரேதன். மிகுந்த துயரடைகிறோம்.
கனிமொழி ஜி
******
ரமேஷ் மரணம் குறித்து பல நண்பர்களும் பதிவிட்டுக்கொண்டு இருக்கின்றனர். சில மணி நேரங்களுக்கு முன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக முகநூல் வந்தபோது தான் அறிந்தேன் பிரேதனின் பயணம் குறித்து.என்ன செய்வது? எனக்கு ஒரு வயது இளையவன் ரமேஷ்.
எங்களுக்குள் அத்தனை அன்பான உறவு இருந்தது. தன் உடலை கொண்டாடிய கவிஞன். அதற்கு சாட்சியாக இருக்கிறது உயிர் எழுத்து இதழில் நான் வெளியிட்ட ரமேஷ் பிரேதனின் கவிதை.நண்பா பிரேதா, கவலைப் படாதே. நான் விரைவில் வருகிறேன்.
சுதீர் செந்தில்
************
மிக சமீபத்தில் தான் தோழரை பற்றிய ஒரு பதிவிற்கு பின்னூட்டம் இட்டிருந்தேன்.
ஒரு அரிதான மொழியாளுமை கொண்ட ஒரு அற்புதமான படைப்பாளி.
மிக அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நல்லது அமைதி அடைந்தார்.
அனைத்து துன்பங்களிலிருந்தும் அனைத்திலிருந்தும் அமைதி அடைவது என்பது ஒரு ஆளுமைக்கு நியாயமானதுதான்.
கடைசிவரையிலும் படைப்பு மனநிலையிலேயே இருந்த அந்த அரிதான பண்பை வாய்க்கப் பெற்றிருந்த மொழி ஆளுமைக்கு நம் அஞ்சலியை செலுத்துகிறோம்
கரன் கார்க்கி
*********
கவிஞரும், எழுத்தாளருமான என் நண்பர் ரமேஷ் பிரேதன் அவர்களின் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான குரலாகக் கவிதை, நாவல், சிறுகதைத் தளங்களில் பின் நவீனத்துவத்தின் தாக்கத்தினை ஆழமாகப் பதிவு செய்தவர்.
வழமையான சட்டக கங்களுக்குள் படைப்பினை அடக்கிவிடாமல் பரீட்சார்த்த முயற்சிகளில் முன் நின்றவர். பாண்டிச்சேரி பயணங்கள் இனி அவரற்ற வெறுமையானவையே.
அவரின் படைப்புகளின் வழியே அதிக அளவிலான வாசகர்களை ஈர்த்த அவரின் தனித்த இலக்கியப் பயணத்தில் சில பொழுதுகளே அவருடனான என் சந்திப்பு.
ஆனால் என்றும் அழியாத நினைவுகளைத் தாங்கியவை.அவரை இழந்து வாடும் நண்பர்கள், இலக்கிய உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல சொல்லற்ற ஒருத்தியாய்…
தமிழச்சி தங்கபாண்டியன்
***********
எழுத்தாளர் ரமேஷ் பிரேம் அவர்கள் எழுதிய தொகுப்புகள் மூலம் அறிமுகம். இந்நிலையில் ரமேஷ் படைப்புலகம் என்னும் கருத்தரங்கு நடத்துவதற்காகவும் தொகுப்பு வெளியிடுவதற்காகவும் ரமேஷ் பிரேம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் கோரியிருந்தார் புதுச்சேரியைச் சேர்ந்த கவிஞர் இளங்கவி அருள்.
ரமேஷ் பிரேம் எழுதிய பேரழகிகளின் தேசம் என்னும் கவிதைத் தொகுப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன்.
ஒருமுறை விருது வாங்குவதற்காக புதுச்சேரி சென்றிருந்தபோது கவிஞர் இளங்கவி அருள் அவர்கள் ரமேஷ் பிரேதனை சந்திக்க அழைத்துச் சென்றார்.
பேரழகிகளின் தேசம் குறித்த கட்டுரை எழுதிய விவரத்தை அவரிடம் தெரிவித்து அறிமுகப்படுத்தினார். அன்புடன் வரவேற்ற ரமேஷ் பிரேதனுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடை பெற்றோம்.
திருவனம் என்னும் திருநங்கையர் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிற்காக அவருடைய முன்பொரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டேன். மிகவும் பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தார்.
இலக்கியத்திற்கு அவரிடமிருந்து இன்னும் ஏராளமான படைப்புகள் கிடைத்திருக்கும். அவரின் இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத ஒன்றே. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும். என் அஞ்சலிகள்.
பொன். குமார்