செய்திக்கிடையில் விளம்பரங்களா; விளம்பரங்களுக்கு இடையில் செய்தியா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

அண்மையில் தமிழக அரசியல் பற்றிய சூடு பறக்கும் விவாதங்களும் இடைவிடாத “பிரேக்கிங் நியூஸ்களும்” வெளிவந்து கொண்டிருந்தபோது, தெரிந்த நண்பர்களின் வீட்டிற்குப் போயிருந்தேன்.

ஹாலில் நண்பரின் தந்தை அமர்ந்து தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கூடுதலான ஒலி அளவு வைத்திருந்தார்.

சட்டென்று செய்திகளுக்கிடையில், அதிக சத்தத்துடன் விளம்பரங்கள் வெளிவந்தன.

அந்த விளம்பர இரைச்சலைக் கேட்டதும், தன் கையிலிருந்த ரிமோட்டை வைத்து, அடுத்த சேனலுக்கு மாற்றினார்.

அவருடைய நேரம் அதிலும் அதிக இரைச்சலான விளம்பரங்களே வெளிவந்து கொண்டிருந்தன.

பார்த்துக் கொண்டிருந்தவர் தொலைக்காட்சியை பார்ப்பதிலேயே வெறுப்படைந்து, எங்களிடம் இப்படிச் சொன்னார்.

முன்னாள் அரசு அதிகாரியான அவர் நிதானத்துடன்தான் தனது பேச்சை ஆரம்பித்தார்.

“இப்பப் பாருங்க டிவியில், ஒரு செய்தியைப் பார்ப்பதற்குள் எத்தனை விளம்பரங்களைப் பார்த்து சகிச்சுக்கிற வேண்டியிருக்கு.

செய்தியில் வாசிக்கிறபோது ஒலி அளவு ஒரு விதத்திலும், விளம்பரங்கள் வருகிறபோது ஒலி அளவு கூடி காது தாங்க முடியாத அளவுக்கு இரைச்சலாகி விடுகிறது.

எந்த ஒரு தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் தேவைதான், விளம்பரங்களின் மூலமாக கிடைக்கக்கூடிய வருமானம்தான் அந்தத் தொலைக்காட்சியை இயங்க வைக்கின்றன.

டி.ஆர்.பி. ரேட்டிங் கூடினால்தான், விளம்பரங்களும் அதிகமாக வரும். ஒரு அரசு அதிகாரியாக எனக்கு இது நன்றாகத் தெரியும்.

ஆனால், ஒவ்வொரு செய்திக்கிடையிலும், எத்தனை விளம்பரங்களைத்தான் இவர்கள் வெளியிடுவார்கள்.

ஒரு செய்திக்கும் இன்னொரு செய்திக்கும் இடையில், ரொம்பவும் சத்தமான இவ்வளவு விளம்பரங்களைப் பார்வையாளராக பார்ப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா?

அதிலும் இப்போது வரும் விளம்பரங்கள், பெரும்பாலும் அதிக சப்தம் எழுப்பும் விதத்திலேயே இருக்கின்றன.

இதே தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் எவ்வளவு மென்மையான ரசனையுடன் கூடிய விளம்பரங்கள் வெளிவந்திருக்கின்றன தெரியுமா?” என்றவர் சில நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ரசனையுடன் சொன்னார்.

“தொலைக்காட்சிகளின் தேவைக்காக அவர்கள் வேண்டுமானாலும் இவ்வளவு கூடுதலான எண்ணிக்கையில், விளம்பரங்களை வெளியிடலாம். அதற்கேற்றபடி வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம்.

ஆனால், பார்ப்பவர்களுக்கும் பொறுமை தேவைப்படுகிறது இல்லையா?

அந்தப் பொறுமையின் எல்லை மீறாமல், விளம்பர இரைச்சலை குறைத்துக் கொண்டால், எந்தச் சேனலுக்கும் தகுந்த பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.

இல்லையென்றால், இப்படி ரிமோட்டை வைத்து அழுத்தி, ஒவ்வொரு சேனலாக எங்களைப் போன்றவர்கள் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று குறுஞ்சிரிப்புடன் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த நண்பரும் அதை ஆமோதித்தார்.

செய்திகள், விளம்பரங்கள் வருவதில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், செய்திகளுக்கிடையே போக்குவரத்து காவல்துறையின் புண்ணியத்தில், பல நேரடியான சிசிடிவி காட்சிகளையும், பல விபத்துக்களையும், பல கிரிமினல் நிகழ்வுகளையும் நகைப் பறிப்பு சம்பங்களையும் நேரடியாக எந்தத் தணிக்கையும் செய்யாமல் காட்டுகிறபோது, அதைப் பார்க்கிறவர்களின் பிரசர் எகிறிப் போகாதா?

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ஒன்றில் ஒரு பெண்ணின் நகையைப் பறிக்க முயற்சித்து பைக்கில் வந்த இருவர் அந்தப் பெண்ணை தரதரவென்று பைக்குக்குப் பின்னாலேயே இழுத்துச் செல்வது போன்ற காட்சிகள் வெளியாகும்போது, அந்த உண்மைக் காட்சிகளைப் பார்ப்பவர்களின் மனம் என்னென்ன விதமான தடுமாற்றங்களையெல்லாம் சந்திக்கிறது.

அதிலும் அத்தகைய காட்சிகளையோ, விபத்துக்களையோ தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப 3-4 முறைகளாவது காட்டுகின்றன.

அதோடு, தொலைக்காட்சியில் நடக்கும் டிபேட்டுகளில், தற்போது நிலவும் அரசியல் சூட்டினால், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் ஒரே நேரத்தில் கத்துகிறார்கள். சமயங்களில் நெறியாளரும் கத்துகிறார்.

ஒரே சமயத்தில் 4 பேர் இரைச்சலாக கத்தும்போது, அந்த விவாதக் கூடமே சந்தைக் கடை மாதிரி ஆகிப்போய் விடுகிறது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பேச வந்த பேச்சாளரை சரியாக பேச விடாமல், நெறியாளரே பேசிக் கொண்டிருப்பது குறித்து கண்டித்த அரசியல் பேச்சாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட நெறியாளரை பைத்தியம் என்று சொல்லும் அளவிற்குப் போனார்.

இப்படி நடப்பதையெல்லாம் எப்படி ஆரோக்கியமான அரசியல் விவாதம் என்று எடுத்துக் கொள்ள முடியும்?

குறைந்தபட்சமாக அரசியல் நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தினால்தான், இம்மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்கவரும் பார்வையாளர்களையும், பெரும் இரைச்சலாக கத்துவதன் மூலம், மறுபடியும் ரிமோட் மூலம் அந்த நிகழ்ச்சியைவிட்டே கடந்துபோக வைத்துவிடுகிறார்கள்.

தொலைக்காட்சிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் அவசியம்தான் மறுப்பதற்கில்லை.

ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஆக்ரோசமான கூச்சலையும் விளம்பரங்களில் அதிகபட்சமான இரைச்சலுமே தொடர்ந்து வெளிவரும் என்றால், இதே தொலைக்காட்சியில், தங்களுக்கான பார்வையாளர்களை எப்படித்தான் மதிப்பிடுகிறார்களோ என்று தெரியவில்லை.

நண்பரின் இத்தகைய ஆதங்கத்தைப் பற்றி தொலைக்காட்சி சேனலை நடத்துபவர்கள்தான் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.

– யூகி

You might also like